வெனிசுலா | மீண்டும் அதிபராக பதவியேற்ற நிகோலஸ் மதுரோ!
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று, வெனிசுலா. இந்நாட்டில் கடந்த ஆண்டு ஜூலை 28ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில், தற்போதைய அதிபர் நிகோலஸ் மதுரோ மீண்டும் போட்டியிட்டு வென்றார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் எட்மண்டோ கோன்சலஸ் உருட்டியா களமிறங்கி இருந்தார். இவர்களுக்கிடையே நேரடி போட்டி நிலவியது.
வெனிசுலாவில் 25 வருடங்களாகவே பொதுவுடமைவாத பிஎஸ்யுவி கட்சி ஆட்சியில் உள்ளது. முதலில், மறைந்த ஹியூகோ சாவேஸ் அதிபராக இருந்த நிலையில், 2013-ல் அவர் புற்றுநோயால் மறைந்தார். அதன்பிறகு, நிகோலஸ் மதுரோ அந்நாட்டின் அதிபரானார்.
இந்நிலையில், வெனிசுவேலாவில் மூன்றாவது முறையாக நிகோலஸ் மதுரோ அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், நிகோலஸ் மதுரோ 53.67 சதவீத வாக்குகளை பெற்று மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அவர் இன்று (ஜனவரி 10) முறைப்படி பதவியேற்க இருப்பதாகக் கூறப்பட்டது. அறிவிக்கப்பட்டபடியே, இன்று வெனிசுலாவின் அதிபராகப் பதவியேற்றுக் கொண்டார்
இதன்மூலம் அவர் 2031 வரை ஆட்சியில் இருப்பார். முன்னதாக, அவர் பதவியேற்றபோது அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடி மகிழ்ந்தனர். அதேநேரத்தில் அவருடைய இந்தப் பதவியேற்பை முன்னிட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைப் பாதுகாப்புப் படையினர் சில மணிநேரம் தடுப்புக் காவல் வைத்திருந்தனர். முன்னதாக, தேசிய தேர்தல் கவுன்சிலின் முடிவுகள் மோசடியான ஒன்று என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தது. இதனால் தேர்தலுக்குப் பிறகு, அதிபரின் வெற்றியை எதிர்த்து அந்நாட்டில் மோதல் வெடித்தது குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் 8 வெனிசுலா அதிகாரிகள் மீது அமெரிக்காவின் பைடன் அரசாங்கம் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்வதற்கான வெகுமானத்தையும் $25 மில்லியனாக அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.