’செங்கோட்டையன் அதிமுக-வில் இருந்து நீக்கம்..’ - எடப்பாடி பழனிசாமி உத்தரவு!
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி, எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். செங்கோட்டையன், ஓ.பி.எஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவுடன் சந்தித்து பேசியதால், கட்சியின் ஒழுங்குமுறைக்கு மாறாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இதனால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நேற்று (அக்டோபர் 30) நடந்த முத்துராமலிங்க தேவரின் 118 வது ஜெயந்தி விழா மற்றும் 63வது குருபூஜை விழாவை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் மரியாதை செலுத்தினர். அப்போது, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.எஸ் செங்கோட்டையன் இருவரும் இணைந்து ஒரே வாகனத்தில் பயணித்து முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு வந்தது பேசுபொருளானது. தொடர்ந்து, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், செங்கோட்டையன், ஓ. பன்னீர் செல்வம் என மூன்று பேரும் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் சந்தித்துப் பேசினர்.
இதையடுத்து, மூன்று பேரும் கூட்டாக கொடுத்த செய்தியாளர் சந்திப்பின் போது, "நாங்கள் அனைவரும் அம்மாவின் தொண்டர்கள். அம்மாவின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் கொண்டு வருவதற்கு ஒன்றாக இணைந்து செயல்படுவோம்" என தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, சசிகலாவையும் செங்கோட்டையன் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரும் சந்தித்தனர். இவ்வாறு, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை செங்கோட்டையன் சந்தித்தது பரபரப்பாகியிருந்தது.
ஏற்கனவே, கடந்த செப்டம்பர் மாதம் அதிமுக-வை ஒருங்கிணைக்க வேண்டும் என செய்தியாளர்களின் சந்திப்பில் பேசியிருந்தார் செங்கோட்டையன். அதையடுத்து, அதிமுகவின் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் செயலாளர் பொறுப்பிலிருந்தும், கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி. அதன்படி, செங்கோட்டையன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக மட்டுமே இருந்து வந்தார். இந்நிலையில் தான், செங்கோட்டையன், அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்டவர்களான ஓ.பி.எஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோரின் சந்திப்பு நிகழ்ந்திருந்தது.
எடப்பாடி பழனிசாமியின் எச்சரிக்கை!
இதையடுத்து, நேற்று செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, " அதிமுக தலைமையின் கருத்தை முழுமையாக கடைபிடிக்காவிட்டால் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கட்சியில் இருந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். செங்கோட்டையனை நீக்குவதில் எந்த தயக்கமும் இல்லை " எனப் பேசியிருந்தார். தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளித்திருந்த செங்கோட்டையன், " அதிமுக-வில் இருந்து என்னை நீக்கினால் எனக்கு மகிழ்ச்சியே" என கூறியிருந்தார்.
அதிமுக-லிருந்து செங்கோட்டையன் நீக்கம்!
இந்நிலையில் தான் இன்று, முன்னாள் அமைச்ச்சர் செங்கோட்டையனை அதிமுக-வின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பதவிகளிலும் இருந்து நீக்கி உத்தரவிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தில் இருப்பவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது தெரிந்திருந்தும், அவர்களுடன் ஒன்றிணைந்து, கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற காரணத்தினாலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த திரு. K.A. செங்கோட்டையன், M.L.A., (கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் அவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


