நெல்லை ஆணவக் கொலை | மகனை இழந்த வலியில் கண்ணீர் விட்டு சொன்ன தாய்.. உருக்கமாக பேசிய தந்தை!
நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கிருஷ்ணகுமாரி. இத்தம்பதிக்கு சுர்ஜித் (24) என்ற மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். சரவணனும், கிருஷ்ணகுமாரியும் மணிமுத்தாறு பட்டாலியன் போலீசில் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
இதற்கு முன் சரவணனின் குடும்பத்தினர் தூத்துக்குடியில் இருந்தபோது அவரது மகள் படித்த பள்ளிக்கூடத்தில் கவின் குமார் எனும் இளைஞர் படித்திருக்கிறார். ஏரல் அருகேயுள்ள ஆறுமுக மங்கலத்தைச் சேர்ந்தவர் கவின். பள்ளிப்படிப்பின்போதே இரண்டு பேருக்குமிடையே பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
சென்னையிலுள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த கவின்குமார் சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்த நிலையில், அடிக்கடி பாளையங்கோட்டைக்கு வந்து தனது காதலியை சந்தித்துவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.
ஆனால், இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இத்தகைய சூழலில்தான் நேற்று மதியம் கவின்குமாரின் தாத்தாவிற்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவரும் அவரது குடும்பத்தினரும் தாத்தாவை அழைத்துக்கொண்டு பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்திருக்கின்றனர்.
இதனை எப்படியோ அறிந்துகொண்ட அப்பெண்ணின் தம்பி சுர்ஜித், சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த கவின்குமாரை பேச அழைத்துள்ளார். திடீரென அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த சுர்ஜித் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கவின்குமாரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியிருக்கிறார். படுகாயமடைந்த கவின்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கவின் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அங்கிருந்த கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்தபோது கவின்குமார் மீது தாக்குதலில் ஈடுபட்டது சுர்ஜித்தான் என்பது உறுதி செய்யப்பட்டது. கவினைக் கொன்றதாக சுர்ஜித் சரணடைந்த நிலையில், அவரது பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், திருச்செந்தூர் - தூத்துக்குடி சாலையிலிருக்கும் முக்காணி எனும் இடத்தில் கவினின் உறவினர்கள் நண்பர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களிடையே ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி நிரேஷ் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்திருக்கிறது.
ஆணவக்கொலை தொடர்பாக புகார் அளித்தபோது காவல்துறையினர் உரிய பதில் அளிக்கவில்லை என்று உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர். மேலும், பெற்றோர் காவல் துறையிலிருப்பதால் தைரியமாக சுர்ஜித் ஆவணக்கொலை செய்திருக்கிறார் என்றும் காவல் அதிகாரிகளாக இருக்கும் சுர்ஜித்தின் பெற்றோரை உடனே பணிநீக்கம் செய்ய வேண்டுமென தெரிவித்த உறவினர்கள் இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கும்வரை கவினின் உடலை வாங்கப்போவதில்லை என்றும் தெரிவித்திருக்கின்றனர்.