நடவடிக்கையை தொடங்கிய அமெரிக்கா | நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள்.. முதற்கட்டமாக 104 பேர்!
அமெரிக்க அதிபராகப் பதவியேற்றிருக்கும் டொனால்டு ட்ரம்ப் பல அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, சட்டவிரோத குடியேற்றத்துக்குத் தடை, விசா கட்டுப்பாடு உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து வரி விதிப்பையும் அமலுக்கு கொண்டுவந்துள்ளார். குடியேற்றக் கொள்கையில் பல கெடுபிடிகளைக் காட்டி வரும் ட்ரம்ப், இந்தியாவிற்கும் கருணை காட்டவில்லை.
அதன்படி, அமெரிக்காவில் சுமார் 18 ஆயிரம் இந்தியர்கள் சட்டவிரோதமாகக் குடியேறி இருப்பதாக சொல்லப்படுகிறது. அவர்களையும் வெளியேற்றும் நடவடிக்கையில் ட்ரம்ப் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
சட்டவிரோத குடியேறிகள் விவகாரத்தில் பிரதமர் மோடி சரியான நடவடிக்கை எடுப்பார் என ட்ரம்ப் கடந்த வாரம் தெரிவித்திருந்த நிலையில், இந்த வெளியேற்றம் அரங்கேறியுள்ளது. அந்த வகையில், சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களில் ஒரு பகுதியினரை ராணுவ விமானம் மூலம் அமெரிக்கா வெளியேற்றியுள்ளது. இந்த தகவலை அமெரிக்க அதிகாரிகளும் உறுதிப்படுத்தினர்.
இந்த நிலையில், நேற்று டெக்சாஸில் இருந்து புலம்பெயர்ந்தோரை ஏற்றிக் கொண்டு வந்த C-17 என்ற ராணுவ விமானம், இன்று அமிர்தசரஸில் தரையிறங்கியுள்ளது. இந்த விமானத்தில் முதற்கட்டமாக 104 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். விமானத்தில் நாடு கடத்தப்பட்ட புலம்பெயர்ந்தோர் அனைவரும் இந்தியர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதில், தலா 30 பேர் ஹரியானா மற்றும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். 30 பேர் பஞ்சாப்பைச் சேர்ந்தவர்கள். இதில் உத்ததரப்பிரதேசம் மற்றும் சண்டிகரைச் சேர்ந்த தலா இரண்டு பேர், மகாராஷ்டிராவைச் சேர்ந்த மூன்று பேரும் அடக்கம். நாடு கடத்தப்பட்டவர்களில் 25 பெண்கள் மற்றும் 12 குழந்தைகளும் அடங்குவர். இதில் 4 வயது குழந்தையும் அடக்கம். மேலும் 104 புலம்பெயர்ந்தோரில் 48 பேர் 25 வயதுக்குட்பட்டவர்கள். 11 பணியாளர்கள் மற்றும் 45 அமெரிக்க அதிகாரிகள் இந்த நாடுகடத்தல் செயல்முறையை மேற்பார்வையிட்டனர்.
இதுகுறித்து அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகின் எந்தப் பகுதியிலும் உள்ள இந்தியர்களுக்கு, அவர்கள் இந்திய குடிமக்களாக இருந்து, காலாவதியாகி தங்கியிருந்தால் அல்லது அவர்கள் ஒரு குறிப்பிட்ட நாட்டில் முறையான ஆவணங்கள் இல்லாமல் இருந்தால், அவர்களின் தேசியத்தையும் அவர்கள் உண்மையில் இந்தியர்களா என்பதையும் சரிபார்க்க ஆவணங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டால், நாங்கள் அவர்களைத் திரும்பப் பெறுவோம். அப்படி நடந்தால், நாங்கள் விஷயங்களை முன்னெடுத்துச் சென்று அவர்கள் இந்தியா திரும்புவதற்கு வசதி செய்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.
பியூ ஆராய்ச்சி மையத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் இருந்து சுமார் 7,25,000 சட்டவிரோத குடியேறிகள் அமெரிக்காவில் வசிக்கின்றனர். இது மெக்சிகோ மற்றும் எல் சால்வடாருக்குப் பிறகு அங்கீகரிக்கப்படாத குடியேறிகளின் மூன்றாவது பெரிய மக்கள்தொகையாக உள்ளது. தற்போது நாடுகடத்தலை எதிர்கொண்டுள்ள பஞ்சாபைச் சேர்ந்த பலர், லட்சக்கணக்கான ரூபாயைச் செலவழித்து சட்டவிரோத வழிகளில் அமெரிக்காவிற்குள் நுழைந்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்திலிருந்து நாடு கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலோர் குருதாஸ்பூர், அமிர்தசரஸ், டர்ன் தரன், ஜலந்தர், நவன்ஷஹர், பாட்டியாலா, மொஹாலி மற்றும் சங்ரூர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று பஞ்சாப் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர்களில் சிலர் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்துள்ளனர். மற்றவர்கள் விசா காலம் முடிந்தும் தங்கியிருந்துள்ளனர்.