விஜய் போடும் புது ஸ்கெட்ச்.. மாறி மாறி தாக்கும் அதிமுக, தேமுதிக.. எம்.ஜி.ஆர்.. விஜயகாந்த் கேம் என்ன?
தவெகவின் மதுரை மாநாட்டு மேடையில், எம்ஜிஆர், விஜயகாந்துக்கு விஜய் புகழாரம் சூட்டிய நிலையில், அவர்களை தலைவர்களாக கொண்ட கட்சிகள் கடுமையாக எதிர்வினையாற்றத் தொடங்கியுள்ளன. அதிலும், அதிமுக ஒரு பக்கம் அட்டாக் செய்ய, தேமுதிகவோ எங்கள் வீட்டுப் பிள்ளை என்று கூறிக்கொண்டே தாக்குகிறது.. உண்மையில் விஜய்யின் கணக்கு என்ன? எம்ஜிஆர் விஜயகாந்த்தோடு தன்னை ஒப்பிட்டு பேசினாரா.. என்ன நடக்கிறது என்று விரிவாக பார்க்கலாம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, மதுரை பாரபத்தியில் கடந்த 21ம் தேதி நடந்தது. லட்சக்கணக்கானோர் பங்கேற்ற இந்த மாநாட்டில் 35 நிமிடங்களுக்கு உரையாற்றிய விஜய், திமுக, அதிமுக, பாஜக என்று அனைத்து கட்சிகளையும் கடுமையாக விமர்சித்தார்.
முன்னதாக, கடந்த ஆண்டு விக்கிரவாண்டியில் நடைபெற்ற கொள்கை விளக்க மாநாட்டில், ஐந்து கொள்கைத் தலைவர்களை அறிமுகப்படுத்திய விஜய், இந்த மாநாட்டு மேடையில் அவர்களோடு, அண்ணா, எம்ஜிஆரின் படங்களையும் சேர்த்திருந்தார். மாநாட்டு மேடையில் சிகரமாக, அண்ணா, எம்ஜி.ஆரோடு மத்தியில் விஜய் நிற்பதுபோன்ற பதாகை இடம்பெற, வாகை சூடும் வரலாறு திரும்புகிறது என்ற வார்த்தைகள் இடம்பெற்றன. அதாவது, 1967ல் காங்கிரஸை வீழ்த்தி அண்ணா தலைமையிலான திமுக ஆட்சி மாற்றத்தை செய்தது போல, 1977ல் திமுகவை வீழ்த்தி எம்ஜிஆர் ஆட்சி மாற்றத்தை உருவாக்கியது போல, 2026ல் நானும் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்துவேன் என்று குறிப்பிட்டிருந்தார் விஜய்.
அவரது ஆக்ரோஷமான உரையில் அதுவும் இடம்பெற்றிருந்தது. அதே நேரம், மேடையில் பேசிய விஜய், சினிமா என்றாலும்.. அரசியல் என்றாலும் எனக்கு மிகவும் பிடித்தது எம்ஜிஆர்தான்.. அவருடன் பழகும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், அவரை மாதிரியே குணம் கொண்ட என் அண்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது.. மதுரை மண்ணில் கால் வைக்கும்போது அவரைப் பற்றித்தான் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.. அவரை மறக்க முடியுமா.. என்று புகழாரம் சூட்டினார்.
அதே சமயம் மாநாட்டுத் திடலில் விஜயகாந்த்தின் பதாகை ஏதும் இடம்பெறவில்லை. கட்சி சார்பாக சாலை ஓரங்களில் நிர்வாகிகள் வைத்த சில பதாகைகளில் விஜயகாந்த், விஜய் இருவரும் அடங்கிய ஃபோட்டோக்களை பார்க்க முடிந்தது. குறிப்பாக, எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக இப்போது யார் கையில் இருக்கிறது.. எந்த நிலையில் இருக்கிறது.. அப்பாவி அதிமுக தொண்டர்கள் பரிதவிக்கிறார்கள் என்றும் அதிமுக தலைமையான எடப்பாடியை மறைமுகமாக அட்டாக் செய்தார் விஜய்.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு திமுக, அதிமுக, பாஜகவை அட்டாக் செய்த நிலையில், அந்த மாநாட்டிற்குப் பிறகு அத்தனை கட்சிகளும் விஜய்யை தாக்கத்துவங்கியுள்ளன. முதல்வரை அங்கிள் என்று விளித்தற்கு திமுக அமைச்சர்கள் அட்டாக் செய்ய, யாராலும் எம்ஜிஆர் ஆகிவிடமுடியாது என்று அட்டாக் செய்கிறது அதிமுக. குறிப்பாக, மாநாடு முடிந்த அன்றைய தினமே, காஞ்சிபுரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பழனிசாமி மறைமுகமாக பதிலடி கொடுத்தார். அதிலும், எடுத்த உடனே எம்ஜிஆர் முதல்வர் ஆகவில்லை என்பதில் துவங்கி, சிலர் புரியாமல் பேசுகிறார்கள்.. சிலருக்கு தெரியவில்லை என்று, சிலர் சிலர் என அடுக்கு மொழியில் மறைமுக பதில் கொடுத்தார். அடுத்த நாளே, ஆர்.பி உதயகுமாரில் துவங்கி, மதுரை வட்டாரத்தைச் சேர்ந்த அதிமுக சீனியர் தலைகள் விஜய்யை தாக்கத் துவங்கினர். யாராலும் எம்ஜிஆர் ஆக முடியாது என்பதில் துவங்கி, ஒன்றரை வயது குழந்தை எங்கிடம் சண்டைக்கு வருவதா என்பது வரை நீண்டிருக்கிறது அதிமுகவின் விமர்சனம்.
இந்த நேரத்தில், விஜயகாந்த்திற்கு புகழாரம் சூட்டிய விஜய் குறித்த கேள்விக்கு, அவர் எங்கள் வீட்டு பிள்ளை என்று கூறி நகர்ந்தார் பிரேமலதா. ஆனால், அடுத்தடுத்த நாட்களில், யாராலும் விஜயகாந்த் ஆக முடியாது என்று பேசத்துவங்கியுள்ளார். இன்று பேட்டியளித்த பிரேமலதா, அன்பின் வெளிப்பாடாக அண்ணனாக விஜயகாந்த் குறித்து விஜய் பேசினார். ஒரு நாளும் யாரும் விஜயகாந்தாக மாறிவிட முடியாது. விஜயகாந்தின் வாக்குகளை விஜய் பிரிக்க நினைப்பதாக இருந்தால், மக்களும் ஏற்கமாட்டார்கள், தேமுதிகவினரும் பொருட்படுத்தமாட்டார்கள்.. என்று பேசியுள்ளார்.
நாலா புறமும் அரசியல் கட்சிகள் விஜய்யை தாக்கத் துவங்கியுள்ள இந்த நேரத்தில், மாநாட்டு மேடையில் எம்ஜிஆர், விஜயகாந்த் பெயர்களைச் சொல்லி விஜய் வகுக்கும் வியூகம் என்ன? அடுத்த எம்ஜிஆர், விஜயகாந்த் ஆக நினைக்கிறாரா விஜய்? விமர்சனங்களை எப்படி பார்க்கலாம் என்று பத்திரிகையாளர் சபீர் அகமதுவிடம் பேசினோம்.
அப்போது, “தமிழ்நாட்டில் புதிதாக யார் அரசியல் கட்சி தொடங்கினாலும், அவர்களால் பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர், எம்ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரை புறக்கணித்துவிட்டு அரசியல் செய்ய முடியாது. கடந்த கால ரெஃபரென்ஸ்களை கொண்டு வருவார்கள்.. எம்ஜிஆர், விஜயகாந்த் பெயர்களை விஜய் சொல்கிறார் என்றால், அதிமுகவின் வலிமையை காட்டுகிறது. அதிமுக, அதிமுக அனுதாபிகளிடம் இருந்து வாக்குகளை பெறும் முயற்சிதான்..
அவர்களை பின்பற்றுகிறேன் என்று சொல்வது, ஆதரவாளர்களை தன் பக்கம் இழுக்கும் யுத்திதான். எம்ஜிஆர் மருத்துவமனையில் இருந்தபோது திமுகவே அதை செய்தது. எங்களிடம் ஆட்சியை தாருங்கள்.. எம்ஜிஆர் மீண்டும் வந்தவுடன் ஆட்சியை ஒப்படைக்கிறோம் என்று கேட்டார்கள். இப்படியாக, அதிமுக தலைமையை விமர்சிக்காமல், அதிமுகவின் தொண்டர்களை இழுக்க முயல்கிறார்.. இதேதான் தேமுதிகவுக்கும்.. விஜயகாந்த் கட்சி தொடங்கியபோது தன்னை கருப்பு எம்ஜிஆர் என்று கூறிக்கொண்டார்.. இப்படியாக, அவர்கள் வழியில் செல்கிறேன் என்பது ஒரு யுத்திதான். உடனே, எம்ஜிஆர், விஜயகாந்த் ஆக முடியாது என்று கூறுவது, அரசியல் கட்சியினர் வைக்கும் விமர்சனம். அண்ணா என்பவர் ஒருவர்தான்.. எம்ஜிஆர் என்பது ஒருவர்தான்.. விஜயகாந்த் என்பவர் ஒருவர்தான்.. யாராலும் யாரும் ஆக முடியாது. அது கட்சிகளுக்கே தெரியும். எனினும், விஜய்க்கு ஆதரவு கூடிவிடக்கூடாது என்பதால் மட்டுமே, விமர்சிக்கிறார்கள்” என்று கூறி முடித்தார்.