அமெரிக்கா | கார் விபத்தில் இந்திய மாணவி பலி!
கடந்த காலங்களில், அமெரிக்காவில் இந்தியர்களின் மரணங்கள் அதிகரித்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில், தற்போதும் ஒரு மரணம் நிகழ்ந்துள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த 26 வயது மாணவி, அமெரிக்காவில் நிகழ்ந்த கார் விபத்தில் பலியானார்.
ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் நாகஸ்ரீ வந்தனா. இவர், கடந்த 2022ஆம் ஆண்டு உயர்படிப்பிற்காக அமெரிக்கா சென்றார். டென்னசி மாகாணத்தின் மெம்பிஸ் நகரில் உள்ள பல்கலையில் முதுகலை படித்து வந்தார். படிப்பு நிறைவுற்ற பின் அங்கேயே பணியாற்றவும் திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், கடந்த 13ஆம் தேதி, தன் நண்பர்களுடன் காரில் பயணித்துள்ளார். அப்போது அவருடைய கார் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. இதில், நாகஸ்ரீ வந்தனா பரிமளா பலத்த காயமடைந்து மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் பலியானார்.
அதே காரில் இருந்த மேலும் இரண்டு பேரின் நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவில் இந்திய மாணவி கார் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரத்தில், அமெரிக்காவிலிருந்து வந்தனாவின் உடலை இந்தியா கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.