”யாரோ எழுதிக் கொடுத்ததை விஜய் பேசுகிறார்” - புதுவை அமைச்சர் நமசிவாயம் சொன்ன முக்கிய விஷயம்!
தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைப் பொதுக்கூட்டம் இன்று நடந்து முடிந்திருக்கிறது. அப்பொதுகூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், ”புதுச்சேரி நீண்டநாள் கோரிக்கையான ‘புதுச்சேரியின் மாநில அந்தஸ்து’ கோரிக்கை உட்பட புதுச்சேரி மக்களின் வளர்ச்சியில் ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றவில்லை” என விமர்சித்திருந்தார்.
"இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது"
இந்நிலையில், புதுச்சேரியில் பாஜக மீதான விஜயின் விமர்சனத்துக்கு பதிலளித்து பாஜகவைச் சார்ந்த புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் புதிய தலைமுறையிடம் பேசியிருக்கிறார். அதில், “தமிழ்நாட்டில் பேசுவதற்கு விஜய்க்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக புதுவையில் மத்திய அரசை குறை சொல்லி பேசியிருக்கிறார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
எந்தெந்த வளர்ச்சியில் துணை நிற்கவில்லை என்பதை அவர் சொல்ல வேண்டும். பொத்தாம்பொதுவாக சொல்லக்கூடாது. காரைக்கால், ஏனாம் போன்ற பகுதிகளில் எல்லாம் அவர் சென்று பார்த்தாரா? அவை எந்த அளவுக்கு வளராமல் இருக்கிறதென்று அவருக்குத் தெரியுமா? என்பது தெரியவில்லை. அவர் அரசியலுக்கு புதிது. யாரோ சொல்லிக்கொடுத்ததைத்தான் அவர் பேசுகிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு புதுவையில் அமைந்த பிறகு மத்திய அரசு எவ்வளவோ நல்ல திட்டங்களை புதுவை மாநிலத்திற்குக் கொடுத்திருக்கிறது.
"ரேஷன் கடை என்பது மாநில அரசினுடையதா?"
ரேஷன் கடை இல்லை எனச் சொல்கிறார். ரேஷன் கடைகள் திறந்து மாதம் மாதம் விலையில்லா அரிசியை மக்களுக்குக் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். எல்லா திட்டங்களையும் நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறோம். முதலமைச்சராக ரங்கசாமிதானே இருக்கிறார். அவரையும்தானே விஜய் குறை சொல்கிறார். ரேஷன் கடை என்பது மாநில அரசினுடையதா? மத்திய அரசினுடையதா? விஜயின் பேச்சு என்பது என்.ஆர் காங்கிரஸை அவரது கூட்டணிக்குள் கொண்டுவருவதற்கான பேச்சுதான்" எனத் தெரிவித்துள்ளார்.

