"எனக்கும் சில விருப்பு வெறுப்புகள் இருக்கத்தான் செய்யும்" - அனுஷ்கா | Ghaati
அனுஷ்கா - கிரிஷ் கூட்டணியில் தெலுங்கில் உருவாகியுள்ளது `காட்டி' திரைப்படம். இது செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் தொலைபேசி வாயிலாக பேட்டிகளை அளித்துள்ளார் அனுஷ்கா. அப்பேட்டியில் படம் பற்றியும், தான் ஏன் வெளியே வருவதில்லை என்பது பற்றியும் பேசி இருக்கிறார்.
`காட்டி' படத்தில் நிறைய சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கிறீர்கள், அது கஷ்டமாக இருந்ததா? எனக் கேட்கப்பட, "கஷ்டப்பட வேண்டும்தானே. கதாப்பாத்திரத்திற்கு தேவையான விஷயம் என்றால் அதை செய்தாக வேண்டும். நான் அதற்காக 100 சதவீதம் என் உழைப்பை கொடுத்திருக்கிறேன்" என்றார்.
`புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜூன் கதாப்பாத்திரமும், `காட்டி' படத்தில் உங்கள் பாத்திரமும் ஒற்றுமை மிக்கதாக இருக்கிறது. இரண்டு படங்களையும் க்ராஸ் ஓவரில் எதிர்பார்க்கலாமா என்ற கேள்விக்கு "அதை சுகுமாரிடம்தான் கேட்க வேண்டும். ஆனால் இந்த யோசனை நன்றாக உள்ளது" என்றார்.
நீங்களும், பிரபாஸும் மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்புகிறார்கள், அது நடக்குமா? எனக் கேட்கப்பட, "எனக்கும் அதில் விருப்பம் இருக்கிறது. ஆனால் ஒன்று மட்டும் உறுதி பாகுபலிக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கிறோம் என்றால், அதற்கு தகுந்தது போல அழுத்தமான கதை அமைய வேண்டும். அப்படியான கதை அமைந்து, பிரபாஸுக்கும் பிடித்தால் நடக்கும்" என்றார். அதன் தொடர்ச்சியாக பாகுபலி படக்குழுவுடன் தொடர்பில் இருக்கிறீர்களா எனக் கேட்டதும், "ஆம். அவர்கள் ஒரு Get Together வைத்திருந்தார்கள், என்னால் அதில் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால் பாகுபலி படக்குழுவுடன் இணைந்து ஒரு ஆவணப்படத்தில் பணியாற்றி இருக்கிறேன். அது விரைவில் வெளிவரும்" என்றார்.
இப்போதைய சினிமாவில் பெண்களை மையப்படுத்திய கதைகள் அதிகமாகவே வருகின்றன. ஆனாலும் ஏன் நீங்கள் இவ்வளவு தேர்ந்தெடுத்து நடிக்கிறீர்கள்? : "எனக்கு அது நடந்தது அருந்ததி படம் மூலம்தான். பெண்களை மையப்படுத்திய கதையில் நடிப்பது இப்போது பெரிய விஷயமல்ல. இனி ஆண், பெண் என்ற பேதமில்லை. நான் பல கதைகளை படிக்கிறேன். ஆனால் எனக்கு வரக்கூடிய கதைகள் அனைத்தும் எனது முந்தைய படங்களின் சாயலிலேயே இருக்கின்றன அல்லது என்னால் அக்கதைகளுடன் ஒன்ற முடியாத வகை கதையாக வருகிறது. ஆனால், இதற்கு முன் நான் நடித்த மிஸ் ஷெட்டி, இப்போது வர இருக்கும் காட்டி, நான் மலையாளத்தில் நடித்துள்ள படம் எல்லாம் எனக்கு மிகவும் பிடித்தன. அதனாலேயே நடித்தேன்" என்றார்.
அடுத்ததாக நீங்கள் மலையாளப்படத்தில் நடித்திருக்கிறீர்கள். அதைப் பற்றி ஏதேனும் சொல்ல முடியுமா? என்ற கேள்விக்கு "அந்தப் படம் முடிந்துவிட்டது. ஒரு நாட்டுப்புற கதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி இருக்கிறது. இந்தாண்டு இறுதியில் அப்படம் வரும் என எதிர்பார்க்கலாம். இது மிகவும் புதுமையான கதாப்பாத்திரம். மேலும் இப்படம் மலையாளத்தில் என் அறிமுகப்படம்" என்றார்.
மேலும் இப்பேட்டியில் ஏன் அனுஷ்கா வெளியே வருவதில்லை, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்ற கேள்வி முன் வைக்கப்பட,
அது என்னுடைய தனிப்பட்ட முடிவு. படத்தின் புரமோஷன்கள் மட்டுமல்ல, விருது நிகழ்வுகள், குடும்ப நிகழ்வுகள் என எங்குமே நான் செல்லவில்லை. சில உடல்நல பிரச்சனைகள் இருந்தது. கிடைத்த நேரத்தில் இரண்டு படங்களில் கவனத்தை செலுத்தினேன். அதில் ஒன்று `காட்டி', இன்னொன்று மலையாளத்தில் நடித்துள்ள படம். பாகுபலி படத்திற்கு பிறகு அடுத்தடுத்து படங்களில் நடிப்பதை சற்று குறைத்துக் கொண்டேன். அதே சமயம் சினிமாவில் என்ன நடக்கிறது என்பதில் கவனமாகவே இருந்தேன். இப்போது என்றில்லை, நான் ஆரம்பத்தில் இருந்தே ஒரு தனிமையான நபர்தான். அனுஷ்கா என்ற ஒரு பிரபலத்தை ரசிகர்கள் அறிந்து கொண்டது எல்லாம், என் வேலையின் மூலமாக மட்டுமே. என்னுடைய வேலையில் நான் நேர்மையாக இருந்தாலே போதும், ரசிகர்கள் என்னை மதிப்பார்கள் என நம்புகிறேன். வெளியே வருவதை பற்றி கூறினால், இப்போது என்றில்லை, நான் மிகவும் தனிமையான நபர் என்பது அவர்களுக்கு தெரியும். சில வருடங்களுக்கு முன்பு இது பற்றி கேட்கப்பட்ட போது கூட, அவை என் தனிப்பட்ட காரணங்கள், பொது வெளியில் விவாதிக்கும் விஷயம் இல்லை. மேலும் அது அவ்வளவு பெரிய விஷயமும் அல்ல எனக் கூறினேன். எது எப்படியானாலும், அனுஷ்கா என்ற தனிப்பட்ட நபருக்கும் சில விருப்பு வெறுப்பு இருக்கத்தானே செய்யும். ஆனால் எதிர்காலத்தில் நீங்கள் என்னை அடிக்கடி காணலாம்." என பதிலளித்தார் அனுஷ்கா.