விஜய்க்கு பதிலடி கொடுத்தாரா கமல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ.. இதுதான் பின்னணியா?
திமுக மேடை ஒன்றில் பங்கேற்று பேசிய மநீம தலைவர் கமல்ஹாசனின் வீடியோ வைரலாகியுள்ளது. அதில் அவர் பேசியது, தவெக தலைவர் விஜய்க்கு மறைமுகமான பதிலடிதான் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.. என்ன பின்னணி.. விரிவாக பார்க்கலாம்.
திமுக மாணவர் அணி சார்பில் 'எங்கள் கல்வி, எங்கள் உரிமை' என்ற தலைப்பில் மாநிலக் கல்விக் கொள்கை தொடர்பான உரையாடல், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.
அப்போது பேசிய கமல்ஹாசன், “இன்று என்னை பல பெயர் சொல்லி அழைக்கிறார்கள். அது எல்லாமே எனக்கு பொருந்தும். நான் எல்லா வேஷமும் போட்டு இருக்கிறேன். எனக்கு நீ வேஷம் கட்ட தேவையில்லை. நான் வேஷம் கட்ட சொல்லி டைரக்டும் செய்திருக்கிறேன். சரித்திரம் வேறு, புராணம் வேறு என்று புரிந்தவர் யாம்” என்று பேசினார். அவரது உரையில், பல்வேறு விடயங்களை குறிப்பிட்டிருந்தாலும், இந்த பேச்சு தவெக தலைவர் விஜய்க்கான பதிலடிதான் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
மதுரையில் நடைபெற்ற தவெகவின் இரண்டாவது மாநில மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், திமுக, அதிமுக, பாஜக என்று அனைத்து கட்சிகளையும் விமர்சித்தார். 35 நிமிடங்களுக்கு நீண்ட தனது உரையில், பல்வேறு விடயங்களைத் தொட்டுப் பேசிய விஜய், தனது கொள்கை எதிரியான பாஜகவையும், அரசியல் எதிரியான திமுகவையும் கடுமையாக சாடினார். அப்போது, தான் ஒன்றும் மார்க்கெட் போன பிறகு அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை.. உச்சத்தில் இருக்கும்போதே படைக்கலனோடு அரசியலுக்கு வந்துள்ளேன் என்று பேசினார்.
அவரது இந்த பேச்சு, மநீம தலைவர் கமல்ஹாசனை விமர்சிக்கும் வகையில் இருந்ததாக கூறினர் அரசியல் நோக்கர்கள். அன்றைய தினமே அதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், என் பெயரை எங்காவது சொன்னாரா என்று கேள்வி எழுப்பியதோடு, address இல்லாத லெட்டருக்கு நான் பதில் போட முடியாது.. அவர் என் தம்பி என்று கூறி நகர்ந்தார்.
இந்த நிலையில்தான், நான் எல்லா வேஷங்களையும் கட்டிவிட்டேன்.. எனக்கு நீ வேஷம் கட்ட வேண்டாம் என்று கமல் பேசியது பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக, விஜய்க்கான மறைமுக பதிலடிதான் என்று ஆர்ப்பரிக்கின்றனர் கமலின் ஆதரவாளர்கள். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 7 மாத காலம் இருக்கும் நிலையில், அரசியல் களத்தில் வார்த்தைப் போர் இப்போதே தொடங்கியுள்ளது.