மாநாட்டில் கைகோர்க்கும் தந்தை - மகன்? முடிவுக்கு வருகிறது பனிப்போர்.. முடிச்சுகளை அவிழ்த்த ராமதாஸ்!
பாமகவில் நீடித்து வரும் பனிப்போர், எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்விக்கு உடைத்து பேசி இருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். தந்தை பக்கம் செல்வதா அல்லது மகன் பக்கம் செல்வதா என பாமகவினர் குழப்பில் உள்ள நிலையில், பல முக்கிய விடயங்களை பேசி முடித்திருக்கிறார் ராமதாஸ். அதற்கான தேதியையும் குறித்து பேசியிருக்கும் நிலையில், நடப்பவை குறித்து விரிவாக பார்க்கலாம்.
பாமகவில் நிறுவனர் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையேயான மோதலால் தொண்டர்கள் ஆடிப்போயுள்ளனர். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தேர்தலுக்கு ஆயுத்தமாக வேண்டிய நேரத்தில், கட்சிக்குள் வெடித்த மோதலால் பாமக நிர்வாகிகள் விழிபிதுங்கி நிற்கின்றனர். 50 தொகுதிகளிலாவது வெல்ல வேண்டும் என்கிறார் நிறுவனர்.. இப்படியே போனால் யார் தலைமையில் தேர்தலை எதிர்கொள்வது என்று பாமகவினர் முணுமுணுப்பதை கேட்க முடிகிறது.
இதற்கிடையே, கட்சியின் தலைமை நிர்வாகக்குழுவில் இருந்து அன்புமணியின் பெயரை நீக்கியது, தன் பெயரை அன்புமணி பயன்படுத்தக்கூடாது என்ற ராமதாஸின் நடவடிக்கையால், கொதித்தே போயுள்ளனர் அன்புமணி ஆதரவாளர்கள்.
இந்த நிலையில்தான், பாமக நிறுவனர் ராமதாஸை நேர்காணல் செய்துள்ளது புதிய தலைமுறை. பாமக தொண்டர்கள் துவங்கி, பொதுத்தளத்தில் பாமகவை நோக்கி எழுப்பப்படும் கேள்விகள் வரை, பல விடயங்களை கேள்விகளாக தொகுத்து நடைபெற்ற இந்த நேர்காணலில் மனம் திறந்து பேசியுள்ளார் ராமதாஸ்.
தந்தை மகனுக்கு இடையேயான மோதலின் துவக்கப்புள்ளி எது என்ற கேள்விக்கு பதிலளித்தவர், இளைஞர் அணி தலைவராக முகுந்தன் அறிவிக்கப்பட்டபோதுதான் பிரச்னை துவங்கியதாகவும், தனக்கும் அன்புமணிக்கும் இடையேயான மோதலை, பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், “நான் இந்த பிரச்னையை தீர்க்கிறேன் என்று எங்கள் இருரையும் அழைத்து ஒருவர் பேசினால், அந்த கருத்து வேறுபாடு தீர்ந்துவிடுமே.. இருவருக்கும் இடையே இருப்பது தீர்க்கக்கூடிய கருத்து வேறுபாடுகள்தான்.. தீர்க்க முடியாதவை அல்ல.. இந்த கருத்து வேறுபாடு தற்காலிகமானதுதான்.. விரைவில் தீர்ந்துவிடும்” என்றும் விளக்கியுள்ளார்.
குறிப்பாக, இந்த பிரச்னை கட்சியின் 37வது ஆண்டு விழா அல்லது தனது பிறந்தநாளுக்கு முன்பாகவே முடிவுக்கு வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதோடு, பூம்புகாரில் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி நடைபெறவுள்ள வன்னியர் சங்க மகளிர் மாநாட்டுக்கு அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றவர், மாநாட்டில் அவர் பங்கேற்பார் என்றும் கூறியுள்ளார்.
இப்படியாக, பாமகவின் ஆண்டு விழா.. மருத்துவர் ராமதாஸின் பிறந்தநாள் விழா உள்ளிட்ட நிகழ்வுகள் அடுத்தடுத்து வர இருப்பதால், பிரச்னை விரைவில் தீரும் என்று எதிர்பார்க்கின்றனர் பாமக தொண்டர்கள். அதோடு, தனது தலைமையில் நடக்க இருக்கும் மகளிர் மாநாட்டில் அன்புமணி பங்கேற்பார் என்று ராமதாஸ் கூறியுள்ளதால், மாநாட்டு மேடையில் தந்தை - மகன் மீண்டும் கைகோர்ப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.