OPS, டிடிவி தினகரன் உடன் கூட்டணியா..? இருவேறு பதில்களை சொன்ன எடப்பாடி பழனிசாமி!
அதிமுக, பாஜக கூட்டணியில் பாமக இணைந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசினார். சசிகலா, ஒபிஎஸ், டிடிவி தினகரன் உடனான கூட்டணி குறித்து வெளிப்படையான கருத்துகளை வெளிப்படுத்தினார்.
திமுக ஆட்சியை அகற்றியே தீர வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் கைக்கோர்த்திருக்கும் அதிமுக மற்றும் பாஜக கட்சிகள், மேலும் கூட்டணியை வலுசேர்க்கும் வேலைகளில் ஈடுபட்டுவருகின்றன. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பாஜக அதிக முக்கியத்துவம் கொடுத்துவரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகத்தில் நடந்துவரும் முக்கியமான நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துவருகிறார்.
அதிமுகவும் பாஜகவும் மேற்கொண்டுவரும் கூட்டு முயற்சிகளின் எதிரொலியாக, அன்புமணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது. இந்தசூழலில் மேலும் பல கட்சிகளுடன் அதிமுகவும், பாஜகவும் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் டெல்லிக்கு பயணம் செய்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து திரும்பிய அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
ஒபிஎஸ், டிடிவி குறித்த கேள்வி.. இருவேறு பதிலளித்த எடப்பாடி!
டெல்லிக்கு சென்று அமித் ஷாவை சந்தித்தது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ‘மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுக்கோட்டைக்கு வந்தபோது அவரை சந்திக்க முடியாததால் டெல்லியில் சென்று சந்தித்தேன். கள்ளக்குறிச்சி, சேலத்தில் அதிமுக பொதுக்கூட்டம் இருந்ததால் அமித் ஷாவை நேரில் சந்திக்க முடியவில்லை, அதனால் டெல்லிக்கு சென்று நேரில் சந்தித்து பேசினேன். தமிழ்நாட்டு அரசியல் நிலவரம் குறித்து கலந்துபேசினோம். தமிழகத்தில் தற்போது அதிமுக மற்றும் ஜனநாயக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது, இன்னும் பல கட்சிகள் இணையவிருக்கின்றன. எங்களுடைய கூட்டணி திராவிட முன்னேற்ற கழக ஆட்சியை வீட்டுக்கும் அனுப்பும் கூட்டணியாக இருக்கும்’ என்று கூறினார்.
சசிகலா, ஒபிஎஸ் உடன் கூட்டணி என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ஊடகங்களில் இதுகுறித்து நிறைய முறை கூறிவிட்டேன், அதை மீண்டும் கிளறவேண்டாம். சசிகலா, ஒபிஎஸ் உடன் கூட்டணி வைக்க எப்போதும் வாய்ப்பில்லை. அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டோம் என அமித் ஷா ஏற்கனவே கூறிவிட்டார். தொடர்ந்து அப்படிதான் இருக்கிறது. சசிகலா, ஓ. பன்னீர்செல்வத்தை அதிமுகவில் மீண்டும் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார்.
மேலும் டிடிவி தினகரன் உடன் கூட்டணி வைக்க வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விக்கு, எதையும் வெளிப்படையாக சொல்ல முடியாது, பல்வேறு கட்சிகள் கூட்டணிக்கு வரவிருக்கின்றன. அப்படி கூட்டணி உறுதியாகும் போது நானே ஊடகத்தை அழைத்து பேசுவேன்’ என்று கூறினார். மேலும் திமுக அரசின் ஓய்வூதிய திட்டம், மக்களிடம் கனவுகளை கேட்டறியும் நடவடிக்கைகளுக்கு கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பேசினார்.

