சென்னை வீட்டில் சிஆர்பிஎஃப் அதிகாரிகளுடன் விஜய் திடீர் ஆலோசனை; எப்போதிலிருந்து Y பிரிவு பாதுகாப்பு?
தமிழ் சினிமாவின் உச்சத்தில் உள்ள நடிகர் விஜய் கடந்தாண்டு பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கினார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல பொது இடங்களுக்கும் பயணம் மேற்கொள்ள தொடங்கியுள்ளார். சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. இதனிடையே விஜயின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என கடந்த பிப்ரவரி மாதத்தில் மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய்க்கு "Y" பிரிவு பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக ஒருங்கிணைப்பு கூட்டம், சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டில் நடைபெற்றது. இந்த ஒருங்கிணைப்பு கூட்டத்தில் நடிகர் விஜய்யுடன், சிஆர்பிஎப் அதிகாரிகள் 2 பேர், புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 2 பேர், பாதுகாப்புப் பிரிவு அதிகாரி ஒருவர் மற்றும் நீலாங்கரை காவல் நிலைய உதவி ஆணையர் ஒருவர் என மொத்தம் 8 பேர் கலந்து கொண்டனர். மதியம் 12 மணியளவில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் 1 மணியளவில் நிறைவு பெற்றது.
இந்த ஆலோசணையின் போது, நடிகர் விஜய்க்கு எந்தெந்த வகையில் இருந்து அச்சுறுத்தல் உள்ளது? விஜய் தினமும் வழக்கமாக செல்லக்கூடிய இடங்கள் எவை? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், Y பிரிவு பாதுகாப்பு படைவீரர்களின் விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் குறித்தும் சிஆர்பிஎப் பாதுகாப்புப் படைவீரர்கள் தங்குவதற்கு வேண்டிய இடவசதிகள் குறித்தும் விஜயுடன் ஆலோசனை நடத்தியப்பின் புறப்பட்டு சென்றனர்.
இதனைத் தொடர்ந்து விஜய் வீட்டிலிருந்து 5 வீடுகளுக்கு முன்னதாக, விஜயின் மேனேஜர் ஜெகதீஷன் என்பவரது ‘Route’ புரடெக்ஷன் கம்பெனியின் அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்தின் ஒரு பகுதியில் சிஆர்பிஎப் அதிகாரிகள் தங்குவதற்கு வசதிகள் இருக்கிறதா? என்பது குறித்து அதிகாரிகள் பார்வையிட்டனர். பின்பு அந்த வளாகத்தில் உள்ள ரெஸ்டாரன்டில் சிஆர்பிஎப் அதிகாரிகள் மதிய உணவு அருந்தி சென்றனர்.
அப்போது சிஆர்பிஎப் அதிகாரியிடம் விஜய்க்கு எப்போது பாதுகாப்பு வழங்க உள்ளீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, மிக விரைவில் பாதுகாப்பு அளிக்க இருப்பதாக, தகவல் தெரிவித்தனர்.