சென்னை| 2 நாட்களில் ரூ.57 லட்சம் பறிமுதல்.. தேர்தல் பறக்கும் படை அதிரடி!
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான நடவடிக்கையாக, சென்னை மாவட்டத்தில் பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுக்கள் மூலம் கடந்த 2 நாட்களில் ரூ.57,55,195 ரொக்கப் பணம் மற்றும் 12.85 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டதால், அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டு செயல்முறை அதாவது, Standard Operating Procedure மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி, முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் ரூ.10,000/-த்திற்கு மேல் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் ரூ.50,000/- மேல் ரொக்கமாக கொண்டு செல்லப்படும் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும்.
அந்த வகையில், பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் மூலம் கடந்த 2 நாட்களில் முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.57,55,195/- ரொக்கப் பணம் மற்றும் 12.85 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள் என்ற வீதம், 48 பறக்கும் படைகளும், 3 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் என்ற வீதம், 48 நிலையான கண்காணிப்புக் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இக்குழுக்கள் தேர்தல் விதிமீறல்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை கண்காணித்து அதன் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதனடிப்படையில், நேற்று முன் தினம் வாகன சோதனையின்போது பறக்கும் படை குழுவினரால் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரொக்கப் பணம் துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் ரூ.1,23,200-ம், ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் ரூ.1,00,000-ம், விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் ரூ.1,08,000-ம், வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் ரூ.1,00,000-ம், மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரால் துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் ரூ.35,000,00-ம், விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் ரூ.1,46,500 என மொத்தம் ரூ.40,77,700/- ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் 12.85 கிலோ வெள்ளி பொருட்கள் தேர்தல் பறக்கும் படை குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நேற்று நடத்திய வாகன சோதனையின்போது பறக்கும் படை குழுவினரால் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரொக்கப் பணம் சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் ரூ.1,42,400-ம், வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் ரூ.88,500 மற்றும்
நிலையான கண்காணிப்புக் குழுவினரால் டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியில் ரூ.3,67,180-ம், பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் ரூ.4,00,000-ம், எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் ரூ.5,07,015-ம், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் ரூ.1,72,400-ம், என மொத்தம் ரூ.16,77,495 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த 2 நாட்களில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரால் மொத்தம் ரூ. 57,55,195/- ரொக்கப் பணம் மற்றும் 12.85 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இப்படி அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்ட ரொக்கமான பணமோ அல்லது பொருட்களோ Appellate authority என்று சொல்லப்படு மேல்முறையீட்டு குழுவின் விசாரணையில் முறையான ஆவணங்களை தாக்கல் செய்யும் பட்சத்தில் மீண்டும் உரிய நபரிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணமோ அல்லது பொருட்களோ ஒப்படைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

