தூத்துக்குடி: நின்றிருந்த கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்து – 3 முருக பக்தர்கள் பலி
செய்தியாளர்: மணிசங்கர்
திருப்பூர் மாவட்டம் அலங்கியம் பகுதியைச் சேர்ந்த மென் பொறியாளர் விக்னேஷ், தனது நண்பர்களான செல்வராஜ், விஜயகுமார், மகேஷ் குமார், ராஜ்குமார் ஆகியோருடன் மாலை அணிந்து விரதம் இருந்து வந்த நிலையில், நேற்றிரவு திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு காரில் சென்றுள்ளனர்.
இந்நிலையில், இன்று அதிகாலையில் தூத்துக்குடி மதுரை நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக காரை நிறுத்தி விட்டு தண்ணீர் குடித்துள்ளனர். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு சென்றுவிட்டது.
இதில், சம்பவ இடத்திலேயே செல்வராஜ், விஜயகுமார், விக்னேஷ் ஆகியோர் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மகேஷ் குமார் மற்றும் ராஜ்குமார் ஆகிய இருவரும் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த மாசார்பட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த விளாத்திகுளம் டிஎஸ்பி அசோகன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இந்த விபத்து குறித்து மாசார்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாலை அணிந்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்றவர்கள் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.