விஜயகாந்தின் தளபதி டூ ஈரோடு கிழக்கில் திமுகவின் வேட்பாளர்.. யார் இந்த சந்திரகுமார்?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சமீபத்தில் மறைந்ததையடுத்து அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
கடந்த முறைப் போலவே காங்கிரஸ் கட்சிதான் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அக்கட்சி போட்டியிடாது என்ற அறிவிப்பு வெளியானது. இதுதொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டிருந்த அறிக்கையில், “INDIA கூட்டணியின் தமிழ்நாடு தலைவராக இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டதால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் போட்டியிடுவார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது” தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், INDIA கூட்டணியின் திமுக வேட்பாளரை வெற்றிபெறச் செய்வோம் எனவும் காங்கிரஸ் தெரிவித்திருந்தது.
இதுகுறித்து புதிய தலைமுறைக்கு தொலைபேசி வாயிலாக பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக போட்டியிடுவதில் தங்களுக்கு எந்த வருந்தமும் இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.
யார் இந்த சந்திரகுமார்?
ஈரோடு கிழக்கில் திமுக களமிறங்கினால் வேட்பாளராக யார் தேர்வு செய்யப்படலாம் என்ற கேள்வி எழுந்தது. பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர் திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி.சி.சந்திரக்குமார். தேமுதிகவில் அரசியல் பயணத்தைத் தொடங்கி, விஜயகாந்தின் தளபதியாக இருந்த வி.சி.சந்திரகுமார் தற்போது திமுகவில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார்.
தேமுதிக தொடங்கப்பட்ட காலத்திலிருந்து அந்தக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் கள வீரராகவும் இருந்தவர் வி.சி.சந்திரக்குமார். இன்னும் சொல்லப்போனால், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முன்னணித் தளபதிகளில் ஒருவராக இருந்தவர் சந்திரக்குமார். 2011-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், ஈரோடு கிழக்கு தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் முத்துச்சாமியைவிட, பத்தாயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அப்போது, ஒட்டுமொத்தமாக தேமுதிக 29 இடங்களைப் பெற்று தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியாகவும் விளங்கியது. கட்சியின் தலைவர் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். அப்போது தேமுதிக கொறாடாவாக செயல்பட்டவர் வி.சி.சந்திரக்குமார். சட்டசபையிலும் விஜயகாந்தின் தளபதியாகச் செயல்பட்டார்.
திமுக வேட்பாளர்
2016 சட்டமன்றத் தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தது தேமுதிக. அதனை எதிர்த்து சந்திரக்குமார், சேலம் பார்த்திபன், சேகர் உள்ளிட்ட மூன்று மாவட்டச் செயலாளர்கள் போர்க்கொடி உயர்த்தினர். கூட்டணியை மறுபரீசீலனை செய்ய கெடு விதித்தனர். ஆனால், தேமுதிக தலைமை அதனை பொருட்படுத்தவில்லை. அதனைத் தொடர்ந்து, மக்கள் தேமுதிக என்கிற அமைப்பைத் தொடங்கி, திமுக கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்தித்தனர். அப்போது, ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார் சந்திரக்குமார்.
பின்னர், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. பின்னர் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டு திருமகன் ஈ.வேரா போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதனால் சந்திரக்குமார் போடியிட முடியாமல் போனது. அவரின் திடீர் மறைவுக்குப்பிறகு அவரின் தந்தை ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றிபெற்றார். சமீபத்தில் அவரும் உடல்நலக் குறைவால் மரணமடைய தொகுதி காலியானதாக சட்டமன்ற செயலகம் அறிவித்தது. திமுக போட்டியிடலாம் என்ற யூகங்கள் எழுந்த நிலையில், பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர் விசி சந்திரகுமார். தற்போது அவரே வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஒரு காலத்தில், களத்தில் விஜயகாந்தின் தளபதியாக, சட்டமன்றத்தில் தேமுதிக கொறடாவாக இருந்த சந்திரக்குமார் திமுகவின் சார்பில் சட்டமன்றத்துக்குள் நுழைவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.