”இது மதநல்லிணக்க அடையாளமே!” - கந்தர் மலையா? சிக்கந்தர் மலையா? திருப்பரங்குன்றத்தின் ஆச்சர்ய வரலாறு!
மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது காசி விஸ்வநாதர் கோயிலும், தர்காவும் உள்ளன. அடிவாரத்தில் முருகன் கோயில் உள்ளது. அத்துடன் சமணர் படுகைகளும் இருக்கின்றன. இப்படி பல்வேறு மதங்களை சார்ந்தவை ஒரே இடத்தில் இருப்பது மத நல்லிணக்கத்தின் வடிவமாக திருப்பரங்குன்றம் மலை திகழ்கிறது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு மாதமாக திருப்பரங்குன்றம் பகுதியில் ஒருவித சலசலப்பு நிலவி வருகிறது.
தர்காவிற்கு சென்று கிடா வெட்டி வழிபாடு நடத்துவது தொடர்பாக ஒரு தரப்பினர் அதிருப்தி தெரிவித்து வந்தனர். இது கந்தர் மலையா? சிகந்தர் மலையா என விவாதத்தை கிளப்பி விட்டிருக்கிறார்கள். மதுரை திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் தாங்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவதாக அங்கு வசிக்கும் இந்துக்களும், இஸ்லாமியர்களும் தெரிவிக்கின்றனர். வெளியிலிருந்து வந்தவர்களே தேவையற்ற பிரச்சனையை கிளப்புவதாகவும் அவர் குற்றம்சாட்டுகின்றனர்.
இருப்பினும், திருப்பரங்குன்றத்தில் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வெளி மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் யாரும் மாவட்டத்திற்குள் வராத வகையில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இருப்பினும் நீதிமன்றம் அனுமதி அளித்ததால் நேற்று மாலையில் போராட்டமும் நடைபெற்று அதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றும் இருந்தனர்.
நேற்று பரபரப்பாக காணப்பட்ட நிலையில், திருப்பரங்குன்றம் பகுதியில் இன்று அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பியுள்ளது. மலையுச்சியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலிலும், அங்குள்ள தர்காவிலும் வழிபாடு செய்ய பக்தர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இயக்கங்களோ, கட்சிகளோ கூட்டமாக மலைக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றமா அல்லது சிக்கந்தர் மலையா என்ற விவாதம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் வரலாற்று ஆய்வாளர்கள் இது குறித்து தெளிவுபடுத்துகிறார்கள்.
நாணல் நண்பர்கள் தமிழ்தாசன் கூறுகையில், “திருப்பரங்குன்றம் மலையானது எல்லா சமயத்தாருக்கும், எல்லா மதங்களுக்குமான மலை. இங்கு முருகன் கோவில், குடைவரை கோயிலில் சிவன் கோவில், திருமாலுக்கான சந்நதி இருக்கிறது. மேலும், சமண சிற்பங்கள் மற்றும் தாய் தெய்வங்களும் இருக்கிறது. சங்க இலக்கியங்களில் இருப்பதுபோல், பழமையான முருக வழிபாடும் திருப்பரங்குன்றத்தில் நடந்திருக்கிறது. சைவம், வைணவம் நாட்டார் மரபுகள் என எல்லா மதங்களும் இருக்கும் நிலையில், சிக்கந்தரும் இருக்கிறார்; இஸ்லாமியர்களுக்கான இடமாகவும் திருப்பரங்குன்றம் இருக்கிறது.
இது எப்படி கந்தன் மலையானது?
வரலாற்று ரீதியாக மதநல்லிணக்கத்திற்கான இடமாக திருப்பரங்குன்றம் விளங்கி இருக்கிறது. இங்கு மட்டுமல்ல மதுரையில் நீங்கள் எந்த மலையை எடுத்துக்கொண்டாலும் அங்கு சைவம், வைணவம் என எல்லா மதங்களும் சேர்ந்து இருக்கக்கூடிய இடங்களாகத்தான் இருக்கும்; தமிழ்நாடும் அப்படித்தான் இருக்கிறது.
இது சிக்கந்தர் மலையா அல்லது திருப்பரங்குன்றமா என கேள்வி கேட்கின்றவர்களிடம், ‘இது எப்படி கந்தன் மலையானது?’ என கேள்வி எழுப்ப வேண்டும். இது கந்தன் மலை என்றால் சிக்கந்தர் மலையாக இருப்பதற்கும் இடமிருக்கிறது.
திருபரங்குன்றத்தில் இருக்கக்கூடிய சிவனுக்கு பரங்கிரிநாதர் என்று தான் பெயர். இது கல்வெட்டுகளில் இருக்கூடிய செய்தி. இன்றோ அவர் சத்தியகிரி நாதராக மாறியுள்ளார். எனவே அந்த மலையை சத்தியகிரி என்று சொல்வதற்கும், கந்தன் மலை என்று சொல்வதற்கும் இடமிருக்கிறது என்றால் சிக்கந்தர் மலை என்று சொல்வதற்கும் இடமிருக்கிறது. சிக்கந்தர் மலை என்று திடீரென்றெல்லாம் சொல்லவில்லை. பல நூற்றாண்டுகளாக இதைக் குறிப்பிடுகின்றனர். 18 சித்தர்களில் ஒருவராக போகரின் ‘போகர் ஏழாயிரம்’ பாடல்களில் அவர் சிக்கந்தர் என்று பதிவு செய்துள்ளார். வேற்கோட்டம் எனும் நாட்டுப்புறப் பாடல் நூலிலும் சிக்கந்தர் மலை என்று குறிப்பிட்டுள்ளது. எனவே பல நூற்றாண்டுகளாக சிக்கந்தர் மலை என்ற குறிப்பு உள்ளது. இங்கு இந்த மலையை இப்படித்தான் அழைக்க வேண்டும் என சொல்லுவது ஜனநாயகத் தன்மை இல்லை” எனத் தெரிவித்தார்.
தமிழாசிரியர் தேவராஜ் அதிசயராஜ் கூறுகையில், “மதுரை சிறப்பான நகரம். மதுரையைச் சுற்றிலும் மலைகள் இருக்கிறது. இதில் பசுமலை, யானை மலை என்பதெல்லாம் திருவிளையாடல் புராணத்தோடு சம்பந்தமுடைய பெயர்கள். இதில் திருப்பரங்குன்றம் மட்டும் சங்ககால இலக்கியங்களில் இருந்தே குறிப்பிடப்பட்ட மலையாக இருக்கிறது.
பாண்டிய மன்னர்களில் கூன் பாண்டியன் சமண சமயத்தினைத் தழுவியபோது, சமணர்கள் பலர் இங்கு வந்தனர். அவர்கள்தான் நாலடியார் போன்ற நூல்களைக் கொடுத்தார்கள். பிற்காலத்தில் கூன் பாண்டியன் சைவ சமயத்திற்கு மாறுகிறார். அப்போது, சமண முனிவர்கள், சமணர்கள் போன்றோரெல்லாம் கழுவேற்றப்பட்டதாக வரலாறு சொல்கிறது. அதனடிப்படையில் சமண சமயம் அழிந்துவிட்டது. எனவே, சமணர்கள் திருப்பரங்குன்றத்தில் வாழ்ந்துள்ளார்கள். அவர்களது படுகைகள் எல்லாம் திருப்பரங்குன்றத்தில் இன்றும் இருக்கிறது.
மலை யாருக்குச் சொந்தம்
பின் 1311ல் மாலிக் கபூர் படையெடுத்து வரும்போது, முகமது பின் துக்ளக்கின் ஆட்சியின் கீழ் மதுரை வருகிறது. அப்போது அவர் தன் மாநிலங்களில் ஒரு மாநிலமாக மதுரையை ஆக்கிக்கொண்டார். அது சிலருக்குப் பிடிக்கவில்லை. இதன்பின்னர் விஜயநகரப் பேரரசு தோன்றுகிறது. விஜயநகரப் பேரரசின் நோக்கம் இங்கிருக்கும் இஸ்லாமியர்களை அழித்துவிட்டு, இந்து சமய ஆட்சியை நிறுவ வேண்டும். அப்படி அவர்கள் நிறுவ வரும் காலக்கட்டத்தில்தான், கடைசி சுல்தானான சிக்கந்தருக்கும் நாயக்கர் மன்னர்களுக்கும் போர் நடக்கிறது. அதில் சிக்கந்தர் செல்லும்போது திருப்பரங்குன்றத்தில் கொலை செய்யப்படுகிறார். கொலை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறார். அவர் எங்கு அடக்கம் செய்யப்பட்டாரோ அது தர்கா. எனவே, சுல்தான் ஆட்சி முடிந்த உடனேயே தர்கா வந்துவிட்டது.
எனவே, திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தரையில் இருக்கிறது. மேலே தர்காவும், அதன் வடக்குப்பக்கத்தில் சமணர் படுகைகள் இருக்கிறது. இதுபோக கிறித்தவர்களும் வாழ்ந்துள்ளார்கள். எனவே நான்கு சமய மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்தார்கள்.
இந்த மலை யாருக்குச் சொந்தம் எனும் பிரச்னை வரும்போது, என்னைப் பொறுத்தவரையில் இது யாருக்கும் சொந்தம் என்று கொண்டாட முடியாது. ஏனெனில் இது மத நல்லிணக்க பூமி. இங்கு எல்லா மதத்தினரும் ஆதி காலத்தில் இருந்தே வாழ்ந்துள்ளார்கள்” எனத் தெரிவித்தார்.