சீமானுக்கு வந்த குட் நியூஸ்.. நெருக்கடிக்கு இடையில் பூத்த மலர்.. ஆர்ப்பரிக்கும் நாதக தம்பிகள்
பல தேர்தல்களில் போட்டிபோட்டு வந்த நாம் தமிழர் கட்சிக்கு அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறது தேர்தல் ஆணையம். என்ன நடக்கிறது? விரிவாக பார்க்கலாம்.
2010ம் ஆண்டு மே.18ம் தேதி சீமானால் உருவாக்கப்பட்ட நாம் தமிழர் கட்சி, கடந்த 16 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசியலில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளது. துவக்கத்தில் தேர்தல் அரசியலில் கால் வைக்காத சீமான், 2016ம் ஆண்டு தேர்தல் அரசியலில் இறங்கினார். அப்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்தே களம் கண்ட நிலையில், 1.06 சதவீத வாக்குகளை மட்டுமே அக்கட்சி பெற்றது. அதைத்தொடர்ந்து, 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 3.87 சதவீத வாக்குகளைப் பெற்றது. தொடர்ந்து, 2021 சட்டமன்ற தேர்தலில் 6.89 சதவீத வாக்குகளையும், 2024 சட்டமன்ற தேர்தலில் 8.19 சதவீத வாக்குகளையும் பெற்றது.
இத்தனை ஆண்டுகளில் தனித்தே களம் கண்டாலும், கடைசியாக சந்தித்த மக்களவைத் தேர்தலில் 8 சதவீத வாக்குகளைப் பெற்றதால், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக உருவெடுத்தது நாம் தமிழர் கட்சி. குறிப்பாக, கடந்த சில தேர்தல்களில் முத்திரை பதித்த விவசாயி சின்னம் பறிபோன நிலையில், புதுதாக கொடுக்கப்பட்ட மைக் சின்னத்தில் போட்டியிட்டு குறிப்பிடத்தகுந்த வாக்குகளைப் பெற்றது கவனம் ஈர்த்துள்ளது.
இப்படியான சூழலில், கடந்த சில மாதங்களாக சீமான் மீது அதிருப்தி தெரிவிக்கும் மாவட்டச் செயலாளர்கள் பலர் அக்கட்சியில் இருந்து விலகிய வண்ணம் இருக்கின்றனர். நிர்வாகிகளும் விலகி வருகின்றனர். இத்தகைய சூழலில், பெரியார் குறித்து சீமான் சர்ச்சையாக பேசியது பூதாகரமாக வெடித்துள்ளது. திராவிடர் கழகத்தினர் உட்பட பலரும், பல மாவட்டங்களில் சீமானுக்கு எதிராக புகார் கொடுத்து வருகின்றனர். இப்படி, அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உயர்ந்த சில மாதங்களிலேயே சீமானும், நாதக தம்பிகளும் நெருக்கடியைத்தான் சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான், நாம் தமிழர் கட்சியை தமிழ்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையமே கடிதமாக இன்று வெளியிட்டுள்ளது. பல நெருக்கடிகளுக்கு மத்தியில், தேர்தல் ஆணையத்தில் இந்த அறிவிப்பு நாதக தம்பிகளுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. காரணம், இனி வரும் தேர்தல்களில் விரும்பிய சின்னத்தை கேட்டு பெறலாம். அதன்படி, எதிர்வரும் ஈரோடு கிழக்கில் விவசாயி சின்னம் மீண்டும் நாதகவுக்கு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் கூடியுள்ளது.