ஜவாஹிருல்லாவிற்கு ஓராண்டு சிறை.. உறுதி செய்த உயர்நீதிமன்றம்.. அடுத்தகட்டம் என்ன? வழக்கின் பின்னணி!
கடந்த 1997-ல் வெளிநாட்டிலிருந்து அனுமதியின்றி நிவாரண நிதி பெற்றதாக, மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா மீது சென்னை கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் இருந்தது.
இந்த வழக்கில் ஜவாஹிருல்லா-வுக்கு ஓரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் ஜவாஹிருல்லாவுக்கு உடந்தையாக இருந்த ஹைதர் அலிக்கு 1 ஆண்டு சிறையும், எஸ் சையத் நிசார் அகமத், ஜிஎம் ஷேக் மற்றும் நல்ல முகமத் கலஞ்சிம் ஆகியோருக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.
இந்த தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜவஹருல்லா உள்ளிட்டோர் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தனர்.. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி வேல்முருகன் முன்பு நடைபெற்றது . இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, கீழ் நீதிமன்றம் விதித்து தண்டனை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளார். மனுதாரர்கள் தரப்பில் மேல்முறையீட்டுக்காக தண்டனையை ஒரு மாதம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மனிதநேய மக்கள் கட்சி சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “கடந்த 1997 ஆம் ஆண்டு நவம்பர் 30 தேதி கோவையில் முஸ்லிம்களுக்கெதிராக நடத்தப்பட்ட தொடர் கலவரம், கொள்ளை, துப்பாக்கி சூட்டில் 19 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதோடு கோடிக்கணக்கான சொத்துகள் சூறையாடப்பட்டன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கோவை முஸ்லிம் நிவாரண நிதி என்ற பெயரில் ஒரு அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இதற்கு வெளிநாடுகளில் பணிபுரிவோர் பண உதவியை அளித்திருந்தனர். ஆனால், ஒன்றிய பாஜக அரசு வெளிநாட்டிலிருந்து சட்ட விரோதமாக பணம் பெற்றதாகவும், வருமான வரித்துறையை ஏமாற்றியதாகவும் இரண்டு வழக்குகளை தொடுத்தது. முதல் வழக்கு சிபிஐயால் விசாரிக்கப்பட்டது, இரண்டாவது வழக்கு வருமான வரித்துறை(Income Tax)யால் விசாரிக்கப்பட்டது.
சிபிஐ இந்த வழக்குக்கு சற்றும் தொடர்பில்லாத தமுமுக தலைவர்கள் பேரா.ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி ஆகியோரை வழக்கில் சேர்த்தது. தமுமுக தலைவர்களை வழக்கில் சேர்த்ததற்கு கோவை நிவாரண நிதி அலுவலகம் தமுமுக வளாகத்தில் செயல்பட அனுமதித்ததாக காரணம் கூறப்பட்டது.
வருமான வரி வழக்கை விசாரித்த வருமான வரித்துறை அதிகாரிகள் முறைக்கேடுகள் நடைபெறவில்லை என்பதை உறுதிசெய்ததை அடுத்து, வருமான வரித்துறை தீர்பாணையம் தமுமுக மீதான குற்றச்சாட்டை கடந்த 2003 ல் தள்ளுபடி செய்தது.
சிபிஐ வழக்கில் கடந்த செப்டம்பர் 30,2011 அன்று மெட்ரோபாலிட்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் பேராசிரியர் ஜவாஹிருல்லா, ஹைதர் அலி ஆகியோருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் கோவை நிவாரண அறக்கட்டளையின் நிர்வாக உறுப்பினர்கள் மூவருக்கு இரண்டாண்டு சிறை தண்டனையும் வழங்கியது. இதில் நிசார் அஹ்மது அவர்கள் 2018 ல் இறந்து விட்டார். இதில், மேல்முறையீடு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் (Addl.CBI Special Court) விசாரிக்கப்பட்டது. கடந்த 16.6.2017 வெள்ளிக்கிழமையன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சிபிஐ நீதிமன்றம் உறுதி செய்தது.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இன்று 14-03-2025 நீதிபதி வேல்முருகன் அளித்த தீர்ப்பில் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுவதாகவும், உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ய ஒரு மாத அவகாசம் அளித்தும் உத்தரவிட்டுள்ளார். இவ்வழக்கை உச்ச்நீதிமன்றத்தில் மனிதநேய மக்கள் கட்சி சட்ட ரீதியாக எதிர் கொள்ளும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.