’அதிமுக அன்புமணியுடன் கூட்டணி பேசியது செல்லாது.. அது நீதிமன்ற அவமதிப்பு’ - ராமதாஸ்
2026 சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு தமிழக அரசியலில் பரபரப்பு நிலவுகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணியின் அதிமுக கூட்டணி பேச்சு செல்லாது என கூறினார். பாமக, ராமதாஸால் உருவாக்கப்பட்ட கட்சி, அன்புமணிக்கு தலைமை பண்பு இல்லை எனவும், அவரின் துரோகத்தை பொதுமக்கள் புரிந்துகொண்டதாகவும் தெரிவித்தார்.
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான சூழல் நிலவிவருகிறது. யார் யாரிடம் கூட்டணிக்கு செல்வார்கள், சில முக்கியமான கூட்டணிகள் பிரிவதற்கு வாய்ப்புள்ளதா, வெற்றியை வசப்படுத்த ஆளும் திமுகவும், எதிர்கட்சியான அதிமுகவும் என்ன செய்யப்போகின்றன, தேர்தல் வெற்றிக்கூட்டணியாக என்ன இருக்கப்போகின்றது என பல கேள்விகளுகான விடைகளை சட்டமன்ற தேர்தல் தேடிக்கொண்டிருக்கிறது..
இந்தசூழலில் எதிர்கட்சியான அதிமுக, பாஜக உடன் கூட்டணி என்பதை ஏற்கனவே உறுதிசெய்துவிட்ட நிலையில், நேற்று அன்புமணி தலைமையிலான பாமக, அதிமுகவுடன் இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பாமகவின் கூட்டணி என்பது என் தலைமையில் நடப்பது தான் அதிகாரம் சார்ந்தது, அன்புமணிக்கு கூட்டணி பேச தகுதியில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்கிடம் பேசியுள்ளார்.
அன்புமணி கூட்டணி பேசியது செல்லாது..
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், பாமக நான் உருவாக்கியக் கட்சி. இதனை யாரும் உரிமை கொண்டாட முடியாது. நான் செய்த சத்தியத்தை மீறி அவனை கட்சியில் சேர்த்து மத்திய மந்திரியாக்கினேன். அவன் எனக்கே வேட்டு வைப்பான் என தெரியாது. பின்னர் அவனை கட்சி நிர்வாகிகளிடம் பேசி கட்சியை விட்டு நீக்கிய பின் என்னை விமர்சிக்க ஒரு குழுவை வைத்துள்ளார். இப்படி ஒரு நிலை தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ளது. என்னிடமிருந்து கட்சியை பறிக்க முயன்றார். அன்புமணி பாமகவில் இல்லை. பாமக ராமதாஸால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி. வியர்வை, ரத்தம் சிந்தி நான் உருவாக்கிய கட்சி. பாமக என்பது தனி ஒருவர் தொடங்கிய கட்சி.
கட்சித்தலைவர் பதவியை நானே ஏற்க காரணம் அன்புமணிக்கு தலைமை பண்பு இல்லை. பாமகவை பொறுத்தவரை தொண்டர்கள் உள்ளனர். அவரிடம் சில நபர்கள் பணத்திற்காக சென்றுள்ளார்கள். அன்புமணியின் துரோகத்தை கட்சியினரும், பொதுமக்களும் புரிந்து கொண்டார்கள். அன்புமணி யாரை நிறுத்தினாலும் தந்தைக்கு துரோகம் செய்த அவருக்கு யாரும் ஓட்டுபோடமாட்டார்கள். அன்புமணி வேண்டுமென்றால் சிவில் நீதிமன்றத்திற்கு செல்லலாம். நேற்று நடந்த கூத்து நீதிமன்ற அவமதிப்பாகும். நான் சேரும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். நேற்று நடந்தது நாடகம். இதை பார்த்தவர்கள் ஏன் தந்தைக்கு எதிராக நடந்து கொள்கிறார் என பேசுகின்றனர். மீண்டும் மீண்டும் சொல்கிறேன், நாம் யாரோடு செல்கிறோமோ அக்கட்சிதான் ஆட்சி அமைக்கும் என்று அவர் கூறினார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் பேசியது, அதிமுக அன்புமணியுடன் பேசியது செல்லாது. அன்புமணியே மோசடி பேர்வழி. அன்புமணி உள்ள கூட்டணி குறித்தும் மற்ற கட்சிகளிடம் கூட்டணி பேச கட்சி நிர்வாகிகளிடம் கலந்து பேசி பொங்கலுக்குள் அதாவது 2 நாட்களில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். எடப்பாடி பழனிசாமி எந்த வகையிலும் என்னிடம் தொடர்பு கொள்ளவில்லை என்று கூறினார்.

