”திமுகவை நம்பாதீங்க; எம்.ஜி.ஆர் இங்குதான்..” - புதுச்சேரியில் விஜய் ஆவேசப் பேச்சு.! A - Z முழு தகவல்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகமும் தேர்தலை சந்திக்க தீவிரமாக தயாராகி வருகிறது. முன்னதாக, கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்திற்கு பிறகு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேர்தல் பரப்புரையை தவெக தலைவர் விஜய் தொடங்கியிருக்கும் நிலையில், முதல் திறந்தவெளிப் பரப்புரையாக புதுச்சேரியில் இன்று தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
என். ஆனந்த் உரை!
புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் முதலாவதாக தவெக பொதுச்செயலாளர் என். தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “தவெக தலைவர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக 2026ல் வருவார். அதேபோல் புதுச்சேரியிலும் தவெக ஆட்சி அமையும். காவல்துறைக்கு நன்றி. அதிகமாக ஒத்துழைப்பு கொடுத்தார்கள். 72 நாட்கள் கழித்து பொதுக்கூட்டத்திற்கு தலைவர் வந்திருக்கிறார். தமிழ்நாட்டில் நம்மை எங்கேயும் விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். தலைவர் சொன்னதுபோல்தான். காற்றை மறைக்க முடியுமா?” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, உரையாற்றிய தவெக மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது என்று சொல்கிறீர்களே சிஎம் சார் (மு.க.ஸ்டாலின்) கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள்,. இந்தியாவுக்கே புதுச்சேரி காவல்துறை முன்னுதாரணமாக இருக்கிறது,. புதுச்சேரி முதலமைச்சருக்கு நன்றி. இப்படிப்பட்ட பாதுகாப்பை தமிழ்நாட்டில் தவெக தலைவர் பரப்புரையில் கொடுத்ததே கிடையாது. சி எம் சார் உங்கள் அரசியலை தூக்கிபோட்டுவிட்டு தேர்தலில் மோதுங்கள். தவெகவின் பிரச்சார பயணம் இன்றிலிருந்து துவங்கிவிட்டது” எனத் தெரிவித்தார்.
தவெக தலைவர் விஜய் உரை!
இறுதியாக தவெக தலைவர் தலைவர் விஜய் இக்கூட்டத்தில் மக்களிடையே பேசினார்.
அப்போது, “ஒன்றிய அரசுதான் தமிழ்நாடு தனிமாநிலம், புதுச்சேரி தனி யூனியன் பிரதேசம் என்று பிரித்துப் பார்ப்பார்கள். நமக்கெல்லாம் அப்படி இல்லை, நான் வேறு நீங்கள் வேறு கிடையாது. நாம் எல்லாம் ஒன்றுதான். நாம் எல்லாம் சொந்தம்தான்,. வேறு வேறு வீட்டில் வேறு வேறு மாநிலத்தில் இருப்பதால் நாம் சொந்தம் இல்லை என்று ஆகிவிடுமா? ஒருவரை ஒருவர் பார்க்கும்போது அந்த உணர்வு இருந்துவிட்டால் போதும் வேறு எதுவும் வேண்டாம்.
தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கேரளா கர்நாடகா மட்டுமல்ல.. உலகின் எந்த மூலையில் நம் வகையறா இருந்தாலும் அவர்கள் எல்லாம் நம் உறவுதான்,. நம் உயிர்தான். புதுச்சேரி என்றதும் மணக்குளம் விநாயகர், அரவிந்தர் ஆசிரமம், வில்லியனூர் மாதா என்று எல்லோரும் ஞாபகத்திற்கு வருவார்கள். மகாகவி பாரதி இருந்த மண், பாவேந்தர் பாரதி பிறந்த மண் என சிறப்புகளை அடிக்கிக்கொண்டே போகலாம்.
எம்.ஜி.ஆர் ஆட்சி முதலில் புதுவையில் தான்..
அரசியல் என்று வந்துவிட்டால் முக்கியமான விஷயத்தை சொல்லியே ஆக வேண்டும். 1977 எம்.ஜி.ஆர் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் முன், முதலில் 1974ல் புதுவையில்தான் ஆட்சி அமைத்தார். தமிழகத்தில் எம்.ஜி.ஆரை விட்டுவிடக் கூடாது என முன்பே நினைவு படுத்தியது புதுச்சேரி மக்கள் தான். அப்படிப்பட்ட புதுச்சேரியை நம்மால் மறக்க முடியுமா? தமிழ்நாடு மக்களைப்போலவே புதுவை மக்களும் என்னை 30 வருடமாக தாங்கி பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
புதுவை முதல்வருக்கு நன்றி.!
தமிழகம் மட்டுமில்லாமல் புதுவை மக்களுக்கும் குரல் கொடுப்பேன். புதுவை அரசு திமுக அரசு போல் இல்லை. ஏன் என்றால் வேற அரசியல் கட்சி நடத்தும் நிகழ்வு என்றாலும் அந்த மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்திருக்கும் இந்த அரசு பாராபட்சம் காட்டவில்லை. புதுவை முதல்வருக்கு மனப்பூர்வ நன்றி. இதை பார்த்தாவது திமுக அரசு கற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் கற்றுக்கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. வரும் தேர்தலில் அவர்கள் கற்றுக்கொள்வார்கள். அதை தேர்தலில் மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.
புதுச்சேரி பிரச்னைகள்..
மாநில அந்தஸ்து கோரிக்கை உட்பட பல கோரிக்கைகளை புதுச்சேரியில் கூட்டணி ஆட்சி இருந்தாலும் ஒன்றிய அரசு கண்டுகொள்ளவில்லை. அவர்கள், இங்கு வளர்ச்சி ஏற்படவும் துணை நிற்கவில்லை, இன்னும் மாநில அந்தஸ்து கொடுக்கவில்லை. பலமுறை சட்டசபையில் தீர்மானம் போட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த வருடம் மார்ச் மாதம் 27 ஆம் தேதி ஒரு தீர்மானம் போட்டார்கள். அது மாநில அந்தஸ்து வேண்டுமென்று கேட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பும் 16ஆவது தீர்மானம்.
புதுச்சேரியில், காரைக்கால் பகுதிகளில் மூடப்பட்ட 5 மில்கள், பல தொழிற்சாலைகளை மீண்டும் திறப்பதற்கு ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை. இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்காக எதையுமே செய்யவில்லை. இங்கு ஒரு ஐடி கம்பெனி உருவாக வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு தோன்றவில்லை. ஒரு அமைச்சர் ஊழல் குற்றச்சாட்டில் பதவியில் இருந்து நீக்கப்பட்டு அந்த இடத்திற்கு வேறு ஒருவரை நியமித்து 200 நாள் ஆகிவிட்டது இன்னும் அவருக்கு இலாகா ஒதுக்கவில்லை.
திமுக-வை நம்பாதீர்கள்
காரைக்கால், ஏனாம் உள்ளிட்ட பகுதிகளில் எந்த முன்னேற்றம் இல்லை என மக்கள் சொல்கிறார்கள். சுற்றுலா தளமாக இருக்கும் புதுச்சேரியில் கழிப்பிட வசதி, வாகனம் நிறுத்தும் வசதி இல்லை. காரைக்கால் மொத்தமாக கைவிடப்பட்டதாகத் தான் உள்ளது. புதுச்சேரி கடலூர் மார்க்கமான ரயில்வே பாதை வேண்டுமென்பது நீண்டகால கோரிக்கை. புதுச்சேரி மக்களுக்கு ஒன்றுதான் சொல்ல வேண்டும். திமுகவை நம்பாதீர்கள்.. உங்களை நம்ப வைத்து ஏமாற்றுவதுதான் அவர்களது வேலையே. புதுச்சேரி அரசுக்கும் அதன் மக்கள் நலத்திட்டங்களுக்கும் நாம் துணை நிற்க வேண்டும்.

