
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரியில் திமுகவின் பவள விழா மற்றும் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
விழாவில் திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் பேசுகையில், “கழகத்தின் முப்பெரும் விழா மற்றும் கழகத்தின் பவள விழாவை நடத்த வேலூருக்கு அனுமதி அளித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வரலாற்று சிறப்புமிக்க வேலூரில் இந்நிகழ்ச்சி நடந்து வருகிறது. திமுக உருவாக வேலூர் மண்தான் காரணம்.
பெரியார் வேலூரை சேர்ந்த மணியம்மையை திருமணம் செய்ததால் அண்ணா வெளியே வந்து திமுகவை தொடங்கினார். எப்போதுமே ஒரு பெருந்தலை இறந்தால் கட்சி அழிந்துவிடும் என்பார்கள். ஆனால் அண்ணா இறப்புக்கு பிறகு மற்றவர்கள் மலைக்கும் அளவுக்கு கட்சியை வளர்த்தவர் கலைஞர். கலைஞருக்கு பிறகு மு.க.ஸ்டாலின் அதை செய்து வருகிறார்.
சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை புறமுதுகிட்டு ஓடச்செய்தவர்தான் மு.க.ஸ்டாலின். இந்த இயக்கத்தை எந்த எந்த வகையிலேயோ வளைக்க பார்த்தார்கள். எமர்ஜென்சியை கொண்டு வந்து ஒழிக்க நினைத்தார்கள். எதுவும் முடியவில்லை.
நமக்கு இன்னும் சோதனை உள்ளது. எப்போது தேர்தல் வரும் என்றே தெரியவில்லை. எல்லாம் மந்திரமாக உள்ளது. ஆனால் நீ எத்தனை பட்டாளத்தை கூட்டிக்கொண்டு வந்தாலும் திமுகவை அசைக்க முடியாது. சட்டமன்ற தேர்தலோடு நாடாளுமன்ற தேர்தல் வந்தாலும் சரி, இன்னும் பஞ்சாயத்தையும் கலைத்து தேர்தல் வைத்தாலும் சரி... நாம் தயாராக இருக்க வேண்டும். அவர்கள் யாரிடம் வேண்டுமானலும் மோதலாம், திமுகவிடம் மோதக்கூடாது. ஆகவே ஒருமுறைக்கு 3 முறை யோசித்து மோதுங்கள்” என பேசினார்.