அண்ணா பல்கலை. வளாகத்தில் பாலியல் வன்கொடுமை... எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்; விரிவடையும் விசாரணை!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போது, அங்கு வந்த மர்மநபர்கள் இருவர், நண்பரை அடித்துவிட்டு, இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.
புகாரைப் பெற்று வழக்கினைப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரி வளாகத்தில் இருக்கும் முப்பதிற்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி, யார் யார் உள்ளே வந்தார்கள்? யார் யார் வெளியே சென்றார்கள். உள்ளே வந்ததில் மர்ம நபர்கள் யார்? என்பது குறித்தெல்லாம் காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
விரிவடையும் விசாரணை
குறிப்பாக மாணவியின் நண்பர், நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த காவலாளிகள், பல்கலைக்கழக வளாகத்தில் தங்கி கட்டுமாணப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளிகளிடமும் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. விடுதிகளுக்கு தண்ணீர் கேன், காய்கறிகளை சப்ளை செய்பவர்களது விபரங்களைக் குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். விடுதி காப்பாளர்களையும் விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்த நிலையில், அவர்களது விவரங்களும் பெறப்பட்டு வருகின்றன.
மாணவியிடம் முதற்கட்ட விசாரனை முடிந்துவிட்ட நிலையில், அவருக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. இதன்பின் மீண்டும் விசாரிக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்து வருவதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஒருவர் கைதாகியுள்ள நிலையில், இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
எங்கும் பாதுகாப்பு இல்லை
இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர், இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தலைநகரின் மையத்தில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்திலேயே மாணவிக்கு இப்படியொரு கொடூரம் நிகழ்ந்திருப்பது வெட்கக்கேடானது. பெண்கள் படிப்பு மற்றும் பணியிடங்களில் கூட பாதுகாப்பாக இருக்க முடியாத அளவிற்கு சட்டம் ஒழுங்கை கெடுத்துள்ள விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்” எனத் தெரிவித்துள்ளார்.
திமுக மீதும் காவல்துறை மீதும் எந்த பயமும் இல்லை
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். “மாநிலத் தலைநகரத்தின் மையப்பகுதியில், பொறியியல் கல்வி தலைமை நிறுவன வளாகத்தின் உள்ளே, பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலை இருக்கிறது என்றால், சமூக விரோதிகளுக்கு, அரசின் மீதோ, காவல்துறையின் மீதோ எந்த பயமும் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
உடனடியாக, இந்தக் குற்றத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாநகர காவல்துறையும், காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சரும், மாணவி மீதான பாலியல் தாக்குதலுக்கு முழு பொறுப்பேற்று, பொதுமக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
பெண்கல்விக்கு பெருந்தடையாக இருக்காதா?
பாமக நிறுவனர் ராமதாஸும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். “தமிழகத்தையும், பிற மாநிலங்களையும் சேர்ந்த பெற்றோர்கள் அண்ணா பல்கலைக்கழகம் மிகவும் பாதுகாப்பானது என்ற நம்பிக்கையில்தான் தங்களின் குழந்தைகளை பல்கலைக்கழகத்திற்கு அனுப்புகிறார்கள். ஆனால், பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு இல்லை, மாணவிகளே பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர் என்றால் இனி எந்தப் பெற்றோர் தங்களின் மகள்களை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்புவார்கள். இது பெண் கல்விக்கு பெருந்தடையாக மாறிவிடாதா?” எனத் தெரிவித்துள்ளார் ராமதாஸ்.