MGR to Vijay.. மீண்டும் அரசியலில் ஜேப்பியார் குடும்பம்.. யார் இந்த மரிய வில்சன்?
மீண்டும் அரசியலில் ஜேப்பியார் குடும்பம்
அதிமுகவின் முக்கிய முகமாகவும் எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசியாகவும் விளங்கிய ஜேப்பியாரின் குடும்பத்திலிருந்து, கிட்டத்தட்ட 36 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அரசியலில் காலடி எடுத்து வைக்கப்பட்டிருக்கிறது. ஆம், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கிறார் ஜேப்பியாரின் மருமகன் மரிய வில்சன். யார் இந்த மரிய வில்சன்? அவரின் பயணம் குறித்துப் பார்ப்பதற்கு முன்பாக, அதிமுகவினரால் மாவீரன் என அழைக்கப்பட்ட ஜேப்பியார் குறித்துப் பார்ப்போம்..,
கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியைப் பூர்விகமாகக் கொண்டவர் ஜே.பங்குராஜ் எனும் ஜேப்பியார். தீவிர எம்.ஜி.ஆர் ரசிகரான இவர் ஆரம்பகாலக்கட்டங்களில் காவல்துறையில் பணியாற்றினார். பின் சென்னைக்கு வந்த ஜேப்பியார், எம்.ஜி.ஆரின் ரசிகர் மன்றத்தில் தீவிரமாக இயங்கத் தொடங்கினார். அதிமுக தொடங்கப்பட்டபோது, எம்.ஜி.ஆரோடு உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு கட்சியின் உறுப்பினராக இணைந்தவர். 1973-ம் ஆண்டு ஒருங்கிணைந்த சென்னை மாவட்டச் செயலாளராகவும் ஆனார். எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசியான ஜேப்பியார் அவரது சுற்றுப்பயணங்களின்போது, குறிப்பாக தேர்தல் காலங்களில் அவருக்கு உறுதுணையாக தமிழகம் முழுவதும் வலம் வந்தார். அனல் பறக்கும் பேச்சு, அசராத களப்பணியால் அடையாளம் காணப்பட்டவர் ஜேப்பியார். அதோடு, தன் அதிரடியான செயல்பாடுகளால், மாவீரன் என அதிமுகவினரால் அழைக்கப்பட்டார்.
தீவிர அரசியலில் ஒதுங்கிக் கொண்ட ஜேப்பியார்
1977-ல் ஆதிமுக ஆட்சி அமைந்ததும் குடிநீர் வாரியத் தலைவராக எம்.ஜி.ஆரால் ஜேப்பியார் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, எம்.எல்.சியாவும் சட்டமன்ற மேலவை கொறடாவாகவும் விளங்கினார் ஜேப்பியார். இதனையடுத்து தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டுக் கழகத் தலைவராகவும் பணியாற்றினார். சென்னையில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டபோது, தன் அதிரடி நடவடிக்கைகளால், அதைச் சரிசெய்தவர் என்கிற பெயரும் ஜேப்பியாருக்கு உண்டு. தயாரிப்பாளர், நடிகர் என திரைத்துறை சார்ந்த செயல்பாடுகளும் ஜேப்பியாருக்கு உண்டு.
எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு ஜானகி அணியில் இணைந்தார். அந்த அணியின் சார்பில் 1989 சட்டமன்றத் தேர்தலில் தியாகராய நகரில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் ஜேப்பியார். சில காலங்களுக்குப் பிறகு அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றாகி, ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஒருங்கிணைய, தீவிர அரசியலில் இருந்தே ஒதுங்கிக்கொண்டார் ஜேப்பியார். அதேவேளை, எம்.ஜி.ஆரின் தாய் சத்தியபாமா பெயரில் கல்வி நிறுவனங்களைத் தொடங்கி நடத்தி வந்தார். தொடர்ச்சியாக பல்வேறு நிறுவனங்களைத் தொடங்கிய ஜேப்பியார், 2016-ம் ஆண்டு மறைந்தார்.
யார் இந்த மரிய வில்சன்
ஜேப்பியார் அரசியலைவிட்டு ஒதுங்கிய 36 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அவருடைய மருமகன் மரிய வில்சன் அரசியலில் குதித்துள்ளார். ஜேப்பியார் பெயரில் இயங்கிவரும் கல்வி நிறுவனங்களை நடத்திவருபவர்களில் முக்கியமானவர் மரிய வில்சன். மாணவர்கள் புதுமையான ஆலோசனைகளை அளிக்கும் வகையில் ‘டிசைன் திங்கிங் கிளப்’ ஒன்றையும் உருவாக்கியிருக்கிறார். இதுதவிர பல்வேறு தொழில்சார் சொசைட்டிகளையும் அமைத்து மாணவ, மாணவிகள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்து வந்துள்ளார் மரிய வில்சன். இந்நிலையில் இன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்திருக்கிறார்.