சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை.. முதல்வர் விஜய் நாளை தொடங்கி வைக்கிறார்.? ஏற்பாடுகள் தீவிரம்!
தமிழக சட்டப்பேரவையின் 17-வது முதல்வராக தவெக தலைவர் விஜய் கடந்த மே-10 ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்ற முதல்நாளே 200 யூனிட் இலவச மின்சாரம், போதைப்பொருள் தடுப்புப் படை உருவாக்கம் மற்றும் பெண்களின் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை உருவாக்கம் உள்ளிட்ட 3 கோப்புகளில் கையெழுத்திட்டிருந்தார்.
இத்திட்டங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றிருந்த நிலையில், மே 11-ம் தேதி சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படைக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. அதில், முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில், ஐஜி தலைமையில் 1 எஸ்.பி, 2 டி.எஸ்.பி மற்றும் 4 காவல் ஆய்வாளர்கள் இடம்பெறுவார்கள் எனவும் குற்றச் சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ள இடங்களை கண்காணித்து பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கில் இந்த திட்டம் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தசூழலில் தான், இந்த திட்டத்தின் தலைமை அதிகாரியாக ஐ.ஜி கே. பவானிஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இத்திட்டம் மே 29-ம் தேதியே தொடங்கப்படும் என முதலில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து, எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்த நிலையில், சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், இந்த திட்டத்தை மேம்படுத்துவதற்காக தொடக்கவிழா ரத்து செய்யப்பட்டதாகவும், விரைவில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்தசூழலில் தான், நாளை (ஜூன் 9) முதல்வர் விஜய் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைத் திட்டத்தை தொடங்கி வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், தொடக்கவிழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

