டாஸ்மாக் | ’எந்த தவறும் நடக்கவில்லை; புகார்களை சட்டரீதியாக எதிர்கொள்வோம்' - அமைச்சர் செந்தில் பாலாஜி
அண்மையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையின் சோதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று டாஸ்மாக் டெண்டர் மூலமாக ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என்ற எதிர்ப்பு குரல் கிளம்பியது.
இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி, “எந்த முதல் தகவல் அறிக்கை, அது எந்த ஆண்டு பதிவுசெய்யப்பட்டதென்ற விவரமே அமலாக்கத்துறை அறிக்கையில் இல்லை; பணியிட மாற்றத்திலும் எந்தவித தவறுகளும் இல்லை. தவறுகள் இருப்பதை போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள். அதேபோல் பணியிட மாற்றங்கள் என்பது குடும்ப சூழ்நிலை, மருத்துவ காரணங்களுக்காக தான் பணியிட மாற்றம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் எந்த தவறும் நடக்கவில்லை. ஆனால் தவறுகளை நடந்திருப்பதை போல் ஒரு தோற்றத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
டிரான்ஸ் போர்ட் டெண்டர் என்பது வெளிப்படையாக செய்யப்பட்ட ஒன்று. முறைகேடுகள் எதுவும் இல்லை. ஆனால்,இதிலிருந்து முறைகேடான ஆவணங்கள் எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்கள். முறைகேடு புகார்களை சட்டரீதியாக எதிர்கொள்வோம் .
ரூ 1,000 கோடி ஊழல் என ஒருவர் அறிக்கை விடுகிறார்; அதன்பின் அமலாக்கத்துறையும் அதையே சொல்கிறது; எங்கள் மீது பொய் குற்றச்சாட்டுகளை சுமத்த அமலாக்கத்துறையை ஏவுகிறது ஒன்றிய அரசு.” என்று தெரிவித்துள்ளார்.