”பலபேர் இறந்திருக்காங்க” - தவெக கூட்டத்தில் ஆவேசமாக பேசி வைரலான ஐபிஎஸ் அதிகாரி! யார் இந்த இஷா சிங்?
30 வயதாகும் இளம் ஐபிஎஸ் அதிகாரியான இஷா சிங், துணிச்சல் மிகுந்த பெண்மணியாக இன்று பேசப்படுகிறார் என்றால் அவர் கடந்து வந்த பாதைதான் அவரை ஒரு துணிச்சல் மிகுந்த பெண்ணாக மாற்றி இருக்கிறது. 26 வயதிலேயே ஐபிஎஸ் அதிகாரியாக பணி நியமனம் பெற்றாலும், அதற்கு முன்பு அவர் வழக்கறிஞர்.
1995 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்த இஷா சிங்-இன் தந்தையும் ஒரு ஐபிஎஸ் அதிகாரி. 1985 ஐபிஎஸ் பேட்ச் அதிகாரியான இஷா சிங்கின் தந்தை யோகேஷ் பிரதாப் சிங், தனது நேர்மையின் காரணமாக பல்வேறு பணியிட மாற்றங்களுக்கு இடையே தனது ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்து முழு நேர வழக்கறிஞராக மாறினார். இஷா சிங்கின் தந்தை தனது பதவியை என்றும் துஷ்பிரயோகம் செய்யாமல் இருந்துள்ளார் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் அவர் காரில் சிவப்பு விளக்கு பொருத்தாமல் இருந்தது. தந்தையைப் போலவே தாயும் சமூக சேவையிலும் சட்டத்துறையிலும் ஆர்வம் மிகுந்தவராக விளங்கினார். இந்நிலையில், இஷாவும் சிறுவயதில் இருந்தே துணிச்சலோடும் அதே நேரத்தில் மனிதநேயத்தோடும் வளர்ந்தார்.
இஷா, பெங்களூருவில் உள்ள தேசிய சட்டக் கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தில் 2018-ல் சட்டம் படித்து முடித்தார். அதன் பின்னர் பொதுநல வழக்குகளில் கவனம் செலுத்தும் வழக்கறிஞராக பணியாற்றினார். தனியார் குடியிருப்பில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் போது உயிரிழந்த தொழிலாளர்களின் விதவைகளுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கிய வழக்கில் வாதாடியது. பொய்யான குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட பெண்ணுக்கு பிணை கிடைக்கச் செய்தது போன்றவை இஷா சிங்கின் வழக்கறிஞர் பயணத்தில் வெற்றிகளாகும்.
அதன் பின்னர், தன் தந்தையின் வழியில் குடிமை பணி தேர்வுக்கு வழக்கறிஞர் பணியை மேற்கொண்டே தயாரானார். 2021 குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்ற இஷாவிற்கு 2021 பேட்ச் (AGMUT cadre) பணி ஒதுக்கப்பட்டது. கல்வி மேம்பாட்டிலும், நிர்வாகத் திறமையிலும் சிறந்தவர் என்று சக அதிகாரிகளின் பாராட்டுகளை பெற்றார். IPS இஷா சிங் டெல்லி, அருணாசல பிரதேசம், அந்தமான் & நிக்கோபார் போன்ற AGMUT காடர் பகுதிகளில் பல முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். குற்றத் தடுப்பு, சட்ட-ஒழுங்கு பராமரிப்பு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் டிராஃபிக் மேலாண்மை ஆகிய துறைகளில் சிறந்த பணித்திறனுக்குப் பிரபலமானவர். புதுச்சேரி மாநிலத்தில் 2024ல் பணி மாற்றம் செய்யப்பட்டார் இஷா சிங்.
புதுச்சேரியில் இஷா சிங்க் எஸ்.பி ஆக நியமிக்கப்பட்ட பிறகு, பொதுக்கூட்டங்கள், அரசியல் நிகழ்வுகள் மற்றும் கூட்ட நெரிசல் மேலாண்மையில் மிகவும் கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளை அமல்படுத்தியுள்ளார். நிர்வாகக் கட்டுப்பாட்டில் உறுதி, விதிமுறை மீறலில் பூஜ்ய சகிப்புத் தன்மை ஆகியவற்றால் பலரது கவனத்தைப் பெற்றார். பெண்கள் பாதுகாப்பு, இரவு ரோந்துப் பணிகள், சைபர் குற்றங்களை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றில் முன்னோடியான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
ஐபிஎஸ் இஷா சிங் இப்போது புதுச்சேரியில் கிழக்கு மண்டலத்தின் புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் காவல்துறை மேற்பார்வையாளராக டி.ஜி.பியால் நியமிக்கப்பட்டார். ஏற்கனவே, கரூர் சம்பவத்தால் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்து கொள்ளும் சாலை வலத்திற்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், விஜய் சாலை வலம் மேற்கொண்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உயர் அதிகாரிகளிடம் எடுத்துரைத்ததும் இஷா தான்.
எந்தவிதமான பாரபட்சமும் இல்லாமல் தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பு கூட்டத்தை புதுச்சேரியில் நடத்துவதற்கு கடந்த, ஐந்து நாட்களாக தனது துறை அதிகாரிகளோடு பணியில் ஈடுபட்டு வந்த இஷா பொதுச் செயலாளர் ஆனந்திடம் பேசிய காணொளி தான் இன்று வைரல் ஆகியுள்ளது.
புதுச்சேரி காவல்துறையினர் மத்தியில் இஷாவை பற்றி கேட்டால் அந்த ஐபிஎஸ் அதிகாரி எதற்கும் பயப்படாதவர், இரவு நேரத்தில் கூட நடக்கும் குற்ற சம்பவங்களை நேரில் வந்து விசாரிக்கும் அளவிற்கு மக்களோடும் பழத்தோடும் தொடர்பு கொண்டிருப்பவர் என கூறுகிறார்கள். பெங்களூருவில் சட்டப் படிப்பு படித்த போது கல்வி கட்டிட வளாகத்தில் எழுதப்பட்டிருக்கும் இந்த வாசகம் தான் தனது தாரக மந்திரம் என இஷா சிங் ஐபிஎஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறுகிறார். நீ எவ்வளவு உயர்ந்தவராக இருந்தாலும், சட்டம் உனக்கு மேலே தான் எனும் வாசகம் தான் அது. அந்த வாசகத்தின் படியே இஷா சிங் ஐபிஎஸ் செயல்பட்டு வருகிறார். மேலும், வரக்கூடிய தலைமுறையினருக்கும் அவர் முன்னுதாராமாக விளங்குகிறார்.

