"பாஜக எதிரி என்பார்கள்.. அவர்களுக்காகவே களமிறங்கி இருப்பார்கள்" - திருமா குறிப்பிடுவது யாரை?
அமெரிக்காவின் 50 சதவிகித வரி விதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள திருப்பூர் உள்ளிட்ட நகரங்களை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்று, மத்திய அரசுக்கு எதிராக திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், திமுக மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினர். இந்த நிலையில், மேடையில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், அமெரிக்காவின் 50 சதவிகித வரி விதிப்பில் துவங்கி, அதானி அம்பானி மோடியின் நண்பர்கள் மட்டும் அல்ல பினாமிகள் என்பது வரை கடுமையாக விமர்சித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “சனாதன ஃபாசிசம் ஒருபுறம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான ஃபாசிசம் மறுபுறம்.. இந்த இரண்டு கொள்கைகளையும் கொண்டுள்ள மக்கள் விரோத சக்திகளை வீழ்த்தவே அண்ணன் தளபதி முக.ஸ்டாலின் தலைமையிலே கைகோர்த்து நிற்கிறோம். 2026ல் சட்டமன்ற தேர்தல் வர இருக்கிறது. இந்த தேர்தலில் யார் யாரையோ களமிறக்கி விடுகிறது பாஜக. அவர்களுக்கு இடையில் நேருக்கு நேராக உறவு இருக்காது.. எங்களுக்கு பாஜகவும்தான் எதிரி என்பார்கள். ஆனால், பாஜகவுக்காக களமிறங்கியிருப்பவர்கள் அவர்கள்.. யாரையும் மனதில் வைத்துச் சொல்லவில்லை.. அரசியலை புரிந்துகொள்ள சொல்கிறேன்” என்று முடித்தார்.
மேலும், எப்படியாவது தமிழகத்தில் காலூன்றிவிட வேண்டும் என்று பலபேரை பாஜக களத்தில் இறக்கி விடுவதாகவும், திமுக வெறுப்பை உமிழ்வதாகவும் பேசிய அவர், சனாதன சக்திகளை வீழ்த்துவதற்கு திமுக கூட்டணி வலிமையாக இருக்க வேண்டும் என்றும் பேசினார். அதோடு, பேச்சில் பலமுறை முதல்வர் ஸ்டாலினை, அண்ணன் தளபதி என்றும் அழுத்தமாகவே சொன்னார் திருமா. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி உருவானதில் தனக்கும் ஒரு பங்கு உண்டு என்று க்ளைம் செய்துகொள்ளும் திருமா, முதல்வரை அண்ணன் என்று சொல்வது வழக்கம்தான் எனினும், நேற்றைய அவரது குறிப்பிட்ட சில வார்த்தைகள் பேசுபொருளாகியுள்ளது.
விஜய்யின் முதல் மாநாட்டிற்கு முன்பு வரை, வாழ்த்து கூறியவர், அதற்குப் பிறகான நிகழ்வுகளில் கடுமையாக சாடியதோடு, திரைத்துறையில் மார்க்கெட் போன பிறகு அரசியலுக்கு வருகிறார்கள் என்றும் விமர்சித்தார். விஜய்யின் இரண்டாம் மாநாட்டையும் விமர்சித்தார். ”மாநாட்டில் நடிகர் விஜய் பேசிய கருத்துக்களில் தெளிவான பார்வை இல்லை. அவர் அரசியல் குழப்பம் மிகுந்து இருக்கிறது..” என்று பேசி நகர்ந்தவர், இப்போது பேசியிருக்கும் கருத்து விஜய் மீதான நேரடி விமர்சனம் என்றே விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
2019ம் ஆண்டில் இருந்தே திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது. இந்த நிலையில், ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று ஆஃபர் கொடுத்தாலும், திமுக கூட்டணியில் இருந்து வெளிவர மாட்டோம் என்பதையே திருமாவின் பேச்சு காட்டுவதாக கூறுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.