சீமானின் பெரியார் விமர்சனம்.. எதிர்வினை ஆற்றாத விஜய்.. இங்கு பாதி அங்கு பாதியா?
பெரியார் தொடர்பான சீமானின் கருத்துக்கு தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. பல இயக்கங்கள் சீமானுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்த நிலையில், பல காவல்நிலையங்களில் சீமானுக்கு எதிராக புகார்கள் பெறப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போதுவரை தமிழ்நாடு முழுவதும் 61 வழக்குப்பதிவுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
“சீமானின் பேச்சு அரசியல் உள்நோக்கமுடையது, பாஜகவுக்கு ஆதரவான கருத்து” என அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இதற்கு கண்டங்களை தெரிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சீமானின் கருத்து ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால், பெரியாரை கொள்கைத் தலைவராக ஏற்றுள்ள விஜய் எந்த ஒரு கருத்தையும் பதிவு செய்யாதது விவாதத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக பேச மூத்த பத்திரிகையாளர் சுகுணா திவாகரைத் தொடர்பு கொண்டு சில கேள்விகளை முன்வைத்தோம்.
விஜய் பெரியாரை கொள்கைத் தலைவராக கொண்டபின், பெரியார் மீதான சீமானின் விமர்சனம் இன்னும் அதிகமாக இருப்பதாக எடுத்துக்கொள்ளலாமா?
சீமான் தொடர்ச்சியாக திராவிட எதிர்ப்பு மற்றும் பெரியார் எதிர்ப்பினை முன்வைத்து வருகிறார். இப்போது சற்றே கூடுதலாக முன்வைக்கிறார். நீங்கள் சொல்வதுபோல், விஜய் பெரியாரை தங்களது கொள்கைத் தலைவராக முன்வைத்தபின், சீமான் தனது எதிர்ப்பினை தீவிரமாகவே பதிவு செய்கிறார். முதலில் சீமான் அரசியலில் விரக்தி நிலையில் இருக்கிறார். அவரது கட்சி பல மாவட்டங்களில் கூண்டோடு கலைந்து வருகிறது.
திமுக - அதிமுக இல்லாமல் வேறு யாருக்காவது வாக்களிக்க வேண்டும் என்று நினைக்கும் மக்களது தேர்வாக நாம் தமிழர் கட்சி உள்ளது. அவர்களது வாக்குவங்கியும் அதுதான். அதனால்தான் அவர்களால் 8% வரை வாக்குகள் வாங்க முடிந்தது.
சீமான் திராவிடத்தை எதிர்க்க வேண்டும் என்று சொன்னாலும்கூட முழுக்க முழுக்க திமுகவை மட்டுமே எதிர்த்துப் பேசுவார். அதிமுகவைப் பற்றி ஒரு வார்த்தைக்கூட பேசமாட்டார். திமுக எதிர்ப்பு வாக்கு என்பது கலைஞர் காலத்தில் இருந்து இருக்கக்கூடிய விஷயம். அதிமுகவின் அடிப்படையே திமுக எதிர்ப்பு வாக்குகள்தான். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவிற்கு கவர்ச்சிகரமான தலைமை இல்லாதபோது அந்த வாக்குகள் சிதறுகிறது. அதில் கணிசமான வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கும் பாஜகவுக்கும் செல்கிறது.
நாம் தமிழர் கட்சிக்கு இருக்கக்கூடிய வாக்குகளே விஜய்க்கு செல்லக்கூடிய வாய்ப்புகளும் இருக்கிறது.
தற்போது விஜய் அரசியலுக்கு வரும்போது நாம் தமிழர் கட்சிக்கு இருபக்கங்களில் இருந்தும் சேதாரம் ஆகிறது. ஏனெனில், சீமானைப்போலவே விஜய்யும் திமுக எதிர்ப்பினை முன்வைத்து அதிமுகவை பெரிதாக எதிர்ப்பதில்லை. அதேபோல், அதிமுகவிற்கு வாக்களிக்கும் மக்கள் நட்சத்திர தலைமைக்கு பழக்கப்பட்டவர்கள். அந்தவகையில் விஜய்க்கு வாக்களிக்க வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக நாம் தமிழர் கட்சிக்கு வரக்கூடிய வாக்குகள் குறையும். அதுமட்டுமின்றி, நாம் தமிழர் கட்சிக்கு இருக்கக்கூடிய வாக்குகளே விஜய்க்கு செல்லக்கூடிய வாய்ப்புகளும் இருக்கிறது.
விஜய் தன்னுடன் கூட்டணி வைப்பார் என சீமான் நினைத்தார். ஆனால், விஜய் அதை சாதுர்யமாக கத்தரித்துவிட்டார். கொள்கைத் தலைவர்களாக பெரியாரையும் அம்பேத்கரையும் ஏற்றுக்கொண்டார். இதன் மறுநாளில் இருந்தே சீமான் விஜய்யை கடுமையாக தாக்க ஆரம்பித்துவிட்டார்.
சீமானின் பெரியார் எதிர்ப்பு பலரும் சொல்வதுபோல் பாஜகவுக்குத்தான் சாதகமாக அமையுமா?
மொத்தமாக சீமானின் திராவிட எதிர்ப்பு இந்துத்துவத்திற்கு வலுசேர்க்கும் விதமாகத்தான் இருக்கிறது. பாஜகவைப் பொறுத்தவரை திமுக, பெரியார் என இரண்டைத்தான் எதிரிகளாக கருதுகிறார்கள். அம்பேத்கர் உட்பட அனைத்தையும் உச்சரிக்கிறார்கள். பெரியாரிடம் கடவுள் எதிர்ப்பு இருப்பதினால் அவரை உச்சரிக்கவே முடியவில்லை. மேலும், இந்திய அளவில் திமுக தங்களது எதிரி என்பதையும் கொண்டு செல்கிறார்கள்.
இத்தகைய சூழலில் பெரியாரையும், திராவிடத்தையும் வீழ்த்துவோம் என சீமான் பேசுகிறார். இதுதான் என் வேலைத்திட்டம் என்கிறார். அப்படியானால், பாஜக உடனான மறைமுக கூட்டணியில் இதைப்பேசுகிறாரா அல்லது தன்னுடைய செயல்பாடுகளின்மூலம் மறைமுகமாக பாஜகவுக்கு உதவுகிறாரா என்ற கேள்வி எழுகிறது. ஆதாரமில்லாமல் நம்மால் எதுவும் சொல்லமுடியாது. ஆனால், முழுக்க முழுக்க பாஜகவுக்கு ஆதரவாகத்தான் இதுபோகும்.
சீமான் கருத்து மக்கள் மத்தியில் எடுபடுமா?
இன்றைய சூழல் பெரிதான வாசிப்புப் பழக்கமின்றி தகவல் தொழில்நுட்ப உலகமாகவும் இணைய உலகமாகவும்தான் இருக்கிறது. சீமான் பெரியாரைப் பற்றி ஒன்று சொல்கிறார். ஆனால், அதை புத்தகத்தில் படித்து சொல்லவில்லை., அவரே வாட்ஸ் அப்பில் பார்த்துதான் சொல்கிறார். புத்தகம் படிப்பவர்கள் அதை அம்பலப்படுத்துகிறார்கள். வெறுமனே வாட்ஸ் அப் தகவலை நம்பக்கூடிய தலைமுறையில் சீமானுக்கு செல்வாக்கு இருப்பது உண்மைதான். இதுதொடர்ச்சியாக வெற்றி பெறும் என்றெல்லாம் சொல்லமுடியாது.
பெரியார் கடவுள் மறுப்பாளராக இருந்தாலும், கடவுளை நம்பும் தமிழ்நாட்டு மக்களுக்கு பெரியார் மேல் எப்போதும் ஆதரவுப் பார்வை உண்டு. பெரியார் என்பவர் வெறும் கடவுள் மறுப்பாளர் மட்டுமல்ல. இங்கு பல்வேறு சமூகநீதி விஷயங்களுக்கு பெரியார் காரணமாக இருந்திருக்கிறார். எனவே, தமிழர்களுக்கு பெரியார் மீது பற்றுதல் எப்போதும் இருக்கிறது.
இந்நிலையில் பெரியார் எதிர்ப்பினை எப்போதும் பேசும்போது, சீமானுக்குத்தான் எதிராக முடியும். விஜய் பெரியாரையும் அம்பேத்கரையும் முழுதாக உள்வாங்கிக்கொண்டு சொல்லவில்லை என்றாலும் கூட அந்த இளைஞர்கள் மத்தியில் பெரியாரையும் அம்பேத்கரையும் விஜய் கொண்டு செல்கிறார். அவர்கள் எல்லாம் சீமானை எரிச்சலாக பார்க்கக்கூடிய சூழல் உருவாகும். அப்படியானால் சீமான் தனிமைப்பட்டு போய்விடுவார்.
பெரியாரை கொள்கைத் தலைவர் என்கிறார் விஜய்.. தற்போதுவரை எந்த ஒரு கருத்தையும் பதிவு செய்யவில்லையே?
அமித்ஷா அம்பேத்கரைப் பற்றிப் பேசும்போது, எல்லோரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தபின் மிக சாகவாசமாக தனது எதிர்ப்பினைத் தெரிவித்தார் விஜய். இப்போதுகூட சீமான் பெரியாரைப் பற்றி பேசி மூன்று நாட்கள் ஆகிறது. தற்போதுவரை விஜய்யிடம் இருந்து எந்த ஒரு எதிர்வினையும் வரவில்லை என்பது அதிருப்தியைத்தான் அளிக்கிறது.
இன்று கூட சினிமா ஷூட்டிங் இருப்பதாக தெரிவிக்கிறார்கள். (மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளாதது) சினிமா ஷூட்டிங் இருக்கிறது என்றால் அதையெல்லாம் முடித்துவிட்டே கட்சி ஆரம்பித்திருக்கலாமே. அரசியலை இங்கு பாதி அங்கு பாதி என நடத்துவது சரியான விஷயமாக இருக்குமா? உங்களால் கூட்டத்திற்குத்தான் வரமுடியவில்லை. பெரியாரை இப்படி பேசிவிட்டார் என்பதற்கு எதிராக வழக்கம்போல் ட்வீட்டாவது போடலாம் அல்லவா.
அவர்களது கட்சிக்குள்ளேயே சலசலப்பு இருக்கிறது. விஜய் முழுமையான அரசியல்வாதியாக எப்போது மாறுவார் என்பதே தெரியவில்லை. இன்னும் பகுதிநேர அரசியல்வாதியாகத்தான் இருக்கிறார். இப்படி இருந்தால் அவர் அரசியலில் நிலைத்து நிற்பது மிக மிக கஷ்டம்.
பெரியாரை தீவிரமாக மக்கள் மத்தியிலும் தற்போதைய இளைஞர்கள் மத்தியிலும் கொண்டு செல்வதில் திமுக சரியாக செயல்படவில்லையா?
தமிழ்நாட்டில் பெரியார் இயக்கங்களே அதிகமாக இருக்கிறது. திமுக என்பது பெரியாரிடம் இருந்து விலகி வந்த தேர்தல் அரசியல் கட்சி. பெரியாரை கொள்கை வழிகாட்டியாக ஏற்றுக்கொள்கிறார்கள் என்றாலும்கூட கடவுள் மறுப்பு, தேர்தல் மறுப்பு எனும் பெரியார் கொள்கைகளில் இருந்து மாறுபட்டு நிற்கிறார்கள். பெரியாரை தீவிரமாக கொண்டுபோகக்கூடிய பொறுப்பு திமுகவைவிட பெரியார் இயக்கங்களுக்கும், முற்போக்கு சக்திகளுக்குத்தான் இருக்கிறது. குறிப்பாக, பெரியார் என்பவர் திராவிட இயக்கங்களுக்கு மட்டும் சொந்தமான தலைவர் அல்ல. பலரும் அவரை தூக்கிக் கொண்டு செல்கிறார்கள்"