அதிமுக, பாஜக கூட்டணியில் பாமக.. பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன? முழு விவரம்!
வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பாஜக, அதிமுகவுடன் தற்போது பாமகவும் இணைந்துள்ளது. இதன் பின்னணியில் நிகழ்ந்த என்ன?..
மேலும் எந்தெந்த கட்சிகள் தேசியஜனநாயகக் கூட்டணியில்இணையும்..? பார்க்கலாம்....
கூட்டணியை உறுதிசெய்த அதிமுக, பாமக..
திமுக ஆட்சியை எப்படியேனும் அகற்றியே தீர வேண்டும் என, மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்தார் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி. பாஜகவும் இதே நோக்கத்துடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலிமையாக கட்டமைக்க முயற்சிகள் எடுத்து வந்தது. இப்படி அதிமுகவும் பாஜகவும் மேற்கொண்ட கூட்டு முயற்சிகளின் எதிரொலியாக, எடப்பாடி பழனிசாமியை திடீரென சந்தித்தார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். அதேவேகத்தில், அதிமுக, பாஜக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திப்பதாக அன்புமணி ராமதாஸ் அறிவித்தார். தொண்டர்களின் விருப்பப்படியே அதிமுக கூட்டணியில் இணைந்ததாகவும், மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே தங்களது லட்சியம் எனவும் அவர் சூளுரைத்தார்.
வரும் தேர்தலில் 25 தொகுதிகளும், ஒருராஜ்யசபா சீட்டும் கேட்க அன்புமணி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், பாமக இரு தரப்பாக பிளவுப்பட்டுள்ளதால், அன்புமணிக்கு 17அல்லது 18 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்ய அதிமுக தரப்பு முடிவுசெய்துள்ளதாம். அதேபோல், ஒரு ராஜ்யசபா சீட் உறுதி என்றும், அது அன்புமணி அல்லது அவரது மனைவி செளமியா இருவரில் ஒருவருக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இதனிடையே, பாமக தங்கள் கூட்டணியில் இணைந்ததை அதிகாரப்பூர்வமாக அறிவித்த அதிமுகபொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, தொகுதி பங்கீடு பின்னர் அறிவிக்கப்படும் என இந்த யூகங்களுக்கெல்லாம் தற்காலிக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ராமதாஸ் கூட்டணிக்கு எதிர்ப்பு..
இன்னொரு பக்கம், அன்புமணியுடன் கூட்டணி பேச்சு நடத்துவது சட்டவிரோதம் என சாடியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், கட்சி விதிப்படி தன்னுடன் மட்டுமே கூட்டணி குறித்து பேச வேண்டும் என அதிரடியாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதனையடுத்து, அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பாமக நிறுவனர் ராமதாஸை சந்திக்கவிருப்பதாகவும், பாமகவின் இருதரப்பையும் கூட்டணியில் சேர்க்க அதிமுக முயற்சி எடுத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் இருவரையும் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் இணைப்பதற்கான முயற்சிகளும் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் நடந்த அமமுக பொதுக்குழுவில் பேசிய டிடிவி தினகரன், எதிரியை வீழ்த்த துரோகிகளுடன் கூட்டணி வைக்கலாம், நமக்கு லட்சியம் தான் முக்கியம் என்பதாக பேசியிருந்தார். அதனடிப்படையில், திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்கில் உறுதியாக இருக்கும் ஓ.பன்னீர்செல்வமும், டிடிவி தினகரனும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதையே விரும்புவதாக தெரிகிறது. இதற்கு எடப்பாடிபழனிசாமியும் சம்மதித்துவிட்டதால், விரைவில் இதுகுறித்தும் நல்ல செய்தி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பரபரப்பான சூழலில், எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் இன்னும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதாவது, டெல்லி பயணத்தில் மத்தியஉள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி, ஆளுநரை தொடர்ந்து திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை அமித் ஷாவிடமும் ஒப்படைக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒருபக்கம் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்தும் அமித் ஷா, இன்னொரு பக்கம் ஊழல் அஸ்திரத்தை கையில் எடுத்து திமுகவை பலவீனப்படுத்தும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளார். இதனிடையே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெகவையும் கொண்டுவர வேண்டும் என்ற பாஜகவின் திட்டம் பலிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என்பதில் தவெக உறுதியாக இருப்பதால், இது கைகூடாது என்றே தெரிகிறது.

