பாஜக ஊதுகுழலாக செயல்படுகிறாரா சீமான்..? பதிலளிக்கிறார் தோழர் தியாகு..!
பெரியார் தொடர்பான சீமானின் கருத்துக்கு தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. பல இயக்கங்கள் சீமானுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்த நிலையில், பல காவல்நிலையங்களில் சீமானுக்கு எதிராக புகார்கள் பெறப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சீமானின் கருத்து அரசியல் உள்நோக்கமுடையது, பாஜகவுக்கு ஆதரவான கருத்து என அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இதற்கு கண்டங்களை தெரிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சீமானின் கருத்து ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் தியாகுவிடம் பேசினோம்.
பெரியார் குறித்த சீமானின் தொடர் விமர்சனங்களை எப்படி எடுத்துக்கொள்வது? எதனால் இப்படிப் பேசுகிறார்?
சீமான் அரசியலுக்கு புதிதாக வந்தவர் இல்லை. எனக்குத் தெரிந்து எங்களின் இயக்கம் உட்பட பல்வேறு தமிழ்தேசிய மேடைகளில் அவர் பேசி இருக்கிறார். பெரியாரை பெரிதும் சிலாகித்து, முழுக்க முழுக்க பெரியாரின் செய்திகளை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் சிறப்பாகப் பேசக்கூடியவர். திடீரென்று இந்த மாற்றம் எப்படி வந்தது என்பதற்கு அவர்தான் விளக்கம் சொல்ல வேண்டும். ஒருவர் தன் கருத்தை மாற்றிக்கொள்வதில் பிழையில்லை. ஆனால், அந்த கருத்தை அவர் மாற்றிக்கொள்வதற்கான காரணங்களை அவர் சொல்ல வேண்டும். இன்னின்ன நூல்களைப் படித்தேன், அரசியலில் இந்த அனுபவம் கிடைத்தது என சொல்லும்பட்சத்தில் அதைப் புரிந்துகொள்ளலாம், விவாதிக்கலாம்.
சீமானின் விஷயத்தில் அப்படியில்லை. அவரது இந்த பேச்சு செயல்அளவில் யாருக்கு உதவுகிறது என்று பார்க்க வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் பாஜக நுழைவதற்கு, கால் வைப்பதற்கு ஒரு தளத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக சீமான் இந்த வேலைகளைச் செய்வதாகத் தெரிகிறது. சீமான் தமிழ்நாட்டில் ஒரு திராவிட வெறுப்பை விதைத்து, திராவிட கருத்துகளால் பெரியாரின் கருத்துகளால் பக்குவப்பட்டுள்ள தமிழ்மண்ணைச் சிதைத்து ஆரியம் அல்லது பார்ப்பன இந்துத்துவம் ஊடுருவதற்கு வழியமைத்துக் கொடுப்பதாக நான் நினைக்கிறேன்.
சீமான் சொல்வது போல் பெரியார் தமிழை இழிவுபடுத்தினாரா?
பெரியாரின் அரசியல் பொதுவாழ்க்கை என்பது மிக நீண்ட ஒன்று. இந்த மிக நீண்ட பொதுவாழ்க்கையில் பெரியார் பல்வேறு கருத்துகளை பல்வேறு தருணங்களில் பேசி இருக்கிறார். அவரது பேச்சில் முரண்பாடு காண்பது ஒன்றும் பெரிய அதிசயம் இல்லை. முரண்பாடுகள் இல்லையென்றால்தான் ஆச்சரியப்பட வேண்டும். அந்த முரண்பாடுகள் வளர்ச்சியின் அடையாளமா? எடுத்துக்கொண்ட நோக்கத்திற்கு உதவியாக இருக்கிறதா? என்று மட்டும்தான் பார்க்க வேண்டும்.
ஒரு சில சந்தர்ப்பங்களில்தான் பெரியார் தமிழ் குறித்து கருத்துகளைத் தெரிவித்துள்ளார். உதாரணத்திற்கு, தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என்பது. இதை அவர் எந்த சந்தர்ப்பங்களில் சொல்லி இருந்தாலும் அது நமக்கு உவப்பான கருத்து அல்ல. தமிழ் ஒரு உயர்தனிச் செம்மொழி. இப்படி ஒரு செவ்வியல் மொழியை காட்டுமிராண்டி மொழி என வர்ணிக்கத் தேவையில்லை. அதேவேளையில், இந்த ஒரு கருத்தை வைத்துக்கொண்டு பெரியார் தமிழை இழிவுபடுத்திவிட்டார் என்று ஒட்டுமொத்தமாக ஒரு தீர்ப்பினை சுமத்தவேண்டிய தேவையில்லை.
பெரியாரிய அமைப்புகள் விமர்சிப்பது போல பாஜகவின் ஊதுகுழலாக செயல்படுகிறாரா சீமான்?
சீமான் செய்யக்கூடிய அரசியல் யாருக்கு உதவுகிறது என்பதைப் பார்க்க வேண்டும். சமூகநீதிப் போராட்டம் என்பது நீண்ட நெடுங்காலமாக நடைபெற்று வரும் போராட்டம்; சனாதானத்திற்கும், சமூகநீதிக்கும் இடையிலான ஒரு போராட்டம். சமூக நீதிக்காக இயங்கும் சக்திகளை பலவீனப்படுத்த வேண்டும் என்பது பாஜகவின், பார்ப்பன இந்துத்துவத்தின், ஆர் எஸ் எஸ்ஸின் நோக்கம். இவர்களுக்கு தடையாக இருப்பது பெரியாரின் கருத்துகள் இங்கு நல்ல விளைச்சலைக் கண்டிருப்பது. பெரியாரின் கருத்துகளின் அடிப்படையில் பல அரசியல் இயக்கங்கள் இங்கு இயங்குகின்றன. இவற்றையெல்லாம் உடைத்து, பெரியாரை ஒன்றுமில்லை என்றாக்கி, இந்த மண்ணை தங்களுக்கு ஏற்ப உழுதுகொள்ள பாஜக சீமானைப் பயன்படுத்துகிறது. இதுதான் உண்மை. சீமானுக்கு இது தெரியாது என்றெல்லாம் யாரும் சொல்லமுடியாது. அவர் ஒன்றும் அரசியல் தெரியாதவரல்ல. தான் செய்யும் வேலை இதற்குத்தான் பயன்படும் என்று அவருக்குத் தெரியும். தெரிந்தேதான் இதைச் செய்கிறார்.
அதுமட்டுமின்றி, தன்னை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்ற பதவி வெறி அவருக்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் எந்த காலத்திலும், தன்னை முதலமைச்சர் ஆக்குங்கள், நான்தான் முதலமைச்சர் என எந்தஒரு அரசியல் தலைவரும் சொன்னதில்லை. கட்சியே பார்த்து ஒருவரை முதல்வராக முன்னிறுத்தி தேர்தலில் பரப்புரை செய்வார்கள். சீமானுக்கு பதவி வெறி இருக்கிறது. அதனால் இப்படிச் செய்வதாக இருக்கலாம். விளைவு என்னவென்றால் அவரால் ஒருநாளும் முதலமைச்சராக முடியாது, அவரது கட்சி ஒருநாளும் வெற்றி பெற முடியாது. ஆனால், அவரால் பாஜகவுக்கான வழியை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்., அதைத்தான் அவர் செய்துகொண்டிருப்பதாக நான் நினைக்கிறேன்.
பெரியாரின் படைப்புகளை நாட்டுடமை ஆக்க வேண்டிய தேவை இருக்கிறதா? சீமான் சொல்வதுபோல் நாட்டுடமை ஆக்கினால் பெரியாரின் கருத்துகள் முழுவதுமாக தெரியவருமே?
பெரியாரின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட வேண்டும் என்ற விவாதங்கள் நடந்தபோதெல்லாம் சீமான் ஒன்றும் சொன்னது இல்லை. இப்போதுகூட, ஆதாரங்களைக் காட்டுங்கள் என்ற கேள்விக்குத்தான் இப்படிச் சொல்கிறார். ஆதாரம் மற்றவர்களிடம்தான் இருக்கிறது என்கிறார். அவர் சொல்வதையே எடுத்துக்கொள்வோம்; அப்படியானால், அவர் எதைவைத்துப் பேசினார். அவர் சொல்வதற்காகவாவது எதாவது ஒரு ஆதாரம் இருந்துதானே ஆகவேண்டும். இதிலிருந்தே அவர் ஆதாரம் இன்றி பேசுகிறார் என்பது தெரியவில்லையா. பெரியாரின் படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை தனி. எல்லோருக்கும் அந்த கோரிக்கை இருக்கிறது. சீமான் வந்து அதற்கு உதவவேண்டும் என்ற அவசியம் இல்லை.
இந்த விவகாரத்தில் திமுகவின் எதிர்வினை போதுமானதாக இருக்கிறதா?
திராவிட இயக்கங்கள், தமிழ்தேசிய இயக்கங்கள் என எல்லோரும் பாஜக எதிர்ப்பில் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். அதில் மாற்றுக்கருத்து இல்லை. அதேபோல் பெரியார் கருத்துகளை உயர்த்திப் பிடிப்பதில் மற்றவர்களை விட அதிகமான பொறுப்பு திராவிடர் கழகங்களுக்கு இருக்கிறது. திமுக தேர்தலில் நிற்கத்தொடங்கி 1967 தேர்தல் வரை ஒவ்வொரு தேர்தலிலும் பெரியார் திமுகவுக்கு எதிராக இருந்தார். பெரியாரை மிகக்கடுமையாக தாக்கி எழுதிய ஏடுகளில் முரசொலிக்கு முக்கிய இடம் உண்டு. இதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. அதையெல்லாம் மீறி இன்று ஒற்றுமை தேவைப்படுகிறது என சொல்லுகிறோம்.
பெரியாரின் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ கொள்கை, ‘தனித்தமிழ்நாடு கொள்கை’ போன்றவற்றை திமுக ஏற்றுக்கொண்டது இல்லை. எனவே, ஓரளவு வரைதான் திமுகவால் பெரியார் பக்கம் நிற்க முடியும். ஏற்கெனவே அண்ணா, தனித்தமிழ்நாடு கொள்கையை கைவிட்டு மாநில சுயாட்சி எனும் கொள்கையை ஏற்க ஆரம்பித்துவிட்டார். ஆனால், பெரியார் கடைசி வரை தனித்தமிழ்நாடு கொள்கையில் ஊன்றி நின்றார். அதுமட்டுமின்றி ஆளும் கட்சியாக இருப்பதால் அவர்களுக்கு மேலும் பல கவலைகள் இருக்கும், சீமான் என்பது யானையைக் கடிக்கும் கொசு போல்தான். மேலும் திமுக தத்துவத்தளத்தில் அவ்வளவு தீவிரமாக செயல்படவும் இல்லை. ஆட்சி, மக்கள் நலத்திட்டங்கள் போன்றவற்றைத்தான் பெரிதாக நம்பியுள்ளார்கள்.