’தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கூடாது..’ - திருமாவளவன் மாற்றுக் கருத்து
தலித் பிரச்சினை என்றால் திருமாவளவன் தான் பேச வேண்டும் என்று சொல்வதே சாதி புத்தி. ஏன் அதிமுக பேச கூடாதா? அவர்களுக்கு அந்த பொறுப்பு இல்லையா. திராவிட அரசியலுக்கு எதிரான முன்னெடுப்பு சமூகநீதிக்கு எதிரானது, திமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையே முரண்கள் இருக்கலாம், ஆனால் சமூகநீதி என்ற ஒற்றை புள்ளியில் இணைந்து இருக்கிறோம் என திருமாவளவன் பேசியுள்ளார்.
பணி நிரந்தரம் செய்யக்கூடாது..
சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், அமைச்சர் சேகர் பாபு, இயக்குனர் பாக்கியராஜ்,இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன், எந்த தளத்தை தொட்டாலும் அங்கே சிறுத்தைகளின் பங்களிப்பு மகத்தானது. வெறும் அடைமொழிகளுக்காக நாம் இந்த களத்தில் நிற்கவில்லை, விளிம்பு நிலை மக்களின் விடுதலைக்காக உறுதியோடு போராடுகிறோம்.
குப்பை அல்லுபவர்களை பணி நிரந்தரம் செய்து நீங்கள் குப்பையை மட்டுமே அல்லுங்கள் என்று சொல்வதில் உடன்பாடு இல்லை. அவர்களின் தரம் உயர வேண்டும். இது தான் மாற்று சிந்தனை.
குப்பை அல்லுபவர்களின் பிள்ளைகள் தான் குப்பை அல்ல வேண்டுமா? இந்த தலைமுறை அந்த தொழிலை செய்தால் அடுத்த தலைமுறை உயர வேண்டும் என்பது தானே சமூகநீதி.
தலித் பிரச்சினை என்றால் திருமாவளவன் தான் பேச வேண்டும் என்று சொல்வதே சாதி புத்தி. ஏன் அதிமுக பேச கூடாதா? அவர்களுக்கு அந்த பொறுப்பு இல்லையா?
தூய்மை பணியாளர் பிரச்சினைக்கு முதலில் சென்றது திருமாவளவன் தான். அங்கு என்ன பிரச்சினை என்று கூட தெரியாதவர்கள் இதில் திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள். இதில் நாம் தெளிவோடு எதிர்வினை ஆற்றாமல் கருத்தியலில் உறுதியாக இருக்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.
2 சீட்டுக்காக அங்கே இருக்கிறீர்கள்..
தொடர்ந்து பேசியவர், பீகார் தேர்தல் வாக்களர் திருத்த நடவடிக்கை எவ்வளவு முக்கியமான பிரச்சினை என்பதை நாம் உணர வேண்டும். வாக்கு தி்ருட்டு கும்பலை பற்றி இங்கு யாரும் பேசுவதில்லை.
ஏன் இரண்டு சீட்டுக்காக அங்கே இருக்கிறீர்கள், அதிமுகவில் 20 சீட் தருவார்கள் என்று பரப்புகிறார்கள். நாங்கள் எத்தனை சீட்டு வாங்க வேண்டும் என்று முடிவு செய்ய நீங்கள் யார்? யாராலும் விலை பேச முடியாது, யாராலும் மதிப்பீடு செய்ய முடியாது, அது தான் நாங்கள், காரணம் நாங்கள் அம்பேத்கரின் பிள்ளைகள்.
மதசார்பற்ற சக்திகள், மதசார்பு சக்தி என இரண்டு பேருக்கான பிரச்சினை என்பதை நாம் மக்களிடையே எடுத்து செல்ல வேண்டும்.
இந்த கூட்டணி மிக வலிமையாக இருக்கிறது. கண்ணுக்கெட்டிய தூரத்தில் இந்த கூட்டணியை வீழ்த்த எதிரிகள் இல்லை. திமுக விற்கு எதிரான நகர்வுகளை திமுக பார்த்து கொள்ளும். நமக்கு எதிராக அவதூறாக கடுமையான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன, அதற்கெல்லாம் எதிர்வினை ஆற்ற வேண்டாம். திராவிட அரசியலுக்கு எதிரான முன்னெடுப்பு சமூகநீதிக்கு எதிரானது. கூட்டணி கட்சிகளுக்கு இடையே முரண்கள் இருக்கலாம் ஆனால் சமூகநீதி என்ற ஒற்றை புள்ளியில் இணைந்து இருக்கிறோம் என பேசியுள்ளார்.