சசிகலா முதல் செங்கோட்டையன் வரை.. அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட 14 பேர்.. யார்யார்?
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவில், சசிகலா முதல் செங்கோட்டையன் வரை பல்வேறு காரணங்களால் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை மிகப்பெரிய எதிர்க்கட்சியாக அதிமுக மட்டுமே இருந்து வருகிறது. ஆனால், அக்கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அக்கட்சி சோதனைகளையும் பிரச்னைகளையும் சந்தித்து வருகிறது. அந்த வகையில், இன்று அக்கட்சியின் மூத்த தலைவராக இருந்த செங்கோட்டையனே நீக்கியிருப்பது பேசுபொருளாகி உள்ளது. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு கட்சித் தலைமைப் பதவிக்கு சசிகலா தொடங்கி பழனிசாமி, பன்னீர்செல்வம் என இரட்டைத் தலைமையைச் சந்தித்து. பின்னர் அதிலும் விரிசல் ஏற்பட்டு, தற்போது அதிமுக என்றாலே அது பழனிசாமி என ஆகிவிட்டது. இதனால், அவர் எடுக்கும் முடிவுகளே அக்கட்சியின் முடிவுகளாகப் பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், பழனிசாமிக்கும் அவருக்கு முன்னரே அதிமுகவில் அங்கம் வகித்த மூத்த தலைவர் செங்கோட்டையனுக்கும் இடையே பிரச்னைகள் எழுந்ததாகக் கூறப்பட்டு வந்த நிலையில், அது, சமீபகாலமாக வெளியிலும் வெடிக்கத் தொடங்கியது. கடந்த செப்டம்பர் மாதம், ’அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும்; பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும்’என செய்தியாளர்களின் சந்திப்பில் பேசியிருந்தார் செங்கோட்டையன்.
அதையடுத்து, அதிமுகவின் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்தும், கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டிருந்தார் பழனிசாமி. அதன்படி, செங்கோட்டையன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக மட்டுமே இருந்து வந்தார். இந்நிலையில்தான், பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி, குருபூஜை விழாவில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் சேர்ந்து ஒன்றாக பங்கேற்று, தேவர் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். அடுத்து, ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் அங்கு சசிகலாவையும் சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பு தொடர்பாக பதிலளித்த பழனிசாமி, “அதிமுக தலைமையின் கருத்தை முழுமையாக கடைபிடிக்காவிட்டால் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கட்சியில் இருந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். செங்கோட்டையனை நீக்குவதில் எந்த தயக்கமும் இல்லை” என தெரிவித்தார். இதுதொடர்பாக பதிலளித்த செங்கோட்டையன், “அதிமுகவில் இருந்து என்னை நீக்கினால் எனக்கு மகிழ்ச்சியே" என கூறியிருந்தார். இதற்கிடையே, முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்கி பழனிசாமி அதிரடி உத்தரவிட்டார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுதொடர்பாக இன்று காலை 11 மணியளவில் செங்கோட்டையன் விளக்கமளிக்க உள்ளார்.
இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவில், சசிகலா முதல் செங்கோட்டையன் வரை பல்வேறு காரணங்களால் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில், 2017ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டப்பட்டு, அப்போதைய இடைக்கால பொதுச்செயலாளரான சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோர் நீக்கப்பட்டனர். அவர்களைத் தொடர்ந்து, இரட்டைத் தலைமைக்கு இடையே ஏற்பட்ட அதிகார மோதலில் கடந்த 2020ஆம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வமும் அவரது மகன் ரவீந்திரநாத்தும் நீக்கப்பட்டனர்.
அடுத்து பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களாக அறியப்பட்ட கட்சியின் மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், கட்சியின் அமைப்புச் செயலாளாராக இருந்த மனோஜ் பாண்டியன், ஜே,சி.டி. பிரபாகர் உள்ளிட்டோரும் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதுபோக மருது அழகுராஜ், பெங்களூரு புகழேந்தி, கே.சி.பழனிசாமி, வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோரும் நீக்கப்பட்டனர். அந்த வரிசையில் தான் பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று பேசிய செங்கோட்டையனும் தற்போது நீக்கப்பட்டுள்ளார்.

