”முதல்வர் செய்தது துரோகம்.. மறுபரிசீலனை செய்யாவிட்டால் போராட்டம்” - சேலம் மாவட்ட விவசாயி சங்கம்
தமிழக அரசு அறிவித்த பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தில் குறு விவசாயிகளுக்கு 50 ஆயிரம் வரை முழு தள்ளுபடி, சிறு விவசாயிகளுக்கு 50 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டதிலும், ஒரு லட்சம் கடனுக்கு 5 ஆயிரம் தள்ளுபடி போன்ற படிநிலை முறையிலும் சேலம் மாவட்ட விவசாயிகள் சங்கம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. தேர்தல் வாக்குறுதியை மீறிய துரோகம் என குற்றம் சாட்டி, திட்டத்தை மறுபரிசீலனை செய்யாவிட்டால் போராட்டம் நடத்த எச்சரித்துள்ளது.
விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி சார்ந்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், குறு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரையிலான கடன் தொகை முழுமையாக (100%) தள்ளுபடி செய்யப்படும் எனவும் சிறு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரையிலான கடன் தொகையில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் கடன் தொகை அதிகரிக்க அதிகரிக்க தள்ளுபடி செய்யப்படும் தொகை படிப்படியாகக் குறைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ரூ.1 லட்சத்திற்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ.5,000 மட்டுமே தள்ளுபடி செய்யப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 14,22,555 விவசாயிகள் பயனடைவார்கள் என்றும், இதனால் அரசுக்கு ரூ.2,044.46 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தசூழலில் முதல்வரின் இந்த அறிவிப்புக்கு விவசாயிகள் சங்கம் ஏமாற்றம் தெரிவித்துள்ளது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும் என்றும், முதல்வரின் இந்த அறிவிப்பு மறுபரிசீலனை செய்யப்படவில்லை என்றால் போராட்டம் நடைபெறும் என்றும் விவசாயிகள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் செய்தது துரோகம்..
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை நேற்று வெளியிட்ட நிலையில், தேர்தல் வாக்குறுதிபடி பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படாத காரணத்தால் விவசாயிகள் இந்த அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் பெரியண்ணன் இதுகுறித்து கூறுகையில், பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் துரோகம் செய்திருக்கிறார். முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் பயிர்க்கடன் தள்ளுபடியை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பயிர்க்கடன் தள்ளுபடியை மறுபரிசீலனை செய்யவில்லை என்றால் அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியிருக்கும் என்று தெரிவித்தார்.

