நட்சத்திர தொகுதி | மதுரை மேற்கில் ஹாட்ரிக் அடித்த செல்லூர் ராஜு.. இந்த முறை வெல்வாரா..?
மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, 2007இல் தோல்வியடைந்த பின்னர், 2011, 2016, 2021 ஆகிய மூன்று சட்டமன்ற தேர்தல்களில் ஹாட்ரிக் வெற்றி பெற்றார். இந்த தொகுதி, பல முக்கிய அரசியல் தலைவர்களை உருவாக்கியதுடன், அதிமுகவின் வெற்றியை தொடர்ந்து உறுதிப்படுத்தியுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது அரசியல் பயணத்தில் போட்டியிட்ட ஒரே தொகுதி மதுரை மேற்கு மட்டும்தான். 2006இல் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற சண்முகம் எதிர்பாராதவிதமாக உயிரிழந்த நிலையில், 2007இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் முதன்முறையாக இந்த தொகுதியில் போட்டியிட்டார் செல்லூர் ராஜூ. அந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கே. எஸ்.கே.ராஜேந்திரனிடம் செல்லூர் ராஜூ தோல்வியை தழுவினார். தோல்வியில் தொடங்கினாலும் அதன் பின்னர் நடைபெற்ற 2011, 2016, 2021 ஆகிய மூன்று சட்டமன்ற தேர்தல்களிலும் ஹாட்ரிக் வெற்றி பெற்றார்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் அவர் 10 ஆண்டு காலம் கூட்டுறவுத்துறை அமைச்சராக வலம் வந்ததற்கு மதுரை மேற்கு தொகுதியே அடித்தளமாக அமைந்தது. செல்லூர் ராஜூ மட்டுமல்ல, தமிழ்நாட்டில் முதலமைச்சர், சபாநாயகர், அமைச்சர்கள் என பலரை அடையாளம் காட்டிய தொகுதி மதுரை மேற்கு. 1980 தேர்தலில் இந்த தொகுதியில் வென்றுதான் எம்.ஜி.ஆர் இரண்டாம் முறையாக முதல்வராக பதவியேற்றார்.
திமுகவின் பொன்.முத்துராமலிங்கம், அதிமுகவின் வளர்மதி ஜெபராஜ் ஆகியோர் இந்த தொகுதியில் வென்று அமைச்சரானார்கள். திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தந்தை பி.டி. ஆர்.பழனிவேல் ராஜன் சபாநாயகராக பொறுப்பு பெற காரணமாக இருந்ததும் இந்த மதுரை மேற்கு தொகுதிதான். தற்போது மதுரை மேற்கில் சுமார் 1 லட்சத்து 33 ஆயிரம் ஆண்கள், 1 லட்சத்து 38 ஆயிரம் பெண்கள் என மொத்தம் 2 லட்சத்து 71 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.
2011ம் ஆண்டு தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக மாவட்டச் செயலர் கோ.தளபதியை விட கூடுதலாக சுமார் 38 ஆயிரம் வாக்குகள் பெற்றார் செல்லூர் ராஜூ. 2016 தேர்தலில் கோ.தளபதியை விட கூடுதலாக சுமார் 16 ஆயிரம் வாக்குகள் பெற்ற நிலையில் 2021 தேர்தலில் திமுக வேட்பாளர் சின்னம்மாளை விட செல்லூர் ராஜூ 10 ஆயிரம் வாக்குகளே கூடுதலாக பெற்றிருந்தார். மூன்று தேர்தல்களிலும் செல்லூர் ராஜூவின் வெற்றி வித்தியாசம் படிப்படியாக குறைந்து வந்தாலும், 2001 சட்டமன்றத் தேர்தல் முதல் தற்போதுவரை அனைத்து பொதுத்தேர்தல்களிலும் அதிமுகவே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொகுதியில் முக்குலத்தோர், பிள்ளை, செட்டியார், யாதவர், ஆதி திராவிடர் சமூகத்தவர்களும் குறிப்பிடத்தக்க அளவில் வசித்து வருகின்றனர். இவர்களில் முக்குலத்தோர் 30 சதவீதம் பேரும், பிள்ளைமார் சமூகத்தினர் 15 சதவீதம் பேரும் இருப்பதால் இவர்கள்தான் வெற்றியை தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளனர். அங்கன்வாடிகள், நியாய விலை கடை கட்டிடங்கள், குடிநீர்த் தொட்டிகள், சிறிய பாலங்கள், மாடக்குளம் கண்மாய் சீரமைப்பு, கொடிமங்கலம் வைகையாற்றில் தடுப்பணை, காளவாசல் மேம்பாலம், மதுரை - முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர்த் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செல்லூர் ராஜூ தொகுதிக்கு கொண்டு வந்த திட்டங்கள் ஆகும்.
இருப்பினும் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற தொகுதி மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாமலே உள்ளது. 25 ஆண்டுகால தோல்வி வரலாற்றை முடிவுக்கு கொண்டு வர திமுகவும், வாக்கு வித்தியாசம் தொடர் சரிவை கண்டுவரும் நிலையில் நான்காவது முறையாக வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று அதிமுகவின் செல்லூர் ராஜுவும் எதிரும் புதிருமாக களத்தில் நிற்கும் அதே சமயம், நாம் தமிழரும், புது வரவான தவெகவும் தங்கள் பங்குக்கு களத்தை பரபரப்பாக்கி வருகின்றன.

