”மகளிர் உரிமைத் தொகை உயரும்..” - முதல்வர் ஸ்டாலின் கொடுத்த அப்டேட்
மகளிர் உரிமைத் தொகை கூடுதலாக 17 லட்சம் மகளிருக்கு வழங்கப்படும் விரிவாக்க திட்டத்தை என முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' என நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் சாதனை பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்.
மகளிர் உரிமைத் தொகைக்கான பட்டியலில் விடுபட்டவர்களான கூடுதல் 17 லட்சம் மகளிருக்கு உரிமைத் தொகை கிடைக்கும் வகையிலான 2ஆம் கட்ட விரிவாக்க திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார்.
‘வெல்லும் தமிழ்ப்பெண்கள்’ என்ற பெயரில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்கள் ஒன்றிணைந்து, தங்களின் வெற்றிக்கதைகளையும் பெண்கள் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசு செய்துவரும் முன்னெடுப்புகள் குறித்தும் புகழ்ந்து பேசினர்.
கௌரவிக்கப்பட்ட சாதனை பெண்கள்..
வெல்லும் தமிழ்ப் பெண்கள் நிகழ்ச்சியில் ஐபிஎஸ், ஐஏஎஸ், ஐஎஃஎஸ் அதிகாரிகள், காவலர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு பெண்கள் மேடையில் ஏற்றி கவுரவிக்கப்பட்டனர். மேலும் அரசின் திட்டத்தால் பயனடைந்த பெண்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.
அப்போது வாய் பேச இயலாத பெண் ஒருவர் சைகை மொழியில் தனது கருத்துகளை கூறினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த பெண் ஒருவர் பேசுகையில், ”திருப்பரங்குன்றம் மலை மேல நின்னு ஜெய்ச்சுட்டேன் முருகா-னு கத்திட்டு வந்திருக்கேன்” என்று கூறி தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து சமூக சேவகர் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் மற்றும் பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன் ஆகியோருக்கு தமிழக அரசு சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. முதல்வர் மு.க ஸ்டாலின் நினைவுப் பரிசை வழங்கி கவுரவித்தார்.
அதனைத் தொடர்ந்து 101 வயதான கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் பாடல் பாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
மகளிர் உரிமைத்தொகை உயரும்..
வெல்லும் தமிழ்ப் பெண்கள் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மகளிர் முன்னேற்றத்திற்கான புதிய அத்தியாயம், ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில்தான் தொடங்கியதென்று, வரலாற்றில் எழுதப்படும். தலைநிமிரும் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்ந்து நடைபோட, நிச்சயம் உரிமைத்தொகை உயரும் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பெண்ணுரிமையில் இந்தியாவிற்கே தமிழ்நாடுதான் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. குடும்பத் தலைவிகளின் உழைப்பை இந்திய வரலாற்றிலேயே முதன்முதலாக அங்கீகரித்த அரசு திராவிட மாடல் அரசு என பெருமிதம் தெரிவித்துள்ளார்.

