“அதிமுக பொதுச் செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்ததில்லை” - துரை கருணா!

“அதிமுக பொதுச் செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்ததில்லை” - துரை கருணா!
“அதிமுக பொதுச் செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்ததில்லை” - துரை கருணா!

பிரிந்து கிடக்கும் சக்திகள் ஒன்றிணைந்து எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட அதிமுகவை மீட்க வேண்டும் என்பதே உண்மைத் தொண்டனின் ஆசையாக இருக்கிறது என திராவிட இயக்க ஆய்வாளர் துரை கருணா தெரிவித்தார்.

விதிகளில் திருத்தம், அவசரகதியில் திடீரென நடத்தப்பட்ட உட்கட்சித் தேர்தல், ஒரே ஓட்டில் இருவர் தேர்வு, வேட்புமனு வாங்க வந்தவருக்கு அடி என நாள்தோறும் பல்வேறு விதமான சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. 

புரட்சித்தலைவர் எம்ஜிஆரால் தொடங்கப்பட்டு புரட்சித்தலைவி ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட அதிமுகவில் இப்ப என்னதான் நடக்கிறது என்று திராவிட இயக்க ஆய்வாளர் துரை கருணாவிடம் கேட்டோம்...

“புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்தில் விதி 20-இன் படி பொதுச் செயலாளரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், இதுவரை பொதுச் செயலாளரோ, ஒருங்கிணைப்பாளரோ அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது” என்று பேச ஆரம்பித்த திராவிட இயக்க ஆய்வாளர் துரைகருணாவிடம், அதிமுகவின் சட்ட விதி எண் 20 சொல்வதென்ன?

அதிமுக கட்சியின் விதி 20 (இருபதை) நீக்கிய ஜெயலலிதா, உட்கட்சித் தேர்தலை நடத்திய போது முதலில் பொதுச் செயலாளர் தேர்தல் நடக்கும். இதில், பொதுச் செயலாளராக ஜெயலலிதாவை தவிர யாரும் போட்டியிட மாட்டார்கள். அதேபோல் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஒன்றிய நகர மாவட்ட நிர்வாகிகள் 1000-த்திற்கும் மேற்பட்டோர் மனு கொடுப்பார்கள். அவரை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யாததால் அவர் ஒருமனதாக வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படுவார்.

அடிப்படை உறுப்பினர்களால் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற விதியை ஜெயலலிதாவால் மாற்றபட்டதே தவிர, அந்த விதியை நீக்கவோ திருத்தவோ யாருக்கும் அதிகாரம் இல்லை என்ற விதி 43-ஐ ஜெயலலிதா நீக்காமல் விட்டுவிட்டார். ஆனால், அந்த விதியை இப்போது ஓபிஎஸ், இபிஎஸ், நீக்கிவிட்டார்கள். என்ன காரணம் என்றால் பொதுச் செயலாளர் என்ற பொறுப்புக்கு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களாக நாங்கள் இணைந்து அந்த அதிகாரத்தை நிறைவேற்றுவோம் என தீர்மானம் கொண்டுவந்து எல்லா விதிகளையும் திருத்தும் போது கடைசியாக விதி 43-ஐ நீக்கிவிட்டார்கள்.

ஆனால், இப்போது எம்ஜிஆர் காலத்து சட்ட விதிகளின்படி இருந்த விதி 20 மற்றும் விதி 43 மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி ஒற்றை வாக்கின் மூலம் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் அடிப்படை உறுப்பினர்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற முறை வந்துள்ளது. அதேபோல் அதிக அதிகாரத்துடன் கூடிய விதி 45 உருவாக்கி இருக்கிறார்கள். 

அதிமுக செயற்குழு குறித்து உங்கள் கருத்து?

1 -ஆம் தேதி கூடிய செயற்குழுவில் விதியை திருத்தி 7 -ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அவசரகதியில் அறிவிக்கிறார்கள். அதன்படி ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இருவரும் இணைந்து மனுதாக்கல் செய்த நிலையில், இவர்கள் இருவரையும் எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை இதனால் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்க வாய்ப்புள்ளது.  

எம்ஜிஆர் காலத்தில் பொதுச் செயலாளர் தேர்தல் எப்படி நடந்தது?

அதிமுகவை பொறுத்தவரை எம்ஜிஆர் காலத்தில் பொதுச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அதன்படி ராகவானந்தம், நாவலர் நெடுஞ்செழியன், பா.உ.சண்முகம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இது பொதுக்குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு நடைமுறைக்கு வரும். புரட்சித் தலைவர் எம்ஜிஆரை கூட 1974 -இல் முதன் முறையாக பொதுக்குழு தான் தேர்ந்தெடுத்தது. 

அதிமுகவின் உட்கட்சித் தேர்தல் எப்படி நடக்கும்?

அதிமுக தொடங்கி இந்த 49 வருடத்தில் அடிப்படை உறுப்பினர்கள் ஓட்டு போட்டு யாரையுமே தேர்ந்தெடுக்கவில்லை. அதேபோல் ஜெயலலிதா காலத்தில் 1991 -இல் இருந்து உட்கட்சித் தேர்தலில் அடிப்படை உறுப்பினர்களால் கிளைச் செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 

பேரூராட்சி வார்டு செயலாளர், பேரூராட்சி செயலாளர், நகர வார்டு, நகராட்சி செயலாளர்கள், ஒன்றிய வார்டு, ஒன்றியச் செயலாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அனைவரும் ஓட்டு போட்டு மாவட்டச் செயலாளரை தேர்ந்தெடுப்பார்கள்.

இந்த அடிப்படை உறுப்பினர்களின் பிரதிநிதிகள்தான் பொதுக்குழு உறுப்பினர்களாக இருந்தனர். அதனால்தான் ஜெயலலிதா போட்டியின்றி அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்ஜிஆர், ஜெயலலிதா, ராகவானந்தம், நெடுஞ்செழியன், பா.உ.சண்முகம் ஆகியோர் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான். இதுவரை அதிமுகவில் பொதுச் செயலாளருக்கான தேர்தல் நடந்ததே இல்லை. 

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் எப்படி நடந்தது?

அதிமுகவில் பொதுச் செயலாளருக்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் என்று அறிவித்து ஜெயலலிதா காலத்து அணுகுமுறையோடு இந்த தேர்தலை நடத்தி இருக்கிறார்கள். மனு வாங்க வந்தவரை அடித்த சம்பவமும் நடைபெற்றுள்ளது. இந்த அணுகுமுறை அதிமுகவை கேள்விக்குள்ளாகியுள்ளது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

அவசரகதியில் இந்த தேர்தலை நடத்த காரணம் என்ன?

அவசரகதியில் இந்த தேர்தல் நடத்துவதற்கு முக்கிய காரணம் தேர்தல் ஆணையம் என்று சொன்னாலும் சசிகலாவின் வருகையை தடுப்பதற்குத்தான் என்று சொல்லலாம். சசிகலாவை ஏற்காத மனநிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இருக்கிறார்கள். ஆனால், கட்சி பின்னடைவை சந்திக்கும் போது பிரிந்து கிடக்கும் கட்சி ஒன்று சேர வேண்டும். சசிகலாவும் சிறைக்குச் சென்ற பிறகு கட்சிக்கு எதிரான எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. 

2016 -இல் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் என்னை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தார்களோ அந்த நம்பிகையின்படி நான் இருக்கிறேன். ஆனால், அவர்கள் தான் அந்த நம்பிக்கையை இழந்திருக்கிறார்கள் என்று சசிகலா சொல்கிறார். இது எனக்கு நியாயமாக தெரிகிறது. 

ஜெயலலிதா நினைவிடத்தில் எடுத்த உறுதிமொழி?

கட்சியை உடைக்க பகல் கனவு காண்போரின் சதியை முறியடிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் உறுதிமொழி எடுப்பதும், வரும் தேர்தல்கள் அனைத்திலும் அதிமுக வெற்றிபெற ஒன்றிணைந்து செயல்படுவோம், கரம் கோர்ப்போம் என சசிகலா உறுதிமொழி எடுத்துள்ளார். இந்த இரண்டு உறுதிமொழிகளையும் தனித்தனியாக எடுக்காமல் ஒருமித்த கருத்தோடு ஒன்றாக இணைந்து இந்த உறுதிமொழியை ஏற்றால் கட்சி பலமடையும் என்பதில் ஐயமில்லை. 

அதிமுக ஒரு தேர்தலில் தோல்வியுற்றால், அடுத்த தேர்தலில் உத்வேகத்தோடு களப்பணியாற்றி வெற்றி பெற்றதுதான் வரலாறு. இப்போது பார்த்தால் நாடாளுமன்றம், சட்டமன்றம், ஊரக உள்ளாட்சி தேர்தல் என தொடர் தோல்விகளுக்குப் பிறகு கட்சி கலகலத்து விட்டது. இதனால் அனைத்து சக்திகளையும் ஒருங்கிணைத்து எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் என்பதே அதிமுகவின் உண்மை தொண்டர்களின் ஆசையாகவும், ஆவலாகவும் இருக்கிறது” என தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com