ஜெய்ஹிந்த் முழக்கத்திற்கு சொந்தக்காரர்! ஹிட்லரையே மன்னிப்பு கேட்கவைத்த தமிழர்; யார்இந்த செண்பகராமன்?
வீர முழக்கத்தை உருவாக்கிய, செண்பகராமன் யார், அவரது வீர பின்னணி என்ன என்பதை விவரிக்கிறது இந்த கட்டுரை...
செய்தியாளர் ராஜ்குமார் . ர
தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலின் 150-ஆவது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வந்தே மாதரம் பாடல் குறித்து, மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் பேசியிருக்கும் எம்.பி திருச்சி சிவா, "தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு இந்திய அளவில் அங்கீகாரங்கள் வேண்டும், அவர்களை இந்திய அளவில் கொண்டாட வேண்டும், CBSE பாடத்திட்டத்தில் அவர்களின் வரலாறு சேர்க்கப்பட வேண்டும்" என்று கோரிக்கை வைத்துப் பேசியிருக்கிறார். மேலும் வந்தே மாதரம் , ஜெய் ஹிந்த் என முழங்கும் பாஜகவிற்கு ஜெய் ஹிந்த் முழக்கத்தை உருவாக்கிய தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் செண்பகராமனை பற்றி தெரியுமா?.. என கேள்வி எழுப்பி செண்பகராமன் பற்றி உணர்ச்சி போங்க பேசியிருக்கிறார்.
உணர்ச்சிகளை கட்டி எழுப்பக்கூடிய " ஜெய் ஹிந்த்" எனும் வீர முழக்கத்தை உருவாக்கிய, செண்பகராமன் யார், அவரது வீர பின்னணி என்ன என்பதை விவரிக்கிறது இந்த கட்டுரை...
ஆங்கிலேயரர்களிடம் இந்தியா அடிமைப்பட்டிருந்த காலத்தில் , சுதந்திரம் வேண்டி பல இந்திய வீரர்கள் எல்லைக்குள் போராடிக்கொண்டிருந்தபோது ஐரோப்பாவில் இருந்து தன் தாய் நாட்டின் விடுதலைக்காக வீர முழக்கமிட்டு, உலக நாடுகளின் கவனத்தை இந்தியாவின் மீது திரும்பிய வீரர் தான் செண்பகராமன். 1891ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி திருவனந்தபுரத்திலுள்ள புத்தன்சந்தை கிராமத்தில் பிறந்தவர் செண்பகரமான். தனது 14 வயதிற்குள் தமிழ், ஆங்கிலம், வரலாறு ஆகியவற்றோடு, சிலம்பம், வாள் வீச்சு போன்ற வீரக் கலைகளையும் கற்றுத் தேர்ந்தார். பாலகங்காதர திலகரின் வீர முழக்கத்தால் ஏற்பட்ட சுதந்திர உணர்வால் சிறுவயதிலேயே சுதந்திர முழக்கங்கள் முழங்கியவர். அப்போது பிறந்ததுதான் அந்த வீரம் மிக்க ஜெய் ஹிந்த் முழக்கம்.
சுதந்திரம் வேண்டி செயல்பட்டதால், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் வெறுப்பை பெற்று, ஜெர்மனிக்கு புலம்பெயர்ந்தார். அங்கு பெர்லின் பல்கலைக்கழகத்தில் தத்துவம், பொறியியல், ராஜ தந்திரம் ஆகிய கலைகளைக் கற்றுத் தேர்ந்து டாக்டர் பட்டம் பெற்றார். இந்தியா ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடப்பதை விரும்பாத செண்பகராமன் பல நாடுகளுக்குச் சென்று ஆங்கிலேயரின் அடக்குமுறை பற்றியும், இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றிய விளக்கமான சொற்பொழிவுகளை ஆற்றி ‘புரோ இந்தியா’ என்ற பத்திரிகையையின் மூலம் உலகரிய செய்தவர் செண்பகராமன். ஆங்கிலேயர்களை எதிர்த்து போராட "ஸ்ரீ பாரத மாதா வாலிபர் சங்கம் " என்ற ஒரு அமைப்பையும் உருவாக்கினார்.
ஆங்கிலேயர்களை எதிர்த்து வெற்றி கொள்ள, ‘இந்தியன் நேஷனல் வாலண்டியர் கோட்ஸ்’ (F.N.A) என்ற படையை உருவாக்கினார். இவரின் செயல்திறத்தையும், அறிவையும் கண்டு ஜெர்மன் சக்கரவர்த்தி கெய்சரும், ஹிட்லரும் இவருடன் நட்பு கொண்டனர். அப்படி ஒரு முறை இந்தியா சுதந்திரமாக செயல் படவேண்டும் என்று ஹிட்லரிடம் இவர் சொன்ன போது , இந்தியர்கள் சுதந்திரமாக செயல் பட தகுதியற்றவர்கள் என்று ஹிட்லர் கூறியதும், ஹிட்லரை எதிர்த்து பேசியதோடு அவர் பேசியது தவறு எனக்கூறி மன்னிப்பு கடிதத்தை தர சொல்லி, வாங்கியவர் செண்பகராமன். ஹிட்லர் முதன்முதலாக ஒருவரிடம் மன்னிப்பு கேட்டது செண்பகராமனிடம் என்று சொல்லப்படுகிறது. 1914-இல் முதலாம் உலகப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்த போது உலகப் புகழ் பெற்ற ‘எம்டன் நீர் மூழ்கிக் கப்பல்’ மூலம் ஜெர்மனியில் இருந்து வந்து சென்னை ஜார்ஜ் கோட்டையில் குண்டை தூக்கிப் போட்டு, ஆங்கிலேயர்களின் எண்ணெய் கிடங்குகளை அழித்துவிட்டுச் சென்றார்.
ஆங்கிலேயர் ஆட்சியினை எதிர்த்து இந்தியர்களே தங்களை வழி நடத்துகின்ற, போட்டி அரசை 1915- ல் ஆப்கானிஸ்த்தானில் நிறுவினார். இந்த அரசின் வெளிவிவகாரத் துறை அமைச்சராக செண்பகராமன் செயல்பட்டார். 1931ம் ஆண்டு லட்சுமி பாய் என்ற பெண்ணை ஜெர்மனியில் திருமணம் செய்தார். பின் ஹிட்லரயே மன்னிப்பு கேட்கவைத்த சம்பவம் ஹிட்லரின் நாஜிகளுக்கு பொறாமையை ஊட்ட செண்பகராமனுக்கு விருந்து வைத்து அந்த உணவில் விஷத்தை கலந்து கொடுத்து விட்டனர். அதனால் விருந்து முடிந்து வீட்டுக்கு வந்த செண்பகராமன் படுக்கையில் விழுந்தார் நோய்வாய்ப்பட்டார்.
ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா சுதந்திரம் அடைய வேண்டும் என போராடிய வீரர் செண்பகராமன் 1934-இல் மே மாதம் 26ம் தேதி மரணித்தார்.
அவரது கடைசி ஆசையாக தனது குடுபத்தினரிடம் "எனது உயிர்தான் சுதந்திர இந்தியாவில் பிரியவில்லை, நான் இறந்த பிறகு எனது சாம்பலை இந்தியாவிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, சாம்பலின் ஒரு பகுதியை என் தாயாரின் சாம்பலைக் கரைத்த திருவனந்தபுரத்திலுள்ள கரமனை ஆற்றிலும் மீதியை நாஞ்சில் நாட்டு வயல்களிலும் தூவ வேண்டும்" என கூறியிருக்கிறார்.
அவரது கடைசி ஆசையை நிறைவேற்ற அவரது மனைவி 32 ஆண்டுகள் அவரது சாம்பலை பாதுகாத்து இந்தியா சுதந்திரம் அடைந்தபின் 1966- இல் செண்பகராமன் விரும்பியபடியே, அவரது சாம்பல், கரமனை ஆற்றில் கரைக்கப்பட்டு, நாஞ்சில் நாட்டு வயல்களில் தூவியிருக்கிறார். இந்தியா அடிமைத்தனத்தில் இருந்து மீண்டு சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும் என போராடிய சுதந்திர போராளி செண்பகராமனின் சாம்பலை இந்த சுதந்திர இந்தியா காற்றில் கரைத்துவிட்டு சென்றிருக்கிறது.

