“அந்த மூவரால் ஒன்றுமே செய்ய முடியாது; ஒரு செல்வாக்கும் கிடையாது”- வெளுத்து வாங்கிய கோலாகல ஸ்ரீநிவாஸ்
அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் பசும்பொன்னில் சந்தித்து அரசியல் பரபரப்பை ஏற்படுத்தினர். கோலாகல ஸ்ரீனிவாசன், இவர்கள் ஒன்றிணைந்தாலும் செல்வாக்கு இல்லாதவர்கள் என விமர்சித்திருக்கிறார்.
அரசியல் களமாறிவிட்டது பசும்பொன். முத்துராமலிங்க தேவர் ஜெயந்திக்கு செங்கோட்டையன், ஓபிஎஸ் ஒன்றாக வாகனத்தில் வந்தது. பின்னர் டிடிவி தினகரன் அவர்களுடன் பசும்பொன்னில் இணைந்து கொண்டது. ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தது. பின்னர் சசிகலா உடன் செங்கோட்டையன் மற்றும் ஓபிஎஸ் சந்தித்தது என பசும்பொன் இன்று அரசியல் ரீதியாக பரபரப்பில் இருந்தது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் ஓரங்கட்டப்பட்டவர்கள் அணியாக திரள்கிறார்களோ என விவாதம் கிளம்பியது. அதனால், இந்த சம்பவம் முக்கிய அரசியல் விவாதமாக கிளம்பி இருக்கிறது.
பசும்பொன்னிற்கு புறப்படுவதற்கு முன்பாகவே மதுரையிலேயே தனியார் ஹோட்டலில் இருவரும் சந்தித்தனர். ஒன்றாக சென்று அஞ்சலி செலுத்துவது என்று அங்குதான் முடிவு செய்யப்பட்டது. டிடிவி தினகரன் அதில் இணைந்து கொண்டார். அதனால் இன்றைய நிகழ்வு திட்டமிடப்பட்டதுதான் என்பது தெளிவாக தெரிகிறது.
இந்நிலையில், இந்த அரசியல் சம்பவங்கள் குறித்து அரசியல் விமர்சகர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை அளித்துள்ளனர். அது குறித்து பார்க்கலாம்.
அந்த மூவரால் ஒன்றுமே செய்ய முடியாது; ஒரு செல்வாக்கும் கிடையாது
ஓ. பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், செங்கோட்டையன் மற்றும் சசிகலா ஆகியோரின் கருத்துக்கள் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அரசியல் விமர்சகர் கோலாகல ஸ்ரீனிவாசன் வேறொரு கோணத்தை முன்வைத்து பேசியிருக்கிறார். அதில், “அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்டவர்கள் தங்கள் அரசியல் இருப்புக்காக அணி சேர்கிறார்கள். ஆனால் அவர்களால் என்ன செய்ய முடியும். செங்கோட்டையன் இதற்கு முன்பு கெடுவெல்லாம் கொடுத்தாரே. அவர்கள் என்ன சாதிக்க முடிந்தது. அடுத்துக்கப்புறம் அதுபற்றி பேசவேயில்லையே. அவரால் ஒன்னுமே செய்ய முடியவில்லையே. அதில் இருந்து செங்கோட்டையன் செல்வாக்கு என்னவென்று தெரியவில்லையா?
என்.டி.ஏவில் சேர்வது குறித்து அமித்ஷா நேற்று பேசியிருந்தார். அதுதான் பேசுபொருளாக நேற்று உருவானது. ஆனால், அதனை மாற்ற இவர்கள் வேறு ஒன்று செய்திருக்கிறார்கள். பிரிந்தவர்கள் என்பதற்கு கீழ் ஒரே சமூகத்தை சேர்ந்த மூவரை மட்டும் ஏன் அடையாளப்படுத்துகிறோம். அவர்கள் பிரிந்தவர்கள் கிடையாது. அதிமுகவால் வெளியேற்றப்பட்டவர்கள். பொதுக்குழு கூடி வெளியேற்றப்பட்டவர்கள். கட்சி எடுத்த முடிவு. சசிகலா மற்றும் டிடிவி தினகரை வெளியேற்ற வற்புறுத்தியவரே ஓபிஎஸ் தான். அதனால், டிடிவி, சசிகலா வெளியேற முக்கிய காரணமே ஓபிஎஸ் தான். இவர்கள் சந்தித்ததில் எந்த முக்கியத்துவமும் கிடையாது.
டிடிவி உள்ளிட்ட யாருக்கும் பெரிய செல்வாக்கு கிடையாது. இருந்திருந்தால் தேர்தலில் வெற்றிபெற்றிருக்கலாமே. இவையெல்லாம் ஒரு தோற்றம் மட்டுமே. அவர்கள் ஒரு பிம்பத்தை கட்டமைத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால், இதில் உண்மை எதுவும் கிடையாது. தேர்தல் முடிவுகளை பொறுத்து பார்த்தால், தொடர்ச்சியாக அவர் சரிந்து கொண்டே வந்திருக்கிறார். கடைசியாக நடைபெற்ற தேர்தலில் அவர் பெற்ற வாக்குகள் ஒரு சதம்வீதம் மட்டுமே.
செங்கோட்டையன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். அவர் பெரிதாக எந்தப் பொறுப்பிலும் இல்லை. வெறும் அடிப்படை உறுப்பினர் மட்டும்தான். அவருக்கு செல்வாக்கு என்று ஒன்றும் இல்லை. அவர் என்ன திட்டமிட்டு செய்தாலும் ஒன்றும் நடக்காது. இந்த மூவரும் வேறு எங்குபோவார்கள்? திமுகவுக்கு போக முடியாது. அதிமுக கூட்டணிக்குள் எடப்பாடி விடமாட்டார். அடுத்த ஒரே வாய்ப்பு விஜய். ஆனால், விஜய்யே பாஜகவுடன் கூட்டணிக்கு பேசிக் கொண்டிருக்கிறார். இதனை உறுதி செய்யும் வகையில் அமித்ஷாவில் நேற்றைய பேச்சு இருந்தது. விஜய்க்கான கதவு சாத்தப்படவில்லை என்பதுபோல் பேசியிருக்கிறார். அவர்கள் தனியாகத்தான் தேர்தலை சந்திக்க வேண்டும்” என்றார்.
இது ஒரு முக்கியமான நகர்வு !
இது குறித்து மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் கூறுகையில், “இது ஒரு முக்கியமான நகர்வு. அதிமுகவில் இருப்பவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையனும் சொன்னார், அமித்ஷாவும் சொன்னார். ஆனால் அவர்கள் சொன்னபடி நடக்கவில்லை. காத்துக் கொண்டிருக்கிறேன் என்று செங்கோட்டையன் சமீபத்தில் கூட சொன்னார்.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரானவர்கள் அனைவரும் ஓரணியாக உருவாகி தங்களுக்கான அரசியல் இடத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். இவர்கள் ஒன்றாக சேர்ந்து ஒன்று என்.டி.ஏ கூட்டணியில் சேர்வார்கள் அல்லது விஜய் பலம் வாய்ந்தவராக தோன்றினால் தவெக பக்கம் அணியாக செல்வார்கள்” என்றார்.
"அதிமுக - வை ஒண்றினைக்கும் முயற்சிகளை பாஜக எடுக்கும்" - துரை கருணா
அதேபோல், அரசியல் விமர்சகர் துரை கருணா கூறுகையில், “பிரிந்து கிடக்கும் அதிமுகவினர் ஒன்று சேர்ந்தால்தான் திமுகவை வீழ்த்த முடியும். கட்சி பலகீனமாக இருக்கிறது 2024 தேர்தல் நிரூபித்திருக்கிறது. எடப்பாடி பழனிசாமி வகுத்த வியூகம், அவர் கட்சியை கொண்டு செல்கிற விதம், மூத்த தலைவர்களை மதிக்காத தன்மை என்பது கட்சியின் எல்லா மட்டத்திலும் ஒரு புழுக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. மீண்டுமொரு தோல்வியை கட்சி சந்தித்தால் அதனை தாங்கிக் கொள்ளும் ஆளுமை எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. ஊருக்கு பிரச்சாரம் மேற்கொள்ளும் பழனிசாமி கூட்டணிக்கு ஒவ்வொரு கட்சியாக அழைக்கிறார். ஆனால், நீங்கள் வலுவாக இருந்தால் அந்தக் கட்சிகள் உங்களைத் தேடி வரும்.
நவம்பர் அல்லது டிசம்பருக்குள் ஒன்றுபட்ட அண்ணா திமுக இருக்கும். பாஜகவுக்கு எதிரான சித்தாந்தம் கொண்ட கட்சிகளை பழனிசாமி அழைக்கிறார். அதனால், பாஜக கூட இதில் தலையிட்டு அதிமுக ஒன்றிணைவதற்கான முயற்சிகளை எடுக்கும்” என்றார்.

