பெரியார் குறித்து அவதூறு பேச்சு |சீமானை சிறையில் போட்டிருக்க வேண்டும் - செல்லூர் ராஜூ ஆதங்கம்
செய்தியாளர்: செ.சுபாஷ்
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு மதுரை தமுக்கத்தில் உள்ள தமிழன்னை சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர், இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசிய போது....
பெரியாரை இழிவாக பேசிய சீமானை சிறையில் தள்ளியிருக்க வேண்டும்:
”தந்தை பெரியாரை இழிவாக பேசிய சீமானை ஆளும் கட்சி பிடித்து உள்ளே போட்டிருக்க வேண்டும், தந்தை பெரியார் உருவாக்கிய திராவிட கழகம் முதலமைச்சருக்கு அழுத்தம் கொடுத்து உள்ளே போட்டிருக்க வேண்டும். தந்தை பெரியார் நினைவிடத்திற்கு செல்லக்கூடிய முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார்கள். இப்போது தான் இதுவெல்லாம் நாடகம் என வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.
கோவையில் செம்மொழி மாநாடு நடத்தி தன்னை புகழ்ந்து பாட வைத்தவர் கலைஞர்:
தமிழுக்காக அறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தியுள்ளனர். தானும் நடத்த வேண்டும் என்பதற்காக கோவையில் செம்மொழி மாநாடை கலைஞர் நடத்தினார் அதில் தமிழ் அறிஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை, தனது குடும்பத்திற்கு முன்னுரிமை கொடுத்தார்கள். தன்னை பற்றி புகழ்ந்து பாடினார்கள்.
டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக திமுக குரல் கொடுக்கவில்லை:
டங்ஸ்டன் திட்டம் வரக்கூடாது என எடப்பாடி பழனிசாமி போராடினார், டங்ஸ்டன் திட்டம் வரக்கூடாது என பத்து மாதமாக முதலமைச்சர் ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை, 10 மாதங்களாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏன் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பூப்பறிக்கச் சென்றார்களா? 10 மாதங்களாக டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்காமல் முதலமைச்சரும், அமைச்சர்களும் தூங்கிக் கொண்டிருந்தார்களா?.
மக்களை ஏமாற்ற திமுக பல்வேறு வேஷங்களை போடும்:
சட்டமன்றத்தில் 2 மணி நேரமாக டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக பேசிய எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் பதிலளிக்கவில்லை, டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக மக்களும் அதிமுகவும் போராடியதை அடுத்த தான் முதலமைச்சர் விழித்துக் கொண்டு எதிர்க்கிறோம் என கூறினார். இனிவரும் ஒரு ஆண்டு முழுவதும் திமுகவின் நாடகம் தொடர்ந்து கொண்டே இருக்கும், மக்களை ஏமாற்றுவதற்காக திமுக பல்வேறு வேஷங்களை போடும்.
முதலமைச்சர் ஸ்டாலின் என்ன நாடகம் நடத்தினாலும் மக்களிடம் எடுபடாது:
2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊர் ஊராக சென்று மாய, மந்திர பெட்டிகளை வைத்துக் கொண்டு வெற்றி பெற்றார் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் அடித்து சொல்கிறேன் 2026 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வராது, முதலமைச்சர் ஸ்டாலின் என்ன நாடகம் நடத்தினாலும் மக்களிடம் எடுபடாது. தமிழ்நாட்டு மக்கள் மிக விழிப்போடு உள்ளனர், திமுகவை நம்பி செல்லும் கூட்டணி கட்சிகள் மக்கள் எதிர்ப்பை பெற்று ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது.
வேங்கைவயல் விவகாரத்தில் திமுகவினர் ஈடுபட்டு இருப்பார்களோ என்ற சந்தேகம் வருகிறது:
திமுகவை நேற்று வரை ஆதரித்த கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என பேசுகிறது, வேங்கைவயல் விவகாரத்தில் திமுகவினரே ஈடுபட்டு இருப்பார்களோ என சந்தேகம் வருகிறது. அதனை மூடி மறைக்கவே அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்று செல்லூர் ராஜூ கூறினார்.