’பிரதமர் மேடையில் திருமாவளவன்’ | ராஜேந்திர பாலாஜி கருத்தும் விசிகவின் விளக்கமும்!
பிரதமர் மேடையில் திருமாவளவன் பங்கேற்றது திருப்புமுனை என அ.தி.மு.கவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அரசியல் நெருப்பைகொளுத்திப் போட்டார். ராஜேந்திர பாலாஜியின் இந்தக் கருத்து பேசுபொருளான நிலையில், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு விளக்கம் அளித்துள்ளார். ராஜேந்திரன் சோழனின் ஆயிரமாவது பிறந்த நாள் விழாவில் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் திருமாவளவன் பங்கேற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
தொகுதியில் நடைபெறும் அரசு விழாக்களில் பங்கேற்பதை நாகரீக அரசியலாகவும், மரபாகவும் விடுதலைச் சிறுத்தைகள் கருதுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார். சனாதன எதிர்ப்பில் விடுதலைச் சிறுத்தைகள் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது எனவும் பாரதிய ஜனதாவுடன் அரசியல் ரீதியாக எந்த உறவும் கிடையாது என்றும் வன்னியரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். குழப்பம் மற்றும் நம்பிக்கையற்ற நிலையில் அ.தி.மு.வினர் இருப்பதை ராஜேந்திர பாலாஜியின் பேச்சு உணர்த்துவதாக அவர் சாடியுள்ளார். வரும் பேரவைத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாதபடி பா.ஜ.க- அதிமுக கூட்டணியை மக்கள் தோற்கடிப்பாளர்கள் என்றும் வன்னியரசு தெரிவித்துள்ளார்.