”அதிமுகவை நிச்சயமாக ஒன்றிணைப்பேன்; சர்ப்பரைசாக எல்லாமே நடக்கும்” - சசிகலா
சசிகலா மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து, அதிமுகவை ஒன்றிணைப்பேன் என உறுதியளித்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லையெனவும், போதைப்பொருள் பிரச்சனை அதிகரித்துள்ளதாகவும் கூறினார். திமுக ஆட்சி முடிந்தால் மட்டுமே விடிவு காலம் வரும் எனவும், அதிமுக ஆட்சியை மீண்டும் கொண்டு வருவேன் எனவும் தெரிவித்தார்.
மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் வி.கே.சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மாவட்டம் தோறும் சரியான அதிகாரிகளை நியமிக்காமல் உள்ளனர். மதுரை திருநெல்வேலியில் 10 மாதங்களில் 36 கொலைகள், சிவகங்கையில் 20 கொலைகள் நடந்துள்ளது. திமுக அரசு சென்றால் தான் தமிழகத்திற்கு விடிவு காலம் ஏற்படும்..
அதிமுகவை ஒன்றிணைப்பதை நிச்சயமாக செய்வேன். சர்ப்பரைசாக எல்லாமே நடக்கும். வெயிட் அன் சி. பொறுத்திருந்து பாருங்கள். அதிமுக ஆட்சியை மீண்டும் கொண்டு வருவேன் என பேசினார்..
செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுப்பேன் என எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்த கேள்விக்கு, யார் என்ன நடவடிக்கை எடுத்தாலும் நான் எல்லோரையும் சந்திப்பேன். பார்ப்போம் எத்தனை பேரை கட்சியில் இருந்து எடுக்க முடியும் என. எம்ஜிஆரின் மறைவில் இருந்து கட்சியை பார்த்து கொண்டுள்ளேன். பழைய நிலை அதிமுகவில் திரும்பும். இரண்டாவது முறை ஏற்பட்டுள்ள இப்பிரச்னையை நிச்சயம் சரி செய்வேன்.
2021-ல் துரோகிளால் தோற்றோம் என எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்து பேசிய அவர், யார் துரோகி என அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களிடம் போய் கேட்டால் தெரியும். நான் கட்சியை ஒன்றிணைக்கும் பணியை ஆரம்பத்திலேயே தொடங்கிவிட்டேன். உங்களுக்கு சிறுவயது என்பதால் அதெல்லாம் தெரியாது. அரசியலில் எடுத்தோம் கவிழ்த்தோம் என செய்வது என் பழக்கம் இல்லை. என்னை பற்றி சீனியர் லீடர்களுக்கு தெரியும். எப்படி டீல் செய்வேன் என தெரியும். பொறுமையாக இருங்கள். என் அனுபவம் என்னவென்று உங்களுக்கு தெரியும்.
இப்போது இருப்பது போல நானும் ஜெயலலிதாவும் ஸ்பூன் பீடிங்கில் வந்தவர்கள் இல்லை. தலைவர் மறைவு அதன்பின்பு அதிமுக இக்கட்டான காலகட்டத்தில் இருந்த போது ஜெயலலிதாவை திட்டியவர்கள் எதிர்த்தவர்களை கூட நாங்கள் அமைச்சர்களாகவும், சபாநாயகர்களாவும் ஆக்கி உள்ளோம். என்னுடைய மூவ் தனியாக தான் இருக்கும். ஆனால் அது தனியாக தெரியும்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் எங்களை போன்ற எதிர்க்கட்சிகள் கவனமுடன் கண்காணிக்க வேண்டும். திமுக ஆட்சியின்போது பலஆயிரம் வாக்குகளை நீக்கினார்கள். மோசடி செய்தார்கள் என பேசினார்.

