மாணவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்திய 'வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி'
புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சி மற்றும் திருநெல்வேலி லிட்டில் ஃப்ளவர் பப்ளிக் ஸ்கூல் சிபிஎஸ்சி இணைந்து “வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி” நிகழ்ச்சியை 25.07.2025 அன்று பள்ளியின் வளாகத்தில் சிறப்பாக நடத்தினர்.
நிகழ்ச்சியை திருநெல்வேலி மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு. தவலேந்து மற்றும் பள்ளியின் சேர்மன் திரு. மரிய சூசை ஆகியோர் ஒருங்கிணைத்து தொடங்கி வைத்தனர். அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளை அழகாகக் காட்சிப்படுத்தினர்.
நிகழ்வில் பள்ளி தாளாளர் திரு. செல்வகுமார், வில்லேஜ் டெக்னாலஜி முதன்மை நிர்வாகி அதிகாரி திரு. பாலாஜி வரதன், ஸ்பெக்ட்ரா நீட் அகாடமி நிறுவனர் திரு. சுரேஷ் குமார் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
ஜூனியர் மற்றும் சீனியர் என இரு பிரிவுகளாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில் 400-க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் காட்சிக்குத் தயாராக இருந்தன. மாணவர்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்கள் முதல் நவீன தொழில்நுட்பக் கருவிகள் வரை பல்வேறு புதுமைகளை காட்சிப்படுத்தினர்.
ஜூனியர் பிரிவில் ஸ்ரீ ஜெயேந்திர கோல்டன் ஜூபிலி பள்ளியைச் சேர்ந்த குமரன் மற்றும் ஆதர்ஷ்,
சீனியர் பிரிவில் புனித மரியன்னை பள்ளியை சேர்ந்த ஆண்டன் ஹரிஷ் குமார் மற்றும் ரித்தீஷ் ஆகியோர் முதல் பரிசுகளை வென்றனர். பரிசுகளை திருநெல்வேலி நகர காவல் உதவி ஆணையாளர் திரு. அஜி குமார் மற்றும் பள்ளி சேர்மன் திரு. மரிய சூசை ஆகியோர் வழங்கினர்.
மேலும், போட்டியில் முதல் ஐந்து இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இதற்கும் மேலாக, போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வு மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தையும், படைப்பாற்றலையும் ஊக்குவிக்கும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.