“எனது வீட்டில் ஒட்டுக்கேட்கும் கருவி இருந்தது” - பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் புறவழிச்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரால் நியமிக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் இறுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், தைலாபுரத்தில் உள்ள தனது வீட்டில் ஒட்டு கேட்டும் கருவி வைக்கப்பட்டு இருந்ததாகக் குற்றம்சாட்டியிருக்கிறார். இந்த ஒட்டுக்கேட்கும் கருவி லண்டனிலிருந்து வரவழைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள், ‘இன்ஷியலை மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்; பெயரைப் பயன்படுத்தக் கூடாது என யாருக்காக கூறினீர்கள்? தங்கள் மகனுக்காகவா?’ என கேள்வி எழுப்பியதற்கு, “ஆம்” என பதில் அளித்தார். ஏற்கனவே, அன்புமணி ராமதாஸ் அணியினர், நிறுவனர் ராமதாஸ் அணியினர் என பாமகவினர் தனித்தனியே ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுக்குழு நடத்தி வரும் நிலையில், தற்போது அவரது வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி இருந்ததாக ராமதாஸ் வைத்திருக்கும் குற்றச்சாட்டும், தனது இனிஷியலை பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்ததும் பாமக தொண்டர்களுக்கு மேலும் குழப்பத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கட்சியில் உட்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சி ஒருபுறம் நடந்துவந்தாலும், கட்சியை முழுமையாக தன்வசம் கொண்டுவரும் முயற்சிகளில் அன்புமணி ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி, பாமகவில் ராமதாசின் மூத்த மகள் ஸ்ரீகாந்திமதிக்கு கட்சி பதவி வழங்கப்படவுள்ளதாகவும், அவர் அன்புமணிக்கு போட்டியாக களமிறக்கப்பட இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.