அமெரிக்க வரிவிதிப்பின் எதிரொலி.. இந்தியாவின் முக்கிய அறிவிப்பு..! என்னதான் நடக்கிறது?
இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பிற்கு எதிர் நடவடிக்கையாக, அந்நாட்டிற்கான அஞ்சல் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய தபால் துறை அறிவித்துள்ளது. ரஷ்யா - உக்ரைன் பிரச்னையை காரணம் காட்டி, வரி மேல் வரியாக அமெரிக்க வரி விதித்த நிலையில், இந்தியாவின் நடவடிக்கை கவனம் ஈர்த்துள்ளது.
அஞ்சல் சேவைகளை நிறுத்தி வைத்த இந்தியா..
ரஷ்யா - உக்ரைன் இடையே நடைபெறும் போரை காரணம் காட்டி, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை குறிவைத்து வரி விதித்து வருகிறது அமெரிக்கா. 50 சதவிகித வரி என்பது பெரிய அளவில் பிரச்னைக்குரிய விஷயமாக இருக்கும் நிலையில், அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக, தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அஞ்சல் சேவை மூலம் அனுப்பப்படும் 800 டாலர் வரை மதிப்புள்ள பொருட்களுக்கு அளிக்கப்பட்டிருந்த வரிவிலக்கை அமெரிக்க அரசு விலக்கிக் கொண்டதைத் தொடர்ந்து, அந்நாட்டுக்கான அஞ்சல் சேவையை இந்தியா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. 800 டாலர் வரை மதிப்புள்ள சர்வதேச அஞ்சல் பொருட்களுக்கான வரி விலக்கு 2025, ஆகஸ்ட் 29 முதல் திரும்பப் பெறப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்திருந்தது. இருப்பினும், 100 டாலர் வரையிலான பரிசுப் பொருட்களுக்கு, தொடர்ந்து வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்படும். அமெரிக்க அரசின் உத்தரவையடுத்து, அமெரிக்காவிற்குச் செல்லும் விமான நிறுவனங்கள் 2025, ஆகஸ்ட் 25-க்குப் பின் அஞ்சல் மூலம் சரக்குகளை ஏற்க இயலாமையை வெளிப்படுத்தியுள்ளன.
மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு 2025, ஆகஸ்ட் 25 முதல் அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அனைத்து வகையான அஞ்சல் பொருட்களின் முன்பதிவையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க இந்திய அஞ்சல் துறை முடிவு செய்துள்ளது. அதே சமயம், விலக்கு அளிக்கப்பட்ட மதிப்பிலான பொருட்களுக்கான சேவை தொடரும் என தெரிகிறது. அனைத்து பங்குதாரர்களுடனும் ஒருங்கிணைந்து, சூழ்நிலையை அஞ்சல் துறை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. விரைவில் சேவைகளை இயல்பாக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தச் சூழ்நிலைகள் காரணமாக அமெரிக்காவிற்கு அனுப்ப முடியாத பொருட்களை, அனுப்ப ஏற்கனவே முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் தபால் கட்டணத்தைத் திரும்பப் பெறலாம். வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு அஞ்சல் துறை ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதோடு, அமெரிக்காவிற்கு முழு சேவைகளையும் விரைவில் தொடங்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதாக உறுதியளித்துள்ளது.