மேகதாது அணை விவகாரம்| 30 பேர் கொண்ட குழுவை அமைத்த கர்நாடகா.. EPS விமர்சனம்!
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா அரசு 30 பேர் அடங்கிய குழுவை அமைத்துள்ளது. இதற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் செயல்பாடுகளை விமர்சித்துள்ளார். காவிரி மேலாண்மை ஆணையத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வலிமையான வாதங்களை முன்வைக்காததால், இந்த நிலை ஏற்பட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகம், கர்நாடக விவசாயிகளின் உயிர்நாடியாக உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது பகுதியில் அணைகட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழகஅரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் சூழலில், இதற்கான விரிவான திட்டஅறிக்கையை தயாரிக்க கர்நாடகாஅரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதிஅளித்திருந்தது.
இந்நிலையில், திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான பணிகளை செய்வதற்காக 30 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்னோட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை இவர்கள் மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
மேகதாது திட்டத்தை அமல்படுத்துவதற்கு கர்நாடகா குழுஅமைத்துள்ளது தொடர்பாக, தமிழ்நாடு அரசை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிகே.பழனிசாமி விமர்சித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பதிவில், காவிரி மேலாண்மை ஆணையத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வலிமையான வாதங்களை எடுத்துரைக்காமல், ஏனோதானோ என திமுக அரசு செயல்பட்டதால், இந்த துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக சாடியுள்ளார்.
திமுக தலைமை தங்களின் குடும்பத்தொழிலை பாதுகாக்க, கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு லாலி பாடும் போக்கை கடைபிடிப்பதாக விமர்சித்துள்ளார். தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க, சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வரை, எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தியுள்ளார்
தமிழக அரசு அனுமதிக்காது..
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா அரசின் முயற்சியை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். அவர்வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மேகதாது அணை தொடர்பான வழக்கில் தமிழக அரசு மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதேப் போன்று மேகதாது அணையால் தமிழகத்திற்கு ஏற்படும் பாதிப்பு குறித்து மத்திய நீர்வளக் குழுமத்திடமும் விரிவான மனு அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு காவிரி டெல்டா விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியுள்ள அமைச்சர் துரைமுருகன், கர்நாடகா அரசின் முயற்சியை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என தெரிவித்துள்ளார்.

