நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய நிர்வாகி பாஜகவில் ஐக்கியம்? கோவையில் நடந்து என்ன?

“நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிவிட்டேன். பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு கேட்பதற்காக வந்தேன். இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கவே வந்தேன். நாதகவைப் பற்றி பேச வேண்டாம்” - ராஜா அம்மையப்பன்
raja ammaiyappan
raja ammaiyappanpt

மதுரையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, "மற்ற கட்சி தொண்டர்களை கஷ்டப்பட்டு அதிமுகவினர் வலை போட்டு சேர்க்கின்றனர். ஆனால் நாங்கள் தலைவர்களை இழுக்கிறோம். கோயம்புத்தூரில் முக்கிய விக்கெட் விழப்போகிறது. நாளை மாலை 5 மணிக்கு கோயம்புத்தூரில் என்ன நடக்கிறது என்று பாருங்கள்." என்று பொடி வைத்துப் பேசி இருந்தார். இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய மகளிரணி செயலாளரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசனும் இந்த தகவலை உறுதி செய்தார். 5 மணி வரை காத்திருங்கள் என்று கூறினார்.

இந்நிலையில், கோவையில் மாற்று கட்சியினர் பாஜகவில் சேரும் நிகழ்ச்சி ஒன்று இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா அம்மையப்பன் வெகுநேரம் காத்திருந்தார். 2 தினங்களுக்கு முன்பு கட்சியில் இருந்து விலகிய இவர், “கடந்த எட்டு ஆண்டுகளாக உங்களுடன் பயணித்த நான் இன்றுடன் நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறுகிறேன்.

நாம் தமிழர் கட்சியில் இரண்டு முறை சட்டமன்ற வேட்பாளர், ஒருமுறை சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் ஆக என்னை நிறுத்தி எனக்காகவும், தமிழ் தேசியத்திற்காகவும் உழைத்த எனது தம்பிகள், தங்கைகளை விட்டு கனத்த இதயத்தோடு பிரிகிறேன். உங்களுடன் நான் பயணித்த காலங்கள் எனது வாழ்வின் முக்கியமான காலமாகவும், இனிமையான வசந்த காலமாகவும் என்னி மகிழ்ச்சி கொள்கிறேன். நான் உங்களை விட்டு பிரிவது உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கலாம். வருத்தமடைய செய்யலாம். ஆனால், கட்சிக்குள் நடக்கும் சில விஷயங்களும், சாதி பிரிவினைகளும், சமூக படுகொலைகளையும் கண்டு என்னால் இதில் பயணிக்க விருப்பமில்லை.

பொதுக்குழு என்ற பெயரில் வெற்று பக்கங்களில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட தொகுதி செயலாளர்களிடம் கையெழுத்து வாங்குவது, நான் பயணிக்கும் கட்சியில் யார் செயலாளர், யார் பொருளாளர் என்பதை அறியாமலும், வெளிப்படுத்தாமலும் பயணிக்க விருப்பமில்லை. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட மாநில ஒருங்கிணைப்பாளரான எனக்கே தெரியாமல் கட்சியின் பொதுச்செயலாளர் என்று கூறப்படும் கருப்பையா என்பவர் யார்? கட்சிக்கு என்ன செய்துள்ளார்? நீங்கள் நிறுத்தியுள்ள வேட்பாளர்கள் பற்றி எல்லாம் உங்களுக்கு தெரியுமா? வேட்பாளர்கள் சிலரை தவிர பலபேரை எப்போதாவது களத்தில் பார்த்திருக்கிறீர்களா? கட்சிக்குள் சாதி இல்லாமல் செயல்பட முடியாதா? கட்சியில் அண்ணன் விருப்பப்படி செயல்பாடுகள் உள்ளதா? என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் சில நாட்களாக தவித்து வந்தேன்.

raja ammaiyappan
”சாதி பிரிவினைகள், சமூக படுகொலைகள்”-நா.த.க.வில் இருந்து விலகிய மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா அறிக்கை!

பாரதிமோகன், திருமால் செல்வன் போன்றோர் கட்சியின் பொருளாளராகவும், துணைச் செயலாளராகவும் நியமித்து இருப்பதாக கூறப்படுவது எல்லாம் உங்களுக்கு தெரியுமா? கட்சியில் அண்ணன் விருப்பப்படி செயல்பாடு உள்ளதா? அண்ணன் அருகில் உள்ள மூன்று பேரை தவிர்த்து நீங்கள் அண்ணனை சகஜமாக பார்க்க முடிகிறதா? என்பதை அறிந்துகொள்ளுங்கள். என்னதான் எனக்கு வருத்தம் இருந்தாலும், என்னை சீமான் அவர்கள் 8 ஆண்டுகளாக கண்ணியமாக நடத்தி, எனக்குரிய மரியாதையை எனக்கு கொடுத்து சிறப்பித்தமைக்கு என்றைக்கும் நன்றியுணர்வோடு இருப்பேன். தமிழ் தேசியம் ஒருநாள் வெற்றிபெறும்போது மிகுந்த மகிழ்ச்சி கொள்வேன். வாழ்க தமிழ் தேசியம். வாழ்க நாம் தமிழர் கட்சி என்று வாழ்த்தி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று நடைபெற இருந்த நிகழ்ச்சி ரத்தானது. இதனைத் தொடர்ந்து, அங்கிருந்து புறப்பட்டார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “கட்சியில் இணைந்த பிறகு பேசுகிறேன். வேறு வேலையாக இங்கு வந்தேன். ஹோட்டலில் தங்கி இருந்தேன், பிறகு பேட்டி தருகிறேன். எந்த ஏமாற்றமும் இல்லை, நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியே வந்து, வேறு கட்சியில் சேர்ந்து விட்டேன்” என்றார்.

பின்னர் விடுதியில் இருந்து வெளியே வந்த ராஜா அம்மையப்பன், அங்கு நின்று கொண்டிருந்த தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டியிடம் பூங்கொத்து கொடுத்தார். அதை பெற்றுக்கொண்ட பின்னர் ராஜா அம்மையப்பனிடம் திரும்ப கொடுத்து “Results” எனத்தெரிவித்தார் சுதாகர் ரெட்டி. இதையடுத்து குஷியான ராஜா அம்மையப்பன், செய்தியாளர்களை அழைத்து பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர் “நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியுள்ளேன். நாளை பிரதமரை சந்தித்து, இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்த உள்ளேன். அவர்கள் பிரதமரை சந்திக்க வாய்ப்பு தருவதாக கூறியுள்ளார்கள்” என தெரிவித்தார்.

நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கும் நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று ராஜா அம்மையப்பன் பிரதமரை சந்திப்பார் என்று கூறப்படுகிறது. அத்தோடு, பிரதமர் முன்னிலையில் பாஜகவில் இணைகிறாரா என்பதும் நாளையே தெரியவரும்.

raja ammaiyappan
16 வகை உணவுகள்... 20 நிமிடங்களில் சாப்பிடணும்! ஈரோட்டில் களைகட்டிய சாப்பாடு போட்டி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com