பீகார் தேர்தல் | பெரும் சவால்களை எதிர்கொள்ளும் பிரசாந்த் கிஷோர் கட்சி!
பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தொடங்கியுள்ள ஜன் சுராஜ் கட்சியின் வெற்றிவாய்ப்புகளை அலசும் கட்டுரை இந்து ஆங்கில நாளிதழில் வெளியாகியுள்ளது, பேராசிரியர் சந்தகுமார் மற்றும் பேராசிரியர் சந்தர்சூர் சிங் இந்தக் கட்டுரையை எழுதியுள்ளனர். மதம் மற்றும் சாதி அரசியலுக்கு மாறாக பீகாரின் பிராந்திய அடையாளம் மற்றும் வளர்ச்சி லட்சியங்களில் கிஷோரின் கட்சி கவனம் செலுத்துகிறது. இது சார்ந்த பிரசாரம் அந்தக் கட்சிக்கு கணிசமான ஈர்ப்பை பெற்றுத் தந்துள்ளது.
ஊடகங்களும் அவரது கட்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன. அதே நேரம் நலத்திட்டங்களினால் பாஜகவுக்கு கிடைத்துள்ள நற்பெயரையும் அக்கட்சியின் அமைப்பு பலத்தையும் எதிர்கொள்வது கிஷோரின் கட்சிக்கு பெரிய சவாலாக இருக்கும் என்று கட்டுரையாளர்கள் கருதுகின்றனர்.
அதேபோல் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் இளைஞராக இருப்பது அவருக்கு பெரிய பலமாக உள்ளது. மேலும் அவரது கட்சிக்கும் அமைப்புரீதியான பலமும் உள்ளது. முதல்வர் நிதீஷ் குமாரைப் போல் அல்லாமல் பாஜக கூட்டணியை தொடர்ச்சியாக எதிர்ப்பதால் பாஜக எதிர்ப்பு வாக்காளர்கள் அவரை உறுதியாக நம்புகிறார்கள். இவ்வகையில் ஆளும் கூட்டணி மட்டுமல்லாமல் பிரதான எதிர்கட்சியிடமிருந்து கிஷோரின் கட்சி கடுமையான சவாலை எதிர்கொள்கிறது. எனவே இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் ஆட்சி அமைப்பது யார் என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக கிஷோரின் கட்சி உருவெடுக்க வாய்ப்புள்ளதாக கட்டுரையாளர்கள் கூறுகின்றனர்.