மருது சகோதரர்கள்
மருது சகோதரர்கள்pt web

சாதி தலைவர்கள் அல்ல, சாதித்த வீரர்கள்.. 1801-ல் மருது சகோதரர்கள் விடுத்த வரலாற்று அழைப்பு!

அந்நியரின் ஆதிக்கத்தை எதிர்த்து நின்ற சிவகங்கைச் சீமையின் தீரர்களான மருதிருவரும், விடுதலை மற்றும் தியாகத்தின் அடையாளங்களாக வாழ்ந்துள்ளனர். இந்த மண்ணுக்கு உரமாகியுள்ள அவர்கள் போராட்டமும் வீரமும் மக்கள் மனங்களில் என்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
Published on
Summary

சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரின் படைத்தளபதிகளாக நியமிக்கப்பட்ட மருது சகோதரர்கள், 1801ல் ஆங்கிலேயருக்கு எதிராக போராடி வீரமரணம் அடைந்தனர். ஜம்புத்தீவு பிரகடனம் மூலம் மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி, அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக போராட அழைப்பு விடுத்தனர். அவர்களின் தியாகம் வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும்.

சுதந்திரப் போராட்ட வீரர்களான மருது சகோதரர்களின் 224-வது நினைவு நாளையொட்டி அவர்களது உருவப் படத்துக்கு அரசியல் தலைவர்கள் இன்று மரியாதை செலுத்தினர். அந்நியரின் ஆதிக்கத்தை எதிர்த்து நின்ற சிவகங்கைச் சீமையின் தீரர்களான மருதிருவரும், விடுதலை மற்றும் தியாகத்தின் அடையாளங்களாக வாழ்ந்துள்ளனர். இந்த மண்ணுக்கு உரமாகியுள்ள மருது சகோதரர்களின் போராட்டமும் வீரமும் மக்கள் மனங்களில் என்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. யார் இந்த மருது சகோதரர்கள்? அவர்கள் எத்தகைய சூழலில் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டார்கள்? ஜம்புத் தீவு பிரகடனத்தின் முக்கியத்துவம் என்ன? விரிவாக பார்க்கலாம்.

1857 மட்டுமல்ல.. இதுவும் இந்தியாவின் சுதந்திரப் போர்தான்!

நீண்ட போராட்டங்களுக்கு பிறகு பல உயிர் தியாகங்களுக்கு பிறகு 1947 ஆம் ஆண்டு ஆங்கிலேயரிடம் இருந்து இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. ஆங்கிலேயருக்கு எதிரான சுதந்திரப் போர் எப்பொழுதில் இருந்து தொடங்கியது என்பது தற்போது விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது. முதல் இந்திய சுதந்திரப் போர் என்றாலே 1857 ஆம் ஆண்டு மீரட்டில் நடந்த சிப்பாய்க் கலகம் தான் நினைவிற்கு வரும். உண்மையில் அது மிகப்பெரிய எழுச்சி தான். இந்தப் போராட்டம் தோல்வியடைந்தாலும், இது இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டமாக பரவலாகக் கருதப்படுகிறது. இந்த எழுச்சிதான் பிரிட்டீசாரின் அணுகுமுறையையே மாற்ற வைத்தது. இருப்பினும், 1857-க்கு முன்பே இந்தியாவில் பிரிட்டீஷ் படைகளுக்கு எதிராக பெரிய அளவில் எழுச்சிகரமாக போர்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக தென்னிந்தியாவில் பூலித்தேவர் காலம் தொட்டே இருந்து வருகிறது. தென்னிந்தியாவை பொறுத்தவரை பிரிட்டீஷ் எதிர்ப்பின் இணைப்பு புள்ளியாக திப்பு சுல்தான் இருந்தார். அந்தவகையில் தென்னிந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு மிகப்பெரிய சிம்ம சொப்பனமாக இருந்தவர்கள் மருது சகோதரர்கள். கிட்டதட்ட 150 நாட்கள் நடந்த போரில் பலம் வாய்ந்த ஆங்கிலேய படைகளுக்கே தண்ணி காட்டினார்கள். தோல்வியில் முடிந்தாலும் மருது சகோதர்கள் நிகழ்த்தியதும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுதந்திர போர் தான்.

மருது சகோதரர்களின் பிறப்பு, தொடக்க காலம்

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே முக்குளம் என்ற கிராமத்தில் - சாதாரண எளிய குடும்பத்தில், உடையார் - ஆனந்தாயி பொன்னாத்தாள் இணையர்களுக்குப் பிறந்த மகன்கள்தான் மருது சகோதரர்கள். 1748 டிசம்பர் 15ல் பெரிய மருது பிறந்தார். ஐந்து ஆண்டுகள் கழித்து 1753ல் சிறிய மருது பாண்டியர் பிறந்தார். இவர்கள் இருவரது போர்த்திறமைகளை கண்ட சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர் தமது படைத்தளபதிகளாக நியமித்தார்.

ஆற்காடு நவாப் வரி வசூலை ஆங்கிலேயருடன் பங்கிட்டுக் கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொண்ட ஜோசப் ஸ்மித் தலைமையிலான கம்பெனிப் படை 1772ல் ராமநாதபுரத்தை கைப்பற்றியதும் சிவகங்கையின் மீது போர் தொடுத்தது. இந்த திடீர் தாக்குதலில் முத்து வடுகநாதர் இறந்தார். பின்னர், வேலு நாச்சியார் திண்டுக்கல் அருகில் உள்ள விருப்பாட்சி காட்டுக்கு தப்பிச்சென்று காட்டில் மறைந்து வாழ்ந்தார். விருப்பாச்சி காடுகளில் வேலுநாச்சியாரும் மருது சகோதரர்களும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த போது, திண்டுக்கல் நகரமும் மலைக்கோட்டையும் மைசூர் மன்‌‌‌னர் ஹைதர் அலியின் வசம் இருந்தது. வேலுநாச்சியாரும் மருது சகோதரர்களும் விருப்பாச்சி கோபால் நாயக்கர், ஹைதர் அலி, திப்புசுல்‌‌‌தான் ஆகியோர் உதவியுடன் 1780-ல் சிவகங்கை சீமையை மீட்டனர். சிவகங்கை சீமையை மீட்டு வேலு நாச்சியாரை அரியணையில் அமர்த்தினர் மருது சகோதரர்கள்.

காலச்சூழல்!

மைசூர் பகுதியில் ஆங்கிலேயருக்கு எதிராக வீரமுடன் போர் புரிந்து வந்த திப்பு சுல்தான் 1799இல் மரணமடைந்தார். திப்புசுல்தானின் மரணம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு ஆங்கிலேயருடைய முழுக் கவனமும் ஆங்கில ஆதிக்கத்திற்கு அடிபணியாத ராஜ்ஜியங்கள், பாளையங்கள் மீது திரும்பியது. வரி பாக்கி உள்ளிட்ட காரணங்களுக்காக பாளையக்காரர்களிடமும் பிரச்னைகளை உருவாக்கினர். அந்தப் பிரச்சினைகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, அடிபணியாத பாளையங்களை ராணுவ பலத்தின் மூலம் ஆக்கிரமித்துக் கைவசப்படுத்தினர். அப்பகுதிகளுக்கு தங்கள் கைப்பாவையான ஆட்களை பொறுப்புக்கு கொண்டு வந்தனர். அந்த வரிசையில்தான் தங்களுக்கு கட்டுப்படாத மருது சகோதரர்கள் மீதும் அவர்களது கவனம் திரும்பியது.

சிவகங்கை மீது போர்தொடுக்க ஆங்கிலேயர் படைக்கு ஒரு அற்ப காரணம் கிடைத்தது. ஆம், பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்ததாகக் காரணம் கூறிதான், சிவகங்கை மீது 1801 மே 28 இல் ஆங்கிலேயர் போர் தொடுத்தனர். இப்போர் கிட்டதட்ட 150 நாட்கள் இடைவிடாமல் நடந்தது. கடும் போருக்குபிறகு காளையார்கோவிலில் களோனல் அக்னியூ மருது சகோதரர்களை கைதுசெய்தார், அத்துடன் சிவகங்கையின் சுதந்திர ஆட்சி முடிவுக்கு வந்தது. மருது சகோதரர்கள் திருப்பத்தூர் கோட்டையில் 24-10-1801 அன்று தூக்கில் போடப்பட்டு வீர மரணம் அடைந்தனர்.

அவர்களுடன் அவர்களின் ஆண் வாரிசுகள் அனைவரும் தூக்கிலிடப்பட்டனர். மேலும் 500க்கும் மேற்பட்ட விடுதலை வீரர்கள் முறையான விசாரணையின்றி தூக்கிலிடப்பட்டனர். வெள்ளையர்களிடம் பிடிபட்ட சின்ன மருதுவின் மகன் துரைச்சாமியும் மருதுவின் தளபதிகளும் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் இன்றைய பினாங்கு நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டனர்.

வரலாற்று சிறப்புமிக்க ஜம்புத் தீவு பிரகடனம்

ஜம்புத்தீவு பிரகடனம் என்பது ஆங்கிலேயர் காலனி ஆதிக்கத்திற்கு எதிரான ஒரு முழக்கமாகும். "ஜம்புத்தீவு" என்பது இன்றைய இந்தியத் துணைக் கண்டத்தைக் குறிக்கிறது. 1801 ஜூன் 12 ஆம் தேதி சின்ன மருது திருச்சி திருவரங்கம் முதலிய இடங்களில் வெளியிட்ட அறிக்கை ”ஜம்புத்தீவு பிரகடனம்” என அழைக்கப்படுகிறது. அவ்வறிக்கையின் மூலம் எல்லா இனங்களையும் சேர்ந்த மக்கள் நாட்டுப் பற்று மிக்க பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் தொடுக்க வேண்டுமென்றும் அறை கூவல் விடுக்கப்பட்டது. 1857 சிப்பாய்க் கலகத்திற்கு அரை நூற்றாண்டிற்குமுன் நடந்த இந்திய தென்னிந்திய புரட்சியே முதல் ஒருங்கிணைந்த விடுதலைப் போராட்டமாக பல வரலாற்று ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.

ஜம்புத் தீவு பிரகடனத்தின் விவரம்:

‘ஜம்பு தீபகற்பத்திலுள்ள ஜம்புத் தீவில் வாழும் அந்தணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், முசல்மான்கள் முதலான அனைவருக்கும் அறிவிப்பது என்னவென்றால், நவாப் முகமது அலி, முட்டாள்தனமாக ஐரோப்பியர்களுக்கு இடங்கொடுத்து விட்டதன் காரணமாக இப்போது அவர் ஒரு விதவைபோல் ஆகிவிட்டார். ஐரோப்பியர்களோ தங்களுடைய வாக்குறுதிகளை மீறி அரசாங்கத்தையே தங்களுடையதாக ஆக்கிக் கொண்டு நாட்டு மக்கள் அனைவரையும் நாய்களாகக் கருதி ஆட்சியதிகாரம் செய்து வருகிறார்கள். உங்களிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால் ஐரோப்பியரின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளாமல், ஒருவரையொருவர் பழிதூற்றிக் கொண்டு, நாட்டை அந்நியரிடம் ஒப்படைத்து விட்டீர்கள்.

இந்த ஈனர்கள் ஆளும் பகுதிகளிலெல்லாம், மக்கள் ஏழ்மையில் உழல்கிறார்கள்; சோற்றுக்குப் பதில் நீராகாரம்தான் உணவு என்று ஆகிவிட்டது. துன்பப்படுவது தெரிந்திருந்தும் எதனால் இத்துன்பங்கள் ஏற்பட்டன என்பதைப் பகுத்தாராயவும் புரிந்துகொள்ளவும் இயலாத நிலையில் மக்கள் இருக்கின்றனர். ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாலும் மனிதன் கடைசியில் செத்துத்தான் ஆகவேண்டும். ஆதலால் ஜம்புத்தீவு வாசிகள் ஒவ்வொருவரும் போர்க்கோலம் பூண்டு ஒன்றுபட வேண்டும். இந்த ஈனர்களின் பெயர்கள்கூட நாட்டில் மிஞ்சியிருக்காமல் செய்யவேண்டும். அப்போதுதான் ஏழைகளும் இல்லாக் கொடுமையால் அல்லல்படுவோரும் வாழ முடியும்.

இந்த ஈனர்களுக்கு தொண்டூழியம் செய்து சுகவாழ்வு வாழ விரும்புகிறவன் எவனாவது இருந்தால் அவர்கள் ஒழிக்கப்பட வேண்டும். ஆதலால், மீசை வைத்த அனைவரும் உங்களுக்கு வீரமிருந்தால், இந்த ஈனர்களை அழித்து விடவேண்டும். இந்த ஈனர்களுக்கு தொண்டூழியம் செய்கிறவனுக்கு இறந்தபின் மோட்சம் கிடையாது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன். எனவே, உடம்பில் ஐரோப்பியனின் ரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்.

இப்படிக்கு,

மருதுபாண்டியர்கள்” இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தியத் துணைக் கண்டத்திலேயே முதன்முதலாக ஆங்கிலேயருக்கு எதிரான போர்ப் பிரகடனத்தை வெளியிட்டு, ஆங்கிலேயப் படைகளைப் போர்க்களத்தில் சந்தித்தவர்கள் மட்டுமல்ல, தங்கள் ஆண் வாரிசுகளையே முழுமையாக இந்த மண்ணின் விடுதலைக்காகத் தியாகம் செய்தவர்கள் மருது சகோதரர்கள்.

சாதித் தலைவர்கள் அல்ல சாதித்த தலைவர்கள்!

சுதந்திரப் போராட்டத்திற்காக தன்னுயிரையும் தியாகம் செய்த, சொத்து சுகம் என அனைத்தையும் இழந்த எண்ணற்ற தலைவர்கள் இன்று சாதிய கூண்டிற்குள் அடைக்கப்பட்டிருப்பது வேதனையிலும் வேதனையான விஷயம். தேர்தல் நோக்கங்களுக்காக வாக்கு வங்கிகளை கருத்தில் கொண்டே அரசியல் தலைவர்களும் போட்டி போட்டுக் கொண்டு இதுபோன்ற குருபூஜை நிகழ்வுகளை பார்க்கின்றனர். ஜாதிய அமைப்புகளை தங்களது சமுதாய மக்களை ஒருங்கிணைத்து கொள்வதற்கு இதை பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த நிகழ்வுகளே அவர்களது நினைவுகளையும் வீரத்தையும் போற்றுவதுபோல் இல்லாமல் வெறும் வெற்று உணர்வுவசப்பட்ட சூழலில் தான் நடக்கிறது.

வரலாற்றுக்கு அவர்கள் செய்த மிகப்பெரிய பணிகள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படாமல் போவதற்கு இதுபோன்ற குறுகிய எண்ணங்கள் முக்கிய காரணங்களாக அமைகின்றன. அடிமைத் தனத்திற்கு எதிராக போராடியவர்கள்தான் மருது சகோதரர்கள். அதற்காக அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டார்கள். அதன் ஒரு வெளிப்பாடுதான் ஜம்புத்தீவு பிரகடனம். மருது சகோதரர்களின் வீரத்தை நினைவு கூறும் வகையில், அக்டோபர் 24, 2004 அன்று மருது சகோதரர்களுக்கு நினைவு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. சிவகங்கையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 27-ஆம் தேதி அவர்களுக்கு குருபூஜை நடத்தப்படுகிறது.

சுதந்திர போராட்ட வீரர்களான மருது சகோதரர்கள் எனப்படும் பெரிய மருது, சின்ன மருது ஆகியோரை ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்ட தினம் இன்று
சுதந்திர போராட்ட வீரர்களான மருது சகோதரர்கள் எனப்படும் பெரிய மருது, சின்ன மருது ஆகியோரை ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்ட தினம் இன்று

இந்த குருபூஜை நிகழ்வுகள் வெறும் சாதிய அர்த்தங்களுக்குள் அடைக்கப்படுவது அந்த தலைவர்களுக்கே செய்யக்கூடிய அவமதிப்பு ஆகும். இத்தகைய தலைவர்களின் அளப்பரிய பங்களிப்பை சாதியை கடந்து உள்வாங்கிக் கொள்ள வேண்டிய அவசியம் அனைவருக்கும் உள்ளது. அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராகப் போரிட்டு வீரமரணம் அடைந்த மருது சகோதரர்களின் வீரம் வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com