"திமுக என்ற கூட்டணி இப்ப இல்ல; ஸ்டாலின், EPS யார் கூறினாலும் தவறு.." தெளிவுபடுத்திய CPM சண்முகம்!
தமிழ்நாட்டில் திமுக என்ற கூட்டணி இப்போது இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் கருத்து தெரிவித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.
புதுக்கோட்டையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது சண்முகம், தவெகவுக்கு ஆதரவு நிலைப்பாடு என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவு, யாருடைய தூண்டுதலிலோ ஒப்புதலிலோ எடுக்கப்பட்ட முடிவு அல்ல.. சுயேட்சையாக எடுத்த முடிவு என்பதை தெளிவாக கூறிவிட்டோம். இன்னொரு கட்சியிடம் கேட்டு முடிவு எடுக்க வேண்டியதில்லை என்று மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார்.
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இல்லையா என்ற கேள்விக்கு தமிழ்நாட்டில் திமுக கூட்டணி மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி என்ற ஒன்று தற்போது இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல், தமிழ்நாடு நலன் சார்ந்த பிரச்னைகளில் ஒத்த கருத்துடைய பிரச்னைகளில் திமுகவுடன் போராடுவோம் என கூறியுள்ளோம் என்ற நிலைப்பாட்டில் தற்போதும் உறுதியாகவுள்ளோம் என்று மீண்டும் கூறியுள்ளார்.
மேலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி, 3 மாதங்களுக்குக் கூட தாங்காது என சொல்லக் கூடாது. மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி என யார் கூறினாலும் தவறு என்று கண்டித்துள்ளார்.
எல்லா வாக்குறுதிகளையும் முழுமையாக உடனே நிறைவேற்றிவிட முடியாது என்றும் 5 ஆண்டுகள் வரை காலம் உள்ளது என்றும் தெரிவித்திருக்கிறார்.
செய்தியாளர் ஒருவர் தவெக அலை என்று குறிப்பிட்டதால், இது தவெக அலை என்றால் 118 என்ற பெரும்பான்மையை எட்டியிருப்பார்கள் என தெரிவித்தார். இங்கு எதுவும் புதிதாக நடந்துவிடவில்லை என்றும் அதிமுகவின் அழிவுக்கு பாஜகதான் காரணம் என திட்டவட்டமாக கூறினார்.
