பயிர்க்கடன் தள்ளுபடி: விவசாயிகள் ஏமாற்றம்.. முழு கடனையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்!
புதிய திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்திற்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ.5,000 மட்டுமே தள்ளுபடி வழங்கப்படுவது உள்ளிட்ட படிநிலை தள்ளுபடி முறைக்கு விவசாயிகள் சங்கம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. தேர்தல் கால வாக்குறுதியை நினைவூட்டிய அவர்கள், 5 ஏக்கருக்கு உட்பட்ட விவசாயிகள் பெற்றுள்ள கூட்டுறவு பயிர்க்கடன்கள் அனைத்தையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
தலைமை செயலகத்தில் நேற்று தமிழ்நாடு முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத், கூட்டுறவு துறை அமைச்சர் வி. காந்திராஜ், நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சி துறை அமைச்சர் என். மரிய வில்சன் ஆகியோருடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், குறு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரையிலான கடன் தொகை முழுமையாக (100%) தள்ளுபடி செய்யப்படும் எனவும் சிறு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரையிலான கடன் தொகையில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் கடன் தொகை அதிகரிக்க அதிகரிக்க தள்ளுபடி செய்யப்படும் தொகை படிப்படியாகக் குறைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ரூ.1 லட்சத்திற்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ.5,000 மட்டுமே தள்ளுபடி செய்யப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 14,22,555 விவசாயிகள் பயனடைவார்கள் என்றும், இதனால் அரசுக்கு ரூ.2,044.46 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தசூழலில் முதல்வரின் இந்த அறிவிப்புக்கு விவசாயிகள் சங்கம் ஏமாற்றம் தெரிவித்துள்ளது.
விவசாயிகள் ஏமாற்றம்..
தவெக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு மிகுந்த ஏமாற்றத்தை தருவதாக விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலர் சாமி நடராஜன் வெளியிட்ட அறிக்கையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பயிர்க்கடன் தள்ளுபடி, தேர்தல் காலத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிக்கு முரணாக உள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே, தவெக அளித்த தேர்தல்வாக்குறுதியின்படி, 5 ஏக்கருக்கு உட்பட்டவிவசாயிகள் பெற்றுள்ள கூட்டுறவு பயிர்க்கடன் முழுவதையும் தள்ளுபடிசெய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

